"இந்தாம்மா இந்த 20000 ஓவாய ஓம்புருசன் மூஞ்சில தூக்கிஎறி.. மீதியையும் கொண்டாந்து குடுப்பேன் சீக்கிரமா. அன்னைக்கி என்னா சொன்னாரு அவரு,
நான் பொசகெட்ட பயலா... பன்னாடையா அவர் சொன்னருன்னுதான டிப்ளமா படிச்சேன் அதுக்கும் வேலை வாங்கித்தர துப்புல்ல. தெனம் கழுவிக்கழுவி தெருவுல ஊத்த வேண்டியது ஊர்க்காலிமாடுன்னு ஏசவேண்டியது...
நானா போகமாட்டீன்னேன். வேலை கெடைக்கல போவல அம்புட்டுத்தேன்.
அதுக்காக தண்டச்சோறுன்னு திங்க வட்டி முன்னாடி ஒக்காருரப்பயெல்லாம் வசவு பாடுனாருல்ல. இனிமே அந்தப்பாட்டு பாடமுடியாது... வேண்ணா அவரையும் ரெஸ்ட் எடுக்கச் சொல்லு.. எல்லாத்தையும் சமாளிக்கிறேன்.. காச வாங்கிட்டு கறிக் கொழம்பு வைச்சி வை நான் ஒரு நடை மந்தக்கிப்போய்ட்டு வந்துறேன்"னு சவடாலா பேசினான் மகன்...
"டேய் ஒன்னோட நல்லதுக்குத்தான சொல் றாரு"ன்னு பலதடவை சமதானப் படுத்தியும் அவன் மொன அடங்கல. மொனைச்சிக்கிட்டே தான் கெடந்தான். அவர் உள்ளாற வந்தா இவன் வெளியே போய்ருவான்... அடுத்து வீட்டுக்குள்ள வாரப்ப வீட்டு எசமான் இருக்காரான்னு நக்கலாக் கேட்டுட்டு இல்லைன்னு தெரிஞ்சப் புறம் தான் உள்ளாற வாரது மத்த பொழு தெல்லாம் மந்தையில வாசகசாலையில அவனோட்ட வயசுப்பயலுக கூடத்தான் கெடக்குறதுன்னு இருந்தான்...
இவனோட்ட வயசுப்பயலுக வாரா வாரம் சனிக்கெழமை தோள்ல பேக்கை போட்டுக் கிட்டு முக்கா டவுசர் பனியன் போட்டுக்கிட்டு பெரிய செல்போன் காதுல பட் நு மாட்டிக் கிட்டு வாரப்ப எல்லாம் இவளுக்கு வகுத் தெரிச்சலா இருக்கும்.
"ஒன்னொன்னு எப்புடி இருக்கு நம்ம புள்ள மட்டும் ஏன் மந்தையில கைலி கட்டிக்கிட்டு பழைய சட்டைய போட்டுக் கிட்டு தலையக்கூட வாராமக் கெடக்கு"ன்னு நெனைக்கும் போது பெத்த வயிறு பத்திக்கிட்டு எரியும்...
அப்பனுக்கும் மகனுக்கும் அக்னி நச்சத்திரம் படத்துல பிரபு கார்த்திக்கு மாதிரி பாக்குறப்ப யெல்லாம் நெருப்பு பறக்கும்போது கண்ணு கசியும்...
"இப்ப திடீருன்னு காசக் கொண்டாந்து குடுத் துட்டு தெனாவட்டாப்பேசிட்டு போறானே அவரு என்னாத்தச்சொல்லப்போறாருன்னு தெரியலயே"ன்னு முந்தானய முறுக்கிக்கிட்டு ரோசன பண்ணிக்கிட்டுக்கெடந்தா...
மத்தியானம் ஒரு மணி. அவர் நடையில அந்த தேய்ஞ்சசெருப்பக்கழட்டிபோட்டுட்டு பட்டா சலை வந்துசட்டையக்கழட்டிசொவத்துல இருக்குற ஆணில மாட்டிட்டு, "எங்க அந்த ஊர்க்காலி மாடு வந்து தின்னுட்டுப் போயி ருச்சா?"ன்னு அவளைக்கேட்டுக் கிட்டே முத்தத்துல சிமெண்ட் தொட்டில இருக்குற தண்ணில கைகால் கழுவிட்டு கொடில கெடக்குற துண்டை எடுத்து மூஞ்சியத் தொடச்சிட்டு பாயவிரிச்சிப்போட்டு அதுல ஒக்காந்தாரு
அப்ப இவ’, "ஏன்யா நம்ம மகன் இந்தப் பணத்தை ஓன்கிட்ட குடுக்கச்சொன்னான்னு குடுத்தான்". னு சொன்னப்ப அதைக்கையில கூட வாங்காம க் கேட்டாரு அவர் "அவன எங்க?ன்னு...
நாஞ்சொன்னேன் "மந்தைக்கித்தே போயி ருக்கான் சாப்புட வந்துருறேன்னு சொன் னான்"னு .
"அந்த கருமத்தை அப்புடியேஅவன் கிட்டக்குடு அதை கையால தொட்டாலே பாவம்.. அவன் என்ன பண்ணிருக்கான்னு ஒனக்குத் தெரியு மாடி ?... நு கேட்டுட்டு கண்கலங்க என்னயப் பாத்தாரு...
நான் ஆடிப்போய்ட்டேன் பதட்டம் அதிகமாகி "என்னன்னு சொல்லுங்க?" னு கேட்டேன்
"ஊருக்குள்ள ஒரு கூட்டம் கெளம்பிருக்குடி வயசுப்பயலுகல வளைச்சி ஆசைகாட்டி வழிப்பறிக்கொள்ளைக்கிக் கூப்புட்டுப்போய் வேலைய முடிச்சா காசக்காமிக்கிறானுகடி அதுல தண்ணி பொண்ணுக எல்லாம் சப்ளை பண்ணி அவனுகள கெடுத்து வழிக்கிக் கொண்டா ரானுகடி. இவன அந்தக்கூட்டதுல பாத்தேன்..
நேத்து மூலக்கொத்தாலத்துல டவுனுக்குள்ள போய்ட்டு வந்த நம்ம அட்டக்கம்பெனி காரரை கத்தியக்காட்டி மெரட்டி வழிப்பறி பண்ணி ருக்கானுக. அவர் மூஞ்சில கத்தில கீரி தங்கச் செயின் மோதரம் வசூல் பண்ணிட்டு வந்த காசு எல்லாத்தையும் புடுங்கிருக்கானுக இருட்டுல அவருக்கு மூஞ்சி தெரியல.. இன்னிக்கி போலீஸ் ஸ்டேசன்ல கம்ளெயிண்ட் குடுக்கப்போறப்ப பாத்தேன்..
அதுல இவன் கை இருக்குடி.. இவனுகதான் அந்த கேங்கல இருக்குறானுக. உள்ளாற போய் களி திங்கப்போறான் பாத்துட்டே இரு எப்புடி இருக்கனுமுன்னு நெனச்சி வளத்தோம் இப்புடி குருத தேய்ச்சி கழுதயாபோனமாதிரி ஆயிட்டானேன்"னு மொகம் பொத்தி அழுதாரு
கொஞ்சநேரத்துல அவன் வந்தான். அவர் சொன்னாரு "உள்ள வராத அங்கயே நில்லுடா!" நு கோவமாச்சொன்னாரு. அவன் என்கிட்டக் கேட்டான் "என்னாவாம் ஒம்புருசனுக்கு?"னு
அவர் கேட்டார் "காசு எப்புடிடா வந்துச்சு ஒனக்குன்னு.?.. அவன் சொன்னான் "எப்புடி வந்தாலென்ன காசு காசுதான். நாய் வித்த காசு கொரைக்காது நல்லகாசு மணக்காது"ன் னான்.
"ஓங்கிட்ட வியாக்கியானம் கேக்கல நெசத்தச் சொல்லு நேத்து மூலக் கொத்தா லத்துல நடந்ததுல நீயும் தான இருந்த ?"...னு கேட்டார்
"ஆமா இருந்தேன் அதுல வந்த காசுதான் இது இப்ப அதுக்கென்ன. சும்மா கெடந்து ஓங்கிட்ட தண்டச்சோறு பன்னாடைன்னு திட்டு வாங்கி அந்த வெக்கங்கெட்ட சோறு திங்கி றதுக்குப் பதிலா என்ன வேண்ணாலும் செய்யலாம்... அந்த ரோசங்கெட்ட பொழப்பு எனக்கு த் தேவை யில்ல"ன்னான்
அவர்" ஒன் நல்லதுக்குத்தானடா சொல்றாரு நீ நல்லா இருந்தா எங்களுக்குத்தானடா சந்தோசம்.. உனக்கு ஏதாவதுன்னா மொதல்ல வருத்தப்படுறது நாங்கதானடா அதுக்கு ஒன்னத்திட்டி சரி பண்ணுற உரிமை கூடக்கெடையாதா? "ன்னு சொல்லும் போது எனக்கு அழுக பொத்துக்கிட்டு வந்துருச்சு...
அப்ப அவனும் அதெல்லாம் எனக்குத்தெரியும் இதுதான் என் வழின்னு முடிவாயிப்போச்சு. நல்லது கெட்டது எதுனாலும் நான் பாத்துக் கிறேன் நீங்க ஒங்க சோலியப்பாருங்க இனிமே நா வேற நீங்க வேறன்னான்...
அப்ப வந்துச்சே கோவம் அவருக்கு நேர வீட்டுக்குள்ளாற போய் ஒலக்கைய எடுத்துட்டு வந்து அவன கால்ல அடிச்சாரு "அய்யோ அம்மா"ன்னு அலறுனான்....
"அப்புடிப் போய் பொழைக்கிறத விட நொண்டியா வீட்டுல கெட நான் ஊத்துறேன் கஞ்சின்னு" அடிச்சாரு அவனால நிக்க முடியல கீழ வுழுந்தான்...
அப்ப அவர் சொன்னாரு "அதுக்கு உள்ள போனா வெளிய வரமுடியாதுடா. விடவும் மாட்டானுக அதுவும்போக இன்னிக்கி உன் பெயர் அதுல போடச்சொல்லி ஒங்க ஆளுக கோர்த்து விட்டுருக்கானுக. எனக்கு நம்பகரமானவரு ஸ்டேசன்ல இருந்து தகவல் கொடுத்துருக்காரு ஒன்னயக் காப்பாத்த எனக்கு வேற வழி தெரியல . ஒரு தடவ செயிலுக்குப்போயிட்டா அந்தப்பொதைகுழில இருந்து மீளவே முடியாதுடா...ஒங்க சித்தப்பா அப்புடித்தான்
அந்தக்கூட்டதுல போயி மாட்டிக்கிட்டு திருட்டு வழிப்பறி ந்னு போய் கடைசில கொலப்பழிக்கி ஆளாகி ரொம்பநாள் தலமறவா இருந்தான்.
அவன எங்கப்பா வீட்டுக்குள்ளயே சேக்கல. அவன் பண்னினதுக்கு எப்பப்பாத்தாலும் அவனத்தேடி போலீஸ் வீட்டுக்கு வர எங்கப்பா எனக்கும் அவனுக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு எழுதிக்குடுத்துட்டாரு
கடைசில அவன் காணாப்பொணமா ஆயிட்டான் தெரியுமா ஒனக்கு
புரிஞ்சி நடந்துக்க. எங்க உசிறு உனக்காகத்தான் . ஒனக்காக நான் என்ன வேண்ணாலும் செய்வேன் அது ஒன்ன நல்லபடியா வாழவைக்கிறதா இருந்தா..புரிஞ்சிக்கோடா,,,புரிஞ்ச்சிக்கோ" அழுதுகிட்டே சொன்னாரு..
அவன் வலில அழுதுகிட்டே சொன்னான். "சும்மா ஜாலிக்கா செய்வோம்னு சொன்னதை நம்பிப்போனேன் பா.. இப்புடியெல்லாம் ஆகும்னு தெரியாது"ன்னு அழுதான்....
எதாவது வந்தா ஒனக்குப்பதிலா நான் உள்ளாறபோறேன்...என் கதை முடிஞ்சிருச்சு உன் பொழப்பு பொசுங்கிறக்கூடாதுடா"ன்னு சொல்லிட்டு இருக்கும் போது வெளிய ஆரோ கதவைத்தட்டி கூப்புடுறமாதிரி இருந்துச்சு "சீக்கிரம் கால்ல வேட்டியக்கிழிச்சி கட்டுப் போடு"ன்னு சொல்லிட்டு வெளியே போய் பாத்தார் அங்க போலீஸ் நின்னுக்கிட்டு இருந்தாக.
கதவைதொறந்ததும் இவர் சொன்னார் அதுல சம்பந்தப்பட்டது நான் தான் என்னயகைது பண்ணுங்க இந்தாருக்கு நான் பறிச்ச 20000 ரூ பணம். நான் வாறேன் ஸ்டேசனுக்குன்னு சொன்னார்.
அவர் "ஒங்க மகன்?னு இழுக்க இவர் சொன்னார் " அவன் நேத்துகாலையில மரத்துல இருந்து கீழ விழுந்து காலொடைஞ்சி கெடக்கான்...பாருங்க"ன்னாரு....அவருக்கும் ஏதோ புரிஞ்சமாதிரி இருந்துச்சு... சரி வாங்கன்னு கூட்டிட்டுப்போனார்...
அதைப்பாத்து அவர் மகனுக்கு அழுக அதிக மாயிடுச்சு "அப்பா அப்பா"ன்னு வாய் பொத்தி அழுதான்...அவனப்புடிச்சி இழுத்து வீட்டுக் குள்ள கொண்டுபோன எனக்கும் அழுகைய அடக்கமுடியாம வாய்விட்டு அழுக ஆரம்பிச் சேன்...........அழுக நிக்கல அவனுக்கும்
அ.முத்துவிஜயன்