மனைவியிடம் சொல்லக் கூடாத ரகசியம்?

By செய்திப்பிரிவு

பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதிக்ககூடிய எந்த ஒரு விஷயத்தையும் பெண்கள் வெளியே சொல்ல மாட்டார்கள். உயிர் அடங்கும்போது அவர்களோடு அது எரியுண்டோ, புதையுண்டோ போகும்.

ஜெயகாந்தனின் 'அக்கினி பிரவேசம்' போல, சில ரகசியங்கள் அடிச்சி கேட்டாலும் பெண்களிடமிருந்து வெளியே போகாது. ஆனால் பெண்களிடம், குறிப்பாக மனைவிகளிடம் சொல்லக்கூடாத ரகசியங்கள் என்று சில இருக்கின்றனவாம்.

கி.மு 3 ம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர், பெண்கள், திருமணம், மனித வாழ்க்கை பற்றி பல கருத்துக்கள் சொல்லியிருக்கிறார். சில விஷயங்கள் வில்லங்கமானவை; இந்த காலத்துக்கு ஒவ்வாதவை. வில்லங்க வரிசையில் மனைவியிடம் பகிரக்கூடாத 5 விஷயங்கள்.

சம்பள கவர்:

தனது வருமானம் எவ்வளவு என்பதை சொல்லக்கூடாது.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம், மாந்தர் தம் சம்பளத் தனையது செலவு" என்று கணவனின் வருவாய்கேற்றார் போல அதிகமாக செலவழிக்கும் மனைவிகள் கி.மு மூன்றாம் நூற்றாண்டில் கூட வாழ்ந்திருக்கிறார்கள் போலும்..  

'சமயங்களில் வெள்ளம் குறையலாம்; ஆனால் செலவு குறையாது, ஜாக்கிரதை' என்கிறார் சாணக்கியர்.  தவிர 'வருவாயில் மனைவிக்கென்று கண்டிப்பாக ஒரு தொகையை ஆண் சேமிப்பாக ஒதுக்கி வைக்க வேண்டும்' எனவும் குறிப்பிட்டுள்ளார். அதையும் மனைவியிடம் சொல்லக்கூடாதாம்.

தனது பலவீனம்:

ஒருவரின் பலவீனம் மற்றவருக்கு தெரிந்தால் அதையே குறிப்பிட்டு அவமதிக்கவும், துன்புறுத்தவும் வாய்ப்புள்ளது.

அதிலும் மனைவியிடம் ஒருபோதும் சொல்லலாகாது.

சாணக்கியர் கூற்றுப்படி மனைவிக்கு தெரிந்தால், அதை மீண்டும், மீண்டும் குறிப்பிடுவார். இதனால் இல்லறத்தில் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும்.

கொடுத்த நன்கொடை

குழந்தைக்கு பள்ளியில் கொடுத்த நன்கொடையை சொல்லலாம். மற்றபடி எந்த நன்கொடை பற்றியும் மனைவியிடம் மூச்சு விடாமல் இருப்பது நல்லது. வீட்டு செலவுகளை சொல்லி பெரும்பாலும் அதை தடுக்கக்கூடிய மனநிலையில்தான் மனைவி இருப்பார். அவரிடம் விஷயத்தை பகிர்ந்தால், கொடுக்க நினைத்த கொடை தடைபடும்.

ஏற்பட்ட அவமதிப்பு:

ஐந்தில் இதுவே முக்கியம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
எந்த சூழலிலாவது தான் அவமதிக்கப் பட்டிருந்தால் ஆறுதல் தேடிகூட அதை மனைவியிடம் சொல்லக்கூடாது.

அவமானப்படுத்தப்பட்ட ஆண், பொதுவாகவே அதை நினைத்து குமறிக்கொண்டிருப்பார். மனைவியிடம் பகிர்ந்தால் சில நேரங்களில் அவர் அதை வைத்து கிண்டல் செய்து, நிலைமை இன்னும் மோசமாகிவிடும்.

அவன் அடிச்சிருந்தாலும் மூஞ்சி முகரையோட போயிருக்கும்; இப்ப தேவையில்லாம யூ டர்ன் எல்லாம் பண்ணி, டேபிளை நொறுக்கி, மூக்கை உடைச்சி, ரத்த களரியாக்கி ..

மோசமான விஷயம்

இதை இங்கே விவரித்தால் டாக்ஸிக் மதி என்று பதிவையே தூக்கிவிட கூடும். சனிக்கிழமை கோராவின் ஜூம் சந்திப்பில் விளக்கப்படும்.
இதெல்லாம் 2300 வருடங்களுக்கு முன்னர் அப்போதிருந்த வாழக்கை முறையையொட்டி எழுதப்பட்டவை..

கணவர்கள் காலத்துக்கேற்ப இவற்றை வெட்டியோ ஒட்டியோ மாற்றியமைத்து இல்லறத்தில் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE