தினமும் நான்கு காலப் பூஜைகளுக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடும் தீவிரமான சிவ பக்தன் ஒருவன் இருந்தான். சாதாரணமாக ஒரு கல்லைப் பார்த்தால்கூட, அது சிவலிங்கமாக அவனுக்குத் தெரியும். சிலைகளையும் படங்களையும் எங்கு பார்த்தாலும் அப்படியே நின்று பக்தியில் உருகுவான்.
இப்படிச் சிலைகளிலும் ஓவியங்களிலுமே பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமானை நேரில் தரிசனம் செய்ய வேண்டுமென அவன் ஆசைப்பட்டான். ஒரு சிற்பியிடம் சொல்லி, அற்புதமாகச் சிவபெருமான் சிலை ஒன்றைச் செய்து வாங்கி வந்தான்.
கிட்டத்தட்ட சிவனே உயிரோட்டமாக வந்திருப்பது போன்ற அற்புதமான சிலை அது. தன் வீட்டுப் பூஜையறையில் அந்தச் சிலையை வைத்துப் பூஜைகளை ஆரம்பித்தான். நீண்ட காலம் அவன் சிவபெருமானை நினைத்து தவம் செய்தான்.
காலங்கள் கடந்தும், சிவ பெருமானின் தரிசனம் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனது வேண்டுதல்கள் எதுவும் நிறைவேறவில்லை. இதனால் கோபமடைந்த அவன், தவத்தைக் கைவிட்டான். சிவபெருமானை வழிபடுவதை நிறுத்தினான். தான் ஆசையாகச் செய்து வாங்கிய சிவன் சிலையைத் தூக்கிப் பரண் மேல் வைத்தான்.
இவ்வளவு நாட்களைச் சிவபூஜையில் வீணடித்ததற்குப் பதிலாக பெருமாளை வணங்கியிருக்கலாம் என்ற எண்ணம் அவனுக்கு வந்தது. உடனே இன்னொரு சிற்பியைத் தேடிப் பிடித்து பெருமாள் சிலை ஒன்றைச் செய்து வாங்கினான். தன் வீட்டுப் பூஜையறையில் பெருமாள் சிலையை வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தான்.
பெருமாள் சிலையின் முன்பாக ஊதுவத்தி ஏற்றி வைத்தான். அதன் நறுமணம் அறை முழுவதும் பரவியது. அப்போதுதான் அவன் பரணில் இருந்த சிவபெருமான் சிலையைப் பார்த்தான். பெருமாளுக்கு ஏற்றிய ஊதுவத்தியின் நறுமணத்தைச் சிவன் சிலை நுகரக்கூடாது என்று, அந்தச் சிலையின் மூக்கைத் துணியால் இறுக்கமாக மூடினான்.
அடுத்த நொடியே சிவபெருமான் அவன் கண்முன் தரிசனம் தந்தார். வியந்துபோன அவன் சிவபெருமானை வணங்கிவிட்டு, “இத்தனை நாட்கள் நான் பூஜித்தபோது காட்சியளிக்காத நீங்கள் இப்போது காட்சி தருவது ஏன்?” என்று கேட்டான்.
இவ்வளவு நாட்கள் நீ இதை வெறும் சிலையாக நினைத்தாய். இன்றுதான் இந்தச் சிலையில் நான் இருப்பதை முழுமையாக நம்பினாய். நீ அப்படி உணர்ந்த அந்த நொடி, நான் உன் கண்முன் வந்துவிட்டேன் என்றார் இறைவன்.
எதிலும் முழுநம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிச் சரணடைந்தால், நிம்மதியும் நிறைவும் கிடைக்கும். பேருந்தில் போகும்போது, டிரைவர் யாரென்று தெரியாவிட்டாலும் நம்பிக்கையுடன் போகிறோம். ரயிலை இயக்கும் லோகோ பைலட் யாரென்று தெரியாது. அவர் திறமையை நம்பிப் பயணம் செய்கிறோம்.
ஏனெனில், நாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை. பொறுப்பை அவர்களிடம் கொடுத்துவிட்டோம், அவ்வளவுதான்! அதேபோல வாழ்வில் நம் கடமைகளைச் சிறப்பாகச் செய்துவிட்டு, நம் வாழ்வை இறைசக்தியிடம் ஒப்படைத்து விட்டு இயல்பாக இருக்கலாம். இதைச் சரணாகதி என்றும் சொல்லலாம். நம்பிச் சரணடைந்தால், மற்றவற்றை அந்தச் சக்தி பார்த்துக்கொள்ளும்.