குடிகாரன் சிறுகதை

By செய்திப்பிரிவு

திருமணம் ஆன நாளன்றே மித்ராவுக்கு நிம்மதி போயிருந்தது. பெற்றோர் பார்த்து வைத்த திருமணம் என்பதால் கணவன் ரகு தன்னை அழகாகப் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையுடன் அவள் வந்திருந்தாள்.

 

ஆனால் எல்லாம் ஒரு நாளிலேயே முடிந்து விட்டது என்றபோது,  அவளின் எதிர்ப்பார்ப்புக்கள் எல்லாம் தவிடு பொடியாகியிருந்தன.

 

முதலிரவில் மதுப் போத்தலுடன் அவன் இருப்பது தெரியாமல், ஆயிரம் ஆசைகளுடன் கையில் பாற் செம்புடன் உள்ளே சென்றவள், அவனின் கையில் இருந்த போத்தலைக் கண்டு அதிர்ந்தாள். 

 

அவளைப் பார்த்த ரகுவும் ஒரு மடக்குக் குடித்து விட்டுப் போத்தலை அருகில் இருந்த மேசை மீது வைத்தான். 

 

"ஆ...வா.மித்ரா...! இதென்ன பாலா? சரி மேசையில வச்சிட்டு வா....!"

 

மதுப்போத்தலைப் பார்த்தே நொருங்கிப் போயிருந்த மித்ராவுக்கு, அவனின் வார்த்தைகள் கோபத்தை வரவழைத்தன.

 

ஆனாலும் அடக்கிக் கொண்டு பாற் செம்பை மேசையில் வைத்தாள். 

பின்னர் பயத்தில் கால்கள் நடுங்க, அவனின் அருகில் வந்து அமர்ந்தாள். 

 

பக்கத்தில் வந்து அமர்ந்தவளைத் திரும்பிப் பார்த்து "மித்ரா...!" என்று ரகு அழைத்தபோது, அவனின் வாயில் இருந்து வந்த துர்நாற்ற நெடி, மித்ராவுக்குக்  குமட்டிக் கொண்டு வந்தது. அதனால் உடனேயே எழுந்து வெளியே ஓடினாள். 

 

பூட்டியிருந்த கதவை அவள் திறக்க முற்பட்ட சமயத்தில் அங்கு வந்த ரகு, அவளின் இடுப்பை வளைத்துப் பிடித்து அவளின் பின் கழுத்துக்குள் புதைந்தான். 

 

அவனின் பிடியில் சிக்கிக் கொண்ட மித்ரா, அவன் கணவனாகிப் போனதால் கத்த முடியாமல், "விடுங்க என்னை....! என்று கோபத்துடன்  சொன்னாள்.

 

"எப்படி விடுறது மித்ரா...?

இண்டைக்கு எங்களுக்கு முதலிரவு....! அது முடியாம எப்படி உன்னை விடுறது...? வா கட்டிலுக்கு....!"

 

சொல்லியவாறு  அவளைத் தள்ளிக் கொண்டு கட்டிலை நோக்கி நகர முற்பட்டான் ரகு. 

 

ஏற்கனவே குமட்டிக் கொண்டிருந்த மதுவின் நாற்றம், மித்ராவுக்கு வாந்தியைக் கொண்டு வர, அவனிடமிருந்து தப்ப வேண்டும் என எண்ணியபடி திரும்பி அவனின் முகத்தில் வாந்தி எடுத்தாள் .

 

அவள் எடுத்த வாந்தி, ரகுவின் முகத்தில் விழுந்ததால், ஒரு கணம் தடுமாறியவன், மித்ராவைப் பிடித்திருந்த கையைத் தளர்த்தினான். 

 

இதுதான் சந்தர்ப்பம் என எண்ணிய மித்ரா, அங்கிருந்த வேகமாக ஓடிக் கதவைத் திறந்து வெளியேறினாள். 

 

மகன் முதலிரவு அறைக்குள் சென்றதில் இருந்து அடுத்த வருடம் பேரனைப் பார்க்கப் போகிறேன் என எண்ணியிருந்த ரகுவின் தாயாருக்கு, மித்ரா ஓடி வந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது.

 

"என்ன பிள்ளை...? என்னாச்சு...?  

 

கேள்வி கேட்ட மாமியாரை எரித்து விடுபவள் போலப் பார்த்த மித்ரா,  எதுவும் பேசாது குளியலறை சென்று வாய் கொப்பளித்து விட்டு வந்தாள்.

 

அதற்குள் வரவேற்பறையில் மகனை உட்கார வைத்து வாந்தியைத் துவாயினால் துடைத்துக் கொண்டிருந்தாள் கண்ணம்மா.

 

சற்று நேரத்தில் குளியல் அறையிலிருந்து வந்து சேலைத் தலைப்பால் வாயைத் துடைத்துக் கொண்டபடி நின்ற மித்ராவைப் பார்த்த கண்ணம்மா, அவளின் மேல் சீறிப் பாய்ந்தார்.

 

"என்னடி நீ...புருசன் எண்டு பாக்காம  அவன்மேல சத்தி எடுத்திருக்கிறாய்...? இதுதான் உன்ர வீட்ட சொல்லிக் குடுத்ததோ? இதுதான் புருசனை மதிக்கிற லட்சணமோ...? ஏதோ நல்ல பிள்ளை எண்டு சொன்னாங்க..? அதை நம்பி என்ர பிள்ளையைக் கட்டிக் குடுத்திட்டன். சே...இப்படிக் கேவலமா இருப்பாய் எண்டு இப்பதான் தெரியுது....!"

 

வீட்டு வளர்ப்பைப் பற்றி கண்ணம்மா பேசியது, மித்ராவின் கோபத்தை இன்னும் அதிகரிக்கச் செய்தது .

 

தனது மகனின் பிழையைச் சொல்லாமல், தன்மேல் குறை கண்டுபிடித்த  கண்ணம்மாவுக்குப்

பதில் சொன்னாள் மித்ரா.

 

"இஞ்ச வாங்கோ...! உங்கட மகன் குடிகாரன் எண்டு எனக்குச் சொன்னனீங்களா...? ஆராவது முதலிரவில குடிப்பாங்களா  ..?குடிக்க மாட்டான் எண்டுதான் எனக்குச் சொன்னாங்க  ..! ஆனா...இஞ்ச குடிச்சுக் கொண்டு கிடக்கிறான்...!"

 

"ஓகோ...நாங்க புறோக்கரிட்ட தம்பி குடிப்பான் எண்டுதானே சொன்னனாங்க...? உனக்கு அவன் சொல்லாதது எங்களுக்குத் தெரியாது...! இப்ப என்ன குடிதானே...? ஊர்ல எவன்தான் குடிக்கேல்ல....?"

 

கண்ணம்மா சொல்லச் சொல்ல மித்ரா உடைந்து போய் அழ ஆரம்பித்திருந்தாள். தன்னை எல்லோரும் நன்றாக ஏமாற்றி இருப்பது அவளுக்குப் புரிந்தது. 

 

தனது வாழ்க்கை ஒரே நாளில் சீரழிந்து போய் விட்டதை அவளால் தாங்கிக் கொள்ள முடியாது இருந்தது. 

 

அப்போது அவளின் அருகில் வந்த மாமியார், "சரி சரி...ஏதோ தெரியாம நடந்திட்டு...! ஏதோ சமாளிச்சுப்  போ....போகப் போக உனக்குப் பழகிடும். ஆரம்பத்தில  இப்படித்தான் இருக்கும். நீதான் அவனைத் திருத்தி எடுக்கோணும். 

சரி...உ‌ள்ள போ...அவன அனுப்பி  வைக்கிறன்....!"

 

மாமியாரின் ஆறுதல் வார்த்தைகளில் அனுசரித்துப் போக வேண்டும் என்ற பொருளும் உள்ளடக்கியிருந்ததை உணர்ந்த மித்ரா  வெடித்தாள் .

 

"இப்பவே முழுக் குடிகாரனாக இருக்கிற  இவனைத் திருத்த முடியுமா. ..? இதெல்லாம் எனக்குச் சரிவராது...நான் அம்மா  வீட்ட போறன்...!"

 

அதுவரை அமைதியாக இருந்த ரகு, எழுந்து வந்து மித்ராவின் கன்னத்தில் ஓர் அறை விட்டு அவளைத் தள்ளி விட்டான். 

 

அதனால் அவனின் தள்ளலில் சற்றுத் தள்ளிப் போய்க் கீழே விழுந்தாள் மித்ரா.  அப்போது அவளின் அருகில் வந்த ரகு,

 

"என்னடி புருசனை அவன் இவன் எண்டுறாய். .? மரியாதை தெரியாத நீ எனக்கு வேண்டாம். போடி வெளியால...!"

 

சொல்லியவாறே கீழே விழுந்து கிடந்தவளின் தொடையில் ஒரு மிதி மிதித்தவன், தனது அறையை நோக்கி நடந்தான். 

 

ஏற்கனவே கீழே விழுந்த வலி,  அதன் பின் அவன் கன்னத்தில் அடித்த வலியும், தொடையில் மிதித்ததால் ஏற்பட்ட வலியும் மித்ராவைக் கதறி அழ வைத்திருந்தது. 

 

அதுவரை நேரமும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல மனம் படைத்த மித்ராவின் மாமனார், அவளின் அருகில் வந்து அவளின் கையைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார். 

 

"பிள்ளை...! உனக்கு இவன் சரிப்பட மாட்டான். இவன் மொடாக் குடியன். ஏதோ கலியாணம் ஆனா திருந்துவான் எண்டுதான் நானும் எதிர்பார்த்தன். ஆனா இவன் திருந்த மாட்டான். உன்னால இவனைத் திருத்தவும் முடியாது. நீ வா..நான் கொண்டு போய் உன்ர வீட்ட விடுறன்....!"

 

அந்த வீட்டிலும் ஒரு நல்ல உள்ளம் உள்ளதை அறிந்து அவருடன் கூட நடந்தாள்  மித்ரா.

 

தனது உந்துருளியில் மித்ராவை ஏற்றிய ரகுவின் தந்தையார், மித்ராவின் வீடு நோக்கிப்  புறப்பட்டார்.

 

ஒரே நாளில் வாழ்க்கையைத் தொலைத்து விட்ட கவலையை விடவும், ஒரு கொடூரக் குடிகாரனிடமிருந்து தப்பி விட்டேன் என்று எண்ணமே மித்ராவின் மனதினுள் ஓடிக் கொண்டிருந்தது......!

 

#குடிப்பவனுக்குக் குடும்பம்  எதற்கு??

முற்றும்.....!

 

நன்றி வசந்தமுடன் வசந்தன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE