பாவம் செய்தவர்கள் குறை உள்ள மனிதர்களாகப் பிறக்கிறார்களா ?

By செய்திப்பிரிவு

இராம் மனோகர் - ஞானிகள், மகான்கள் அப்படி சொல்லி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதானே ? நான் ஒரு மறுபிறவி நம்பிக்கை இல்லாத மதத்தை சேர்ந்த நண்பரிடம் கேட்டேன்.... உங்களுக்கு மறுபிறவி நம்பிக்கை இல்லை. ஒரு பிறவிதானென்றால் ஊனமுற்ற குழந்தைகளை கடவுள் ஏன் படைத்தார். கடவுள் கூட படைக்கும் பொழுது தவறு செய்து விட்டாரா ? என்று கேட்டேன். அவர் சொன்னார்.. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் கொடிய பாவம் செய்திருந்தால் ஊனமுற்ற பிள்ளைகள் பிறக்கும். எனினும் அவர்களை பராமரிக்க நமக்கு அதிக பெலனைத் தருவார் என்றார்.

இதில் லாஜிக் எங்கே இருக்கிறது ? யாரோ செய்த பாவத்திற்கு யாரோ துன்பப்படுவது எந்த வகையில் நியாயம் ? அதிக பலத்தை குறையுள்ளவர்களுக்கு கொடுத்தாலாவது அவர்கள் துன்பம் சற்று குறையும் !!! எனினும் இதில் முற்றிலுமாக விஞ்ஞானம் இல்லை என்று மறுத்து விடவும் முடியாது. குழந்தையின் தந்தை தீய பழக்கவழக்கங்களால் பலவீனமானவராக, சத்து குறைபாடு உள்ளவராக இருந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது தாய் செய்யும் சில பல தவறுகளாலும் குழந்தை பாதிக்கப்பட்டு விடுவதுமுண்டு.

எது எப்படியோ பாவம் செய்யாமலிருப்பது தனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நல்லதுதான். அதற்கு பாவ புண்ணியம் பற்றிய தெளிவு நமக்கு வேண்டும். உண்மையையே சொன்னாலும் அது மற்றவர்கள் மனதை காயப்படுத்தும் என்றால் அதை சொல்லாமலிருப்பது நல்லது. சொன்னால் அது கூட பாவம்தான். அதற்கும் தண்டனை உண்டு. அதே சமயம் நல்லது நடந்தால் அதற்குக் காரணம் நாம்தான் என்று கொக்கரிக்கிற நாம், தீயது நடந்தால் ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம், தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறோம்.

ஆனால், அது முடியாது. நடப்பதெல்லாம் நம் கடந்த காலச் செயல்களின் விளைவுதான். அதை எவ்வாறு சரி செய்வது ? நிகழ் காலத்தை முறையாகப் பயன்படுத்தினால் கடந்த காலத் தவறுகளை சீர் செய்து கொள்வதோடு, எதிர் காலத்தையும் நலமுள்ள, வளமுள்ள வாழ்வாக ஆக்கிக் கொள்ள முடியும் அவ்வளவுதான். இதைப் பற்றிப் பேசும் பொழுது பாரதியின் அருமையான பாடல் நினைவுக்கு வருகிறது.

''சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.''
''மேன்மேலும் நினைந்தழுதல் வேண்டா, அந்தோ!
மேதையில்லா மானுடரே, மேலும் மேலும்
மேன்மேலும் புதியகாற் றெம்முள் வந்து
மேன்மேலும் புதியவுயிர் விளைத்தல் கண்டீர்.''

கேள்வி - மறுபிறவி உண்டு என்றால் அதாவது மனிதன் தன் நன்மை, தீமைகளுக்கேற்ப வேறு விலங்காக,பறவையாகப் பிறவி எடுக்கிறானென்றால் உலகில் மற்ற உயிரினங்கள் அதிகமாகத் தானே இருக்க வேண்டும் ?

இராம் மனோகர் - மற்ற உயிரினங்கள் அதிகமாக இருந்த பொழுது மனிதன் குறைவாக இருந்தான். இப்போது மனிதன் பல கோடியாகப் பல்கிப் பெருகிய போது மற்ற உயிரினங்கள் இல்லாமல் போய் விட்டன. பொதுவாகச் சொன்னால் இது ஒரு சுழற்சி. ஆதியில் நுண்ணுயிரிகள், பிறகு ஒரு செல் உயிரினம், அடுத்து ஓரறிவு உயிரினம் என்று பரிணாமமடைந்து இறுதியில் ஆறறிவு பெற்ற மனிதனாக முற்றுப் பெற்றது. இப்போது பெரும்பாலான உயிரினங்கள் அழிந்துபட்டுப் போய் விட்டன. இனி கடைசியில் நுண்ணியிரிகளுக்கும் மனிதனுக்குமான போராட்டம் உச்சகட்டமாக நடக்கும். மனிதனும் அழிந்துபட்டுப் போவான். மீண்டும் நுண்ணுயிரிகள், ஒரு செல், ஓறறிவு, ஆறறிவு என்று மீண்டும் சுழற்சி நடக்கும். நீங்கள் இதற்கு பிரளயம், சிருஷ்டி, ஒடுக்கம் என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். நடப்பது, நடக்கப் போவது இதுதான்.

கேள்வி - இது தீர்க்கதரிசனமா ?
இராம் மனோகர் - இதற்கு தீர்க்கதரிசியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. கொஞ்சம் அறிவை உபயோகப்படுத்தினால் போதும்.

கேள்வி - அப்படியென்றால் மகான்கள், ஞானிகள் இதை ஏன் சொல்லவில்லை ?
இராம் மனோகர் - அதுதான் சொன்னேனே... !! நீங்கள் இதை பிரளயம், ஒடுக்கம், சிருஷ்டி என்று என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள் என்று.

கேள்வி - அப்படியானால் பகுத்தறிவு பெற்ற மனிதனால் இதிலிருந்து மீளவே முடியாதா ?
இராம் மனோகர் - அதற்காக அவன் செய்யும் முயற்சிகளே அவனை அழித்து விடும். இயற்கையின் சுழற்சியை யாராலும் மாற்ற முடியாது.

கேள்வி - அப்படியானால் நல்லவனாக இரு, அதைச் செய், இதைச் செய் என்றெல்லாம் ஏன் சொல்கிறார்கள் ? எப்படியும் அழிந்து போவது உறுதிதானே ?

இராம் மனோகர் - அதெல்லாம் வாழும் போது தானும், பிறரும், பிற உயிரினங்களும் நிம்மதியாக வாழ்வதற்குதான்.
கேள்வி - மனம் என்பது மாபெரும் சக்தி என்றால் மனிதன் ஏன் பலவீனமடைகிறான் ?

இராம் மனோகர் - அந்த மனமே பலவீனமடைந்து போவதால்தான் மனிதன் பலவீனமடைகிறான். மனம் என்றால் எண்ணம்தான். எண்ணம் என்றால் சலிப்பும், சலனமும்தான். எண்ணங்கள் குறையும் அளவு மனம் அமைதியடைந்து, பலமுள்ளதாக, மாபெரும் சக்தியாக ஆகி விடுகிறது. எண்ணங்கள் மனிதனைத் தளைக்கின்றன. எந்தவித தளைகளுமற்ற சுதந்திரமான நிலையில்தான் மனம் பலமுள்ளதாகத் திகழ்கிறது.

கேள்வி - எண்ணமில்லாமல் செயல்கள் எவ்வாறு நிகழும் ? வாழ்வதற்கு எண்ணமும், செயலும் அவசியமல்லவா ?
இராம் மனோகர் - எண்ணமே இல்லாமல் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எண்ணங்களைக் குறைத்துக் கொண்டு மனதை பலப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்லப்படுகிறது. உயர்ந்த எண்ணங்களும், நோக்கமும் உள்ளவிடத்து எண்ணங்கள் மட்டுப்படுகின்றன. மனம் தூய்மையுடன் விளங்குகிறது. எண்ணங்களை எல்லாம் மாசுபடுத்துவது ''நான்'' என்கிற ஆணவம்தான். நான் என்கிற எண்ணம்தான் மற்ற அனைத்து எண்ணங்களையும் தன் வசப்படுத்தி, மனதில் ஆசை, கோபம், பொறாமை, வஞ்சம் போன்ற தீய உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவு சலனம், சலிப்பு, மன அமைதியின்மையாகும்.

ஒரு ஞானியிடம் போய் ஒருவர் கேட்டார் ''நான் சுகமாக வாழ என்ன செய்ய வேண்டும்'' ? என்று. அந்த ஞானி சொன்னார் ''நீ வாழ வேண்டுமா ? எனில் நீ இப்பொழுதே சாக வேண்டும்'' என்றார். அந்த மனிதர் மிரண்டு போனார். ஆனால், இங்கே அவர் குறிப்பிடுவது நான் என்ற எண்ணம் செத்துப் போனால் நீ சுகமாக வாழலாம் என்பதையே. ஒரு விளக்கு இருக்கிறது. அதன் எண்ணெயும், திரியும்தான் நான் என்கிற அகந்தை. விளக்கு எரிய எரிய எண்ணெயும், திரியும் அழிந்து போவதுதான் அகந்தையின் அழிவு. அந்த அழிவின் பயனாக கிடைப்பது ஒளி பொருந்திய சுகமான வாழ்வு. நான் என்கிற அகந்தை அழியும் பொழுதுதான் வாழ்க்கை பயனுள்ளதாக ஆகிறது. நான் என்கிற அகந்தை அழியுமிடத்து எண்ணங்கள் குறைகின்றன. மனம் பலமுள்ளதாக விளங்குகிறது.

கேள்வி - அடிக்கடி பதட்டம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதற்கு தியானத்தால் தீர்வு ஏற்படுமா ? தியானத்தில் அமர்ந்தாலும் மனம் கண்டவாறு ஓடிக் கொண்டே இருக்கிறதே ?

இராம் மனோகர் - தியானத்தால் மட்டும்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். அதாவது தியானம்தான் எளிய வழி. மனம் ஓடட்டுமே !!? எங்கே ஓடும் ? எங்கே போனாலும் திரும்ப வந்துதானே ஆக வேண்டும் ? எனவே இது ஒரு தேவையற்ற கவலை. பதட்டம், படபடப்பு, பரபரப்பு, மன அழுத்தம் இல்லாத மனிதன் யாரும் இல்லை. அதைக் குறித்து கவலை கொள்வதுதான் மன அழுத்தத்தை நிலை பெறச் செய்து விடுகிறது. நம்மை டென்சனாக்குகிற விடயங்களில் இருந்து கவனத்தை வேறு பக்கம் செலுத்துவதற்கு பயிற்சி செய்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்தையும் பொறுமையாக செய்து பழக வேண்டும் அவ்வளவுதான்.

நன்றி:- திரு.இராம்.மனோகர்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE