அவருபேரு காஜா மொய்தீன் தெருஓரமா டெயிலர் கடை வைச்சிருந்தாரு
கிழிஞ்சதுணி மட்டும்தான் வரும் அதைத்தைப்பாரு. கிழிஞ்ச தையல் பிரிஞ்ச சட்டை உக்காருற எடத்துல கிழிஞ்சு போஸ்ட்பாக்ஸ்னுன்னு கிண்டல் பண்ணுற டவுசர் அப்புறம் பேண்டு
ரவிக்கை பாவாட வேட்டி போர்வை சேலன்னு எதைக்குடுத்தாலும் தைப்பாரு
எவ்வளவுன்னு கேட்டா குடுக்குறதக் குடுங்கம்பாரு . குடுக்குறத வாங்கிக்குவாரு
சண்டகிண்ட போடமாட்டாரு
அவரே கிழிஞ்ச லுங்கியும் சட்டையும் தான் போட்டிருப்பாரு. உன்னோட உடுப்ப தைச்சிப்போடவேண்டியதுதானன்னு ஆராவது கேட்டா இப்ப எந்த ஆபீசுக்குப்போகப்போறேன் இதுபோதும்பாரு
ஒனக்கு புதுசா எதுவும் தைக்கத் தெரியாதான்னு கேக்குறவுகளுக்கு அவர் சொல்லுற பதில் நல்லாத்தெரியும் நம்பித்தான் ஆரும் குடுக்கமாட்டீன்றாக
குடுத்தா நல்லாத்தச்சிக்குடுப்பேன்
இப்ப அதத் தைக்கிறதுக்கு ஆயிரம் கடை வந்துடுச்சு, டிப்ளமா படிச்ச்சிட்டு வந்து தைக்கிறாக. என்னாட்டம் கிழிஞ்சதுணியத் தைக்கிறதுக்குத்தான் ஆளு இல்ல
அதுதான் நமக்கு இதுபோதும்னு
இந்தத்தொழில் பண்ணுறேன் இதுல கெடைக்கிறதுவீட்டுல இருக்குற ஜீவன்களுக்கும் எனக்கும் வயித்தகழுவுறதுக்கு போதுமானதா இருக்கு ஆண்டவன் இதத்தான் எனக்குக்குடுத்துருக்கான்ம்பாரு
அவரோட சம்சாரம் மெகருன்னிசா அவரவிடப்பாவமா இருக்கும் ஆனா அது கிழிஞ்சிருந்தாலும் அழகாத்தைச்சித்தான் போட்டுருக்கும் பொம்பளையில்ல மானம் முக்கியமுல்லன்னு சொல்லும் வீடுகளுக்கு பூக்கட்டி க்கொண்டுபோய் விக்கும்
அவுகளுக்கு ஒரு மக நூரு செல்லமா வளத்தாக இம்புட்டுகஸ்ட்டத்துலயும் படிக்கவைச்சாக நல்லாப்படிப்பா
அவுக பள்ளிக்கொடத்துல ஒரு வாத்தியாரு
நல்லாச்சொல்லிக்குடுப்பாரு ஜோசப்பு வாத்தியாருன்னா எல்லாருக்கும் ரொம்பப்புடிக்கும் நல்லாச் சொல்லித்தருவாரு அவருதான் நூரு நல்லாப்படிக்கிறதைப்பாத்துட்டு
அதுக்கு தனியா செரமம் எடுத்துசொல்லிக்குடுத்தாரு நூரு நீ பேருல நூருமாத்திரமில்ல பத்தாவதுல மார்க்கும் நூறு எடுக்கனும்பாரு நூருசொல்லுவா நான் பேரக்காப்பாத்துவேன் சார்ன்னு
சொன்னமாதிரியே பத்தாவதுல நல்ல மார்க்கு எடுத்தா. பள்ளிக்கொடத்துல மொதமார்க்கு அந்தப்பள்ளிக்கொடத்துக்கு ஹெட்மாஸ்ட்டரம்மா பையனும் அதே பள்ளிக்கொடத்துலதான் படிச்சான் ஆனா அவன் சரியாப்படிக்கமாட்டான்
இந்த தையக்காரன்மக நல்லாப்படிக்குறதுல அந்தம்மாவுக்கு
பொகச்சலு +2 ல நூருவ சேத்துக்க பல பள்ளிக்கூடங்க போட்டிபோட்டுச்சு பள்ளிக்கொடத்து கரஸ்பாண்டண்டுமுத்தையா நூருக்கு சலுக அறிவிச்சாரு பீசு எல்லாரும்
20000 ஆயிரம் கட்டுற நேரத்துல ரெண்டாயிரம் ரூவா கட்டுனாப்போதும் னு
மொய்தீனுக்கு ரொம்பசந்தோசம் எப்பாடு பட்டாவது கட்டுறேன்னு சொன்னாரு
ஆனாக்கட்ட முடியல
ஹெட்மாஸ்ட்டரம்மா இதச்சாக்காவைச்சி
இருவதாயிரம் ரூவா கட்டுறதுக்கு அவனவன் போட்டிபோடுறான் ரெண்டாயிரம் கட்ட முடியலைன்னா டி சி வாங்கிட்டுப்போ
கிழிஞ்சதுணி தைக்கிறவுக பிள்ளைகளயெல்லாம் இந்த பள்ளிக்கொடத்துல சேத்தா இப்புடித்தான் பிச்சக்காரத்தனமா இருக்கும்ன்னு நூரக்கேவலமாத்திட்டுனாக
நூரால அதைதாங்க முடியல மறுநா பள்ளிக்கொடத்துக்குப்போகமாட்டீன்னுட்டா. மொயதீனும் மெகருன்னிசாவும் பள்ளிக்கொடத்துக்கு மகளக்கூட்டிட்டுப்போயி க்கெஞ்சுனாக ரெண்டுநாளு டயம் குடுங்க கட்டிடுறோம்னு ஆனா அதுக்கு அந்த ம்மா ஒத்துக்கல அப்ப ஜோசப்பு வாத்தியாரு நெலமையப்பாத்துட்டு நான் தறேன்ன்னு
சொல்லி பிரச்சனையத்தீத்துவைச்சாரு அதுக்குமேல அவரே டியூசன் எடுத்து நூரப்படிக்கவைக்கிறேன்னு சொன்னாரு
மொய்தீன் கையெடுத்துக்கும்புட்டாரு
+2 பரிச்ச எழுதி ரிசல்ட்டும் வந்துச்சு
நூரு 1186 மார்க்கு நிச்சயமா டாக்ட்டர் சீட்டு கெடைக்கும்ன்னு எல்லாரும் சொன்னாக
மொய்தீனுக்கு ஒரேசந்தோசம் எல்லாரும் வீட்டுல வந்து பாராட்டுனாக ஹெட்மாஸ்ட்டரம்மா மகன் 1080 மார்க்குதான் வாங்கிருந்தான் அவங்களால தாங்க முடியல
கரஸ்பாண்டண்டு முத்தையா நூருக்குப்பாராட்டு விழா ஏற்பாடு பண்ணிருந்தாரு நூரு படத்தை பெருசா பண்ணி மார்க்கையும்போட்டு பள்ளிக்கொடத்துக்கு முன்னாடி வைச்சாரு நூரோட எல்லாப்படிப்புச்செலவையும் அவரே ஏத்து கிறதா அறிவிப்பு செஞ்சாரு
எல்லாரும் நூரப்பாராட்டினாக கடைசில
நூரு பேசவந்தா. நான் இன்னைக்கி உங்கமுன்னாடி நிக்கிறதுக்கு நாளுபேரு காரணம் மொதல்ல எல்லா வாத்தியாரு டீச்சர்மாருக குறிப்பா என் தெய்வம் ஜோசப்பு அய்யா அப்புறம் எனக்கு சலுககுடுத்து படிக்கவைச்ச கரஸ்பாண்டண்டு அய்யா அப்புறம் முக்கியமா ஹெட்மாஸ்ட்டரம்மா அவங்க
என்னை அன்னிக்கி கிழிஞ்சதுணி தைக்கிற டெயிலர் மக ன்னு சொன்ன வார்த்தை என்ன வெறியாப் படிக்கவைச்சிச்சு. அப்புறம் எங்க அம்மா அப்பா அவங்களைப்பாக்கும்போதெல்லாம்
நாம நல்லா வரணும் அவருக்கு நல்லபேரவாங்கிக்குடுக்கனும்னுவெறி அதோட இல்லாம நானும் தைக்கத்தான் போறேன் அவரு இல்லாதவகளோட மானத்தை மறைக்க துணிய த்தச்சாரு. நான் சர்ஜனா தைப்பேன்
அப்ப எல்லாரும் எங்கம்மாவ
டாக்கடரம்மா ன்னும் அப்பாவ டாக்டரப்பான்னு சொல்லனும் அதை நான் கேட்டு ஆனந்தகண்ணீர்விடனும்னு சொன்னா
அதைக்கேட்டதும் மொய்தீன் மெகரூன்னிசா வோட கண்ணுல தண்ணி ஊத்த ஆரம்பிச்சது. ஜோசப் கண்ணத்தொடச்சிக்கிட்டாரு கரஸ்பாண்டண்டு ம் கண்ணத்தொடச்சாரு
யாரும் பாக்காத மாதிரி ஹெட்மாஸ்ட்டரம்மாவும் மக ன்னா இப்புடித்தான் இருக்கனும்னு சொல்லிட்டு கண்ணத்தொடச்சிக்கிட்டாக.
- அ.முத்துவிஜயன்