நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா? - மகா பெரியவா

By சரவணன்

கண்ணும்,காதும் சரியாக இயங்காத பக்தருக்கு,புராணங்கள் படித்துக் கரையேற ஆசை.--அவருக்கு பெரியவா சொன்ன வழிமுறை

(நைமிசாரண்யம் போகிற அன்பர்கள்,அங்குள்ள வியாஸகத்தியைக் கண்டுபிடித்து நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?)

ஒரு பக்தருக்கு விந்தையான குறைபாடுகள்!. காது கேட்காது,புத்தகம் படிக்கும்படியான பார்வையில்லை. எதிரில் வரும் மனிதர்கள் நிழலுருவங்களாகத் தெரிவார்கள்.

வயதான காலத்தில், அவருக்கு ஒரு தீவிரமான ஆசை ஏற்பட்டது. இராமாயணம், ஸ்ரீமத் பாகவதம்பகவத்கீதை, புராணங்கள் படித்துக் கரையேற வேண்டும், என்று ஒரு வெறியே வந்துவிட்டது. ஆனால், புத்தகத்தைப் படிக்க முடியவில்லையே?

பெரியவாளிடம், விண்ணப்பித்துக் கொண்டார் பக்தர்.

அந்தச் சமயத்தில், சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களைப் பார்த்து, "இவரோபுராணங்கள் படிக்கணும்ணு ரொம்ப ஆசைப்படறார். கண் பார்வை சரியில்லே.என்ன பண்ணலாம்?" என்று கேட்டார்கள். ஏற்றுக் கொள்ளும்படியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை.

"நைமிசாரண்யம்னு ஒரு க்ஷேத்திரம் இருக்கு தெரியுமா?"----பெரியவா.

"தெரியும்."---பக்தர்.

"அங்கே என்ன விசேஷம்?"---பெரியவா.

"அந்த இடத்திலேதான், ரிஷிகள் எல்லாரும், புராணங்களைக் கேட்டார்கள்.---பக்தர்.

"புராணங்கள் எழுதியது யாரு?"-- பெரியவா.

"வ்யாஸர்"----பக்தர்.

"அவர், புராணங்களை எழுதின இடம்னு ஒரு ஸ்தலம் இருக்கு.'வ்யாஸகத்தி'ன்னு பேர் சொல்லுவா.."

பண்டிதர்கள், ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். நைமிசாரண்யம் போய் வந்தவர்களுக்குக் கூடஅந்த இடம் பற்றி ஞாபகமில்லை. இந்த மாதிரி சின்ன - சின்ன ஆனால், ரொம்ப முக்கியமான சேதியெல்லாம் பெரியவாளுக்கு, எப்படி நினைவிருக்கிறது.?"

பெரியவாள், பக்தரை அருகில் அழைத்தார்கள்.

"குடும்பத்தோட நைமிசாரண்யம் போய், கொஞ்ச நாள் தங்கு. வியாஸர் புராணங்கள் எழுதின இடத்திலே, விழுந்து,விழுந்து நமஸ்காரம் பண்ணு. அப்புறம் உனக்கே எல்லாப் புராணங்களும் மனசிலே ஸ்புரிக்கும்"

இந்த மாதிரியெல்லாம் அனுபவ சாத்தியமான வழிகளைச் சொல்ல,பெரியவாளால் மட்டுமே முடியும்.

இனிமேல் நைமிசாரண்யம் போகிற அன்பர்கள், வியாஸகத்தியைக் கண்டுபிடித்து, நூறு நமஸ்காரங்கள் செய்து விட்டு வரலாம் இல்லையா?

கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
தட்டச்சு வரகூரான் நாராயணன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE