அவளுக்கு அன்று தலைகால் புரியவில்லை. மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். நமக்குள்ள இவ்வளவு திறமையா.? தன்னையே பாராட்டிக் கொண்டாள். இது தெரிந்தால் வீட்டில் உள்ள கணவன் மாமியார் மாமனார் எப்படிக் கொண்டாடு வார்கள் என்று எண்ணிப் புளகாங்கிதம் அடைந்தாள்.
ஏற்கனவே அவள் பார்த்திருக்கிறாள். ஒருநாள் அவள் வீடு இருக்கும் அதே தெருவில் காலேஜ் படிக்கிறபெண் இவளின் தோழி ஒரு வாரப்பத்திரிக்கையோடு வந்தாள் வீட்டுக்கு வந்து இவளிடம் “ அக்கா நான் எழுதிய ஜோக் ஒன்று இந்தப்பத்திரிக்கையில் வந்திருக்கிறது அதற்குச் சன்மானமாக 100 ரூ அனுப்பி யுள்ளார்கள் என்று சந்தோசமாகச்சொன்னாள்
அப்போது அங்கிருந்த இவளின் மாமியார் அவளை அழைத்து முத்தம் கொடுத்து
“ பொண்ணுன்னா இது பொண்ணு எம்புட்டுத்தெறமை பத்திரிக்கையில வார அளவுக்கு எழுதுற தெறமை சாதாரணமா ஆருக்கும் வந்துறாது இந்தத் தெறமை”
என்று சொல்லிவிட்டு வீட்டில் இருந்து கொஞ்சம் இனிப்பு கொண்டுவரச்சொல்லி அவள் வாயில் போட்டு
“இனிப்பான செய்திக்கி இனிப்பு ”என்று பாராட்டினாள். அவளும் மகிழ்ந்து
“ குடும்பம் நா இப்புடி இருக்கனும்” என்று பாராட்டிச்சென்றாள்
அது ஒரு சாதாரண ஜோக் அதையே அந்த அளவுக்குக்கொண்டாடியவர்கள் இந்தச்செய்தியை அறிந்தால் எவ்வளவு சந்தோசம் அடைவார்கள் என்று எண்ணி புலகாங்கிதம் அடைந்தாள்.
அவள் எழுதிய தொடர் கல்கி பத்திரிக்கையில் தொடராக வெளிவரும் அறிவிப்புடன் முதல் வாரத்தொடர் வெளி வந்திருந்தது. அடுத்தடுத்து பல வாரங்களுக்குத் தொடர்ந்து வரும் என்று அறிவிப்பும் செய்திருந்தார்கள்.
அந்தத் தொடர் வெளிவந்த பத்திரிக்கையை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு ப்போகும் வழியில் கொஞ்சம் இனிப்பும் வாங்கிக்கொண்டு விரைந்தாள் மனம் முழுசும் மகிழ்ச்சியோடு.
வீட்டிற்குள் நுழைந்து பார்த்தால் வீடு அமைதியாக இருந்தது
இவளின் மாமியார் முகம் சரியில்லை. இவள் ஏதோ பேசப்போக மாமியார் முகம் கொடுத்துப்பேசவில்லை. ஏதோ நடந்திருக்கிறது என்ன வென்று தெரியவில்லை என அவள் மனம் பயந்தது
அதற்குள் அவளின் கணவன் உள்ளே வந்தான். அவன் உள்ளே வந்ததும் மாமியார் சொன்னாள்
” உன் பெண்டாட்டி செஞ்சிருக்குற வேலையப்பாரு என்ன்னான்னு நீயே கேளு இதெல்லாம் ஒரு குடும்பப்பெண் செய்யிற வேலையா அவளோட அப்பனுக்குப்போன் போட்டு வரச்சொல்லு வந்து கையோட இவளைக் கூப்புட்டுட்டுப்போகச்சொல்லு”
இவளின் கணவன் கேட்டான்
“ என்னம்மா செஞ்ச அம்மா கோவப்படுற அளவுக்கு சொல்லு?’”
என்று குழப்பத்துடன் கேட்டான்
அதற்கு இவள் சொன்னாள்
“ தெரியல அவங்ககிட்டயே கேளுங்க இதுல எங்க வீட்ட வேற எதுக்கு இழுக்குறாங்கன்னு தெரியல”
என்றாள்.
அதற்குள் அந்தவாரக்கல்கி பத்திரிக்கையோடு வந்த மாமியார்
“ இந்தக்கருமத்தைப்பாரு என்னையப்பத்தி பத்திரிக்கையில் என்ன எழுதிருக்கான்னு ஒரு குடும்பப்பொண்ணு செய்யிற வேலையா இது இவ நம்ம குடுமபத்துக்குச் சரிவர மாட்டா அவ அப்பனை வரச்சொல்லி கையோட இவளை அவங்க வீட்டுக்கு அனுப்பிரு இந்த எழவு நமக்கு வேண்டாம் “ என்று கோபத்தோடு கத்தினாள்.
அதற்கு கணவன் என்ன சொல்கிறான் என்பதுபோல் அவனை இவள் பார்த்தாள், ஆனால் அவன் ஒன்றும் சொல்லாமல் நின்றான்.
இதுபோன்ற சமயங்களில்தான் கணவனின் ஆதரவை ஒரு பெண் எதிர்பார்ப்பாள் ஆனால் அது பொய்த்துவிடும்போது அவள் உடைந்து போகிறாள் அப்படித்தான் உடைந்து கண்களில் நீர்வழிய தலை குணிந்து நின்றாள். அவள் கணவன் ஒன்றும் சொல்லாமல் அவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
இவள் அவனைப்பின் தொடர்ந்து போகும் தைரியம் இழந்து கையறு நிலையில் கலங்கி நின்றாள்.அன்று இரவு முழுவதும் அந்தவீட்டின் வரவேற்பரையிலே கிடந்தாள் சாப்பாடு கிடைக்காது என்று தெரிந்தபின் வேறென்ன செய்ய அவளின் கணவனோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தான்
அன்று இரவு நரகமாக கண்ணீரோடு கடந்தது. வெளியே தள்ளிக் கதவைச்சாத்தவில்லை என்ற ஒரு ஆறுதல் இருந்தது
ஆனால் அதற்கான வேலை மறுநாள் நடந்தது. அவளின் அப்பா காலையில் புறப்பட்டு வந்திருந்தார் இரவு முழுவதும் தூங்காத அலுப்பு அப்பிக்கிடந்தது அவர் முகத்தில்.
அப்படி வந்த அவருக்கு ஒரு வாய் காப்பிகூடக் கொடுக்கவில்லை மாமியார் வந்ததும் வராததுமாய் அவரிடம் மாமியார் வெடித்தார்
“ இந்தாங்க ஒங்கபொண்ணு இந்தக்குடும்பத்துக்குச் சரிவர மாட்டா குடும்பப்பொண்ணு செய்யிற வேலையா செஞ்சிருக்கா என்னப்பத்தி கண்ணாபின்னான்னு பத்திரிக்கையில் எழுதுற அளவுக்கு வந்துட்டா இவ எங்களுக்கு வேணாம் எங்க பிள்ளைக்கி நாங்க வேற கல்யாணம் செஞ்சிக்கிறோம் நீங்க உங்க பொண்ணக்கூப்புட்டுப்போங்க”
“ அப்புடி என்னம்மா தப்புப்பண்ணிட்டா என் பொண்ணு சொன்னாத்தானே தெரியும்”
“ இவ கல்கில ஒரு தொடர் எழுதுறாளாம். அதுல வருகிற மாமியார் கொடுமைக்காரியாம் அந்தமாமியாருக்கு என் பெயரை வைச்சிருக்கா உங்க அருமை புத்திரி இது ஒரு குடும்பப்பொண்ணு செய்யிற வேலையா நீங்களே சொல்லுங்க சொல்றதுக்கு என்ன இருக்கு இது சரிவராது ஒங்க பொண்ண கூப்புட்டுக்கிட்டு எடத்தைக்காலி பண்ணுங்க”
அந்தசமயத்துல அவளோட அப்பா “ வாம்மா போகலாம் இந்த வெவஸ்தை கெட்ட குடும்பத்துல இருக்குறதும் ஒன்னு நரகத்துல இருக்குறதும் ஒன்னுதான் வா போகலாம்” என்று சொல்லவேண்டும் என நினைத்தாள்
ஆனால் நிலைமை வேறாக இருந்தது. அவர் கண்ணீர் வழிய அவளின் மாமியாரிடம்
“ அம்மா பொண்ணு ஏதோ தெரியாம செஞ்சிடுச்சு இந்த ஒரு தடவை மன்னிச்சிருங்க இனிமே அந்தமாதிரித் தப்பு நடக்காமப்பாத்துக்கிறேன் மீறி அப்படி நடந்தா நானே என் பொண்ண வெட்டிப்போட்டுறேன் இந்த ஒரு தடவை மன்னிச்சி ஏத்துக்கங்க “ என்று பரிதாபமாகச்சொன்னார்
இவளுக்கு தன் தலையில் ஏதோகழிவை ஊற்றியதுபோல இருந்தது
மாலை மாலையாகக் கண்ணீர் வழிந்தது
அப்போது மாமியார் சொன்னார்
“ பாருங்க நீங்க எவ்வளவு கெஞ்சுறீங்க இவ அரங்கம் புடிச்சமாதிரி திமிறா நிக்கிறதைப்பாத்தீங்களா அம்புட்டும் திமிறு வேற ஒன்னும் இல்லை இது சரிவராது கூப்புட்டுக்கிட்டுப்போங்க என் மகனுக்கென்ன ராஜா ஆயிரம் பொண்ணு கெடைக்கும்”
அப்பொழுது இவள் திருமணத்தின் போது நடந்தது நினைவுக்கு வந்தது இவளுக்கும் இவள் கணவனுக்கும் 10 வயது வித்தியாசம். இவள் ஒத்துக்கவே இல்லை வயசு வித்தியாசத்தால் அப்பொழுது இதே மாமியார் இவளிடம் வந்து “ கொஞ்சம் கூடத்தான் வயசு ஆனா நல்லவன் மா அவன் . நீ வா ராணிமாதிரி
வைச்சிக்காப்பாத்துவான்” என்று கெஞ்சியதும் பல இடங்களில் பெண் தேடி வயது அதிகமானதால் திருமணம் தடையாகி நின்றதும் கேள்விப்பட்டிருந்தாள் அப்பாவின் கெஞ்சுதலால் ஒத்துக்கொண்டதும் நினைவுக்கு வந்தது
இப்ப மாமியார் சொன்னாள்
”சரி நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சுறதுனால சொல்றேன் உங்க மகளை என்காலில் விழுந்து மன்னிப்பு கேட்கச்சொல்லுங்கள் அதுவும் போக இனிமே இந்த எழுதுற வேலையெல்லாம் தூக்கி சாக்கடையில் போட்டுட்டு ஒழுங்கா குடும்பப்பொண்ணா நடப்பேன் நு சத்தியம் செய்யச்சொல்லுங்க ஏத்துக்கிறேன்”
இவளின் அப்பா இவளைப் பரிதாபமாகப் பார்த்தார். இவளிடம் அப்போது சொன்னார் “அம்மா சொல்றமாதிரி செஞ்சிரும்மா அந்த எழுத்து கருமம் எல்லாம் நமக்கு வேணாம்மா. சொல்றதை செஞ்சி உன் வாழக்கையக் காப்பாத்திக்கம்மா உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் “ என்று சொல்லிவிட்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்
இவள் பிணம் போல் நடந்து சென்று மாமியார் காலில் விழுந்தாள் அப்போது அந்த நிமிசமே செத்துவிடலாம் போல் இருந்தது அவள் மேல் ஏதோ தண்ணீர் சிந்தியது போல் இருந்தது ஆமாம் அவளின் மாமியார் அவள்மீது தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்திக்கொண்டிருந்தார்
அப்போது மட்டும் எரிக்கும் சக்தி அவளது கண்களுக்கு இருந்தால் பார்வையாலே அவள் மாமியார் கால்கள் எரிந்து போயிருக்கும்
அப்பொழுது மாமியார் “ இதுவே கடைசியாக இருக்கட்டும் இனி ஒருமுறை இப்படி நடந்தால் உன் அப்பாவே என் காலில் விழுந்தாலும் ஒன்னும் நடக்காது ஒழிச்சிடுவேன் உன்னை” என்றாள்
அதன்பின் அவளின் கணவன் வந்து சமாதானப்படுத்தினான்
“ அம்மா இப்படித்தான் யார் சொன்னாலும் கேட்கமாட்டாங்க லூசு மாதிரி பேசுவாங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க அப்புறம் எல்லாம், சரியாகிவிடும் கவலைப்படாதே எனக்கு வேலை மாற்றல் ஆயிரும் நாம தனியாப்போயிறலாம்” என்றான்
அப்பொழுது அவள் கேட்டாள் “தனியாப்போனபின்னாடி நான் எழுதலாமா?”
அதற்கு அவன் ” அதை அப்பப்பாத்துக்கலாம் இப்ப எதற்கு அதெல்லாம்.” என்றான்
(இது ஒரு உண்மைச்சம்பவம் இப்பொழுது அவள் எழுதிக் கொண்டிருக்கிறாள் புனைப்பெயரில் பல கதைகளை ஒரு நல்ல எழுத்தாளராக )
அ.முத்துவிஜயன்