விஷ்ணு புராணம்..!! (136)

By News Room

🌟 இரணியன் தனது புதல்வனான பிரகலாதனை நோக்கி இனிமேலாவது நான் கூறுவதைக் கேட்டு என்னிடத்தில் மதிப்பு கொண்டு அந்த நாராயணனை வழிபடுவதை விட வேண்டும் என்று கூறினார்.

🌟 அப்பொழுதும் பிரகலாதன் தன் தந்தையிடம், தந்தையே! நான் பலவிதமான துன்பங்களிலும், எண்ணங்களிலும் ஆள் பட்டபோது என்னை காக்க வந்தவர் அல்லவா! இந்த உலகத்தில் நாயகனான பிரம்மாண்டத்தின் அதி உன்னத நாயகனாக விளங்கக்கூடிய ஸ்ரீமந் நாராயணன் அவரை எவ்விதம் நான் வணங்காமல் இருக்க முடியும் அவரை எண்ணாமல் என்னால் ஒரு கணமும் இருக்க முடியாது என்று கூறினான்.

🌟 பிரகலாதன் கூற்றுக்களை கேட்டதும் இரணியனுக்கு மென்மேலும் கோபமானது அதிகரிக்க துவங்கியது. இந்த முறை தன்னுடைய கோபத்தை தன்னுடைய புதல்வன் இடத்தில் காட்டக்கூடாது என்பதில் நிலையாக நின்று இருந்த இரணியன் தன்னுடைய புதல்வன் உடைய மனதினை மாற்றிய அந்த நாராயணனை எவ்விதத்திலாவது அழிக்க வேண்டும் என்று எண்ணினார். நாராயணனை அழித்தால் தான் புதல்வன் நம்மிடத்தில் இருப்பான் என்பதையும் எண்ணினான்.

🌟 கோபத்தினை வெளிப்படுத்தாத இரணியன் தன்னுடைய புதல்வன் இடத்தில் பிரகலாதா நீ வணங்கக்கூடிய அந்த நாராயணன் எங்கெல்லாம் இருப்பார். அவர் இருக்கும் இடத்தை என்னிடத்தில் நீ காட்டுவாயாக என்று கூறினார்.

🌟 தனது தந்தை நாராயணன் இருக்குமிடம் எங்கு என்று கேட்டதும் பிரகலாதன் அவர் இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவர் இல்லாத ஒரு இடமும் இவ்வுலகில் இல்லை. அவரை வணங்கக்கூடிய பக்தர்களுக்கு ஏதாவது துன்பம் ஏற்படுகிறது என்றால் அவர் உடனே அந்த இடத்திற்கு வருகை புரிந்து பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை அழித்து அவர்களைப் பாதுகாப்பார் என்று கூறினார்.

🌟 ஓ! அப்படி என்றால் நீ வணங்கும் நாராயணன் நம்முடைய அசுர லோகத்தில் இருக்கின்றாரா? என்று இரணியன் வினவினார்.

🌟 அவர் நமது லோகத்திலும் இருக்கின்றார். அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கின்றார். சிறு துகள்களாக இருக்கக்கூடிய அணுவிலும் அவர் நிறைந்திருக்கின்றார். அவர் இல்லா இடம் என்பது எங்கும் இல்லை தந்தையே. மூன்று உலகங்களிலும் ஏன்? ஈரேழு பதினான்கு லோகங்களிலும் அவர் வாசம் செய்து கொண்டே இருக்கின்றார். அவர் அனைத்து பொருட்களிலும் நிறைந்திருக்கின்றார். அவர் எல்லா பொருட்களிலும், உயிர்களிலும் கலந்து இருக்கின்றார் என்று கூறினான் பிரகலாதன்.

🌟 இரணியனுடைய கூற்றுக்கள் யாவும் அவனுடைய அழிவிற்கு வழிவகுக்க துவங்கின. அவன் பிரம்மாவிடம் பெற்று இருந்த வரத்தின் அடிப்படையில் அவனுடைய அழிவின் காலத்திற்காக காத்துக்கொண்டு இருந்தார் ஸ்ரீமந் நாராயணன். ஏனென்றால் பிரம்மாவிடம் இரணியன் பெற்ற வரம் என்பது இரவும் அல்லாத, பகலும் அல்லாத பொழுதில், மானிடமும் மிருகமும் அல்லாத ஒருவனால் எமக்கு அழிவு என்பது நேரிட வேண்டுமென்று பெற்று இருந்தார் அல்லவா!

விஷ்ணு புராணம் தொடரும்..!!

.
மேலும்