அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி

By News Room

தலையில் அக்கமாலையுடன் பாலதண்டாயுதபாணி...!!

                

நீலகிரி மாவட்டத்தில் உள்ள எல்க் மலை என்னும் பகுதியில் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

நீலகிரி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன.

இத்தலத்தில் படியின் முடிவில் மூன்று நிலை ராஜகோபுரம் அமைந்துள்ளது. 

இங்கு மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையைப் போலவே 40 அடி முருகன் சிலை உள்ளது சிறப்பு.

அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் கருவறையில் உள்ள மூலவரான பாலதண்டாயுதபாணி, தலையில் அக்கமாலையும், இடக்கையில் தண்டமும் ஏந்தியவாறு காட்சியளிக்கிறார்.

மூலவர் சன்னதியின் பின்புற சுவரையொட்டி பெருமாள் அனந்த சயனக் கோலத்தில் காணப்படுவது தனிச்சிறப்பு.

நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலில் தோன்றிய முருகன் கோயில் இதுவாகும். இத்தல முருகன் கோயில் 7500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இது மலைப்பிரதேசம் என்பதால் ஏற்ற, இறக்கத்தில் தேரினை பக்தர்களால் கட்டுப்படுத்த முடியாது. எனவே தேரை டிராக்டரில் பூட்டி தேரோட்டம் நடத்தி வருகின்றனர்.

இங்கு எல்க் வகை மான்கள் அதிகமாக காணப்படுவதால், எல்க் குன்று இருந்த இடம் தற்போது எல்க் கில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் சித்தி விநாயகர், பத்ரகாளியம்மன், சொர்ண ஆகர்ஷண பைரவர், அஷ்டதசபுஜ துர்க்கை, ஜலகண்டேஸ்வரர் மற்றும் ஜலகண்டேஸ்வரி ஆகியோர் தனிச்சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

இத்திருக்கோயிலில் கிருத்திகை, கந்தசஷ்டி, வைகாசி விசாகம், பொங்கல், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

இங்கு தைப்பூசம் 10 நாளும், பங்குனி உத்திரத்தில் தேர்த்திருவிழாவும் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இத்தல முருகனை மனமுருக வேண்டிக் கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்கும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்திருக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் முடி இறக்கி காது குத்தியும், காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தும், கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

.
மேலும்