மகாவிஷ்ணு ஆதிசேஷனை படுக்கையாக ஏற்றுக்கொண்ட திருத்தலம்

By nandha

நாகம் (ஆதிசேஷன்) பெருமாள் குறித்து 

தவமிருந்து , பெருமாள் தனது படுக்கையாக ஏற்றுக் கொண்ட தலமான, 

திருமாலின் 108 வைணவத் திவ்ய தேசங்களில் சோழநாட்டு திருப்பதியான நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள

திருநாகை (சுந்தரவனம்)

நீலமேகப்பெருமாள்

(செளந்தரராஜப் பெருமாள்)

செளந்தரவல்லி தாயார் (கஜலட்சுமி) திருக்கோயில் வரலாறு.

நாகப்பட்டினம் மாவட்டம் என்றால் அனைவருக்கும் தெரியும். அந்த ஊரின் பெயரிலேயே நாக என்கிற சொல் இருப்பதே அவரின் புகழுக்குக் காரணம். மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொள்கிறார். அந்த ஆதிசேஷன் நாகங்களின் தலைவர் ஆவார்.

நாகப்பட்டினம் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகு நிரம்பிய ஆலயம், சௌந்தர்யராஜப் பெருமாள் ஆலயம். 

இங்கிருக்கும் சாரபுஷ்கரணிக்கு அருகே நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் எம்பெருமானைக் குறித்து தவம் இருந்தார். அவருக்கு மகாவிஷ்ணு காட்சி கொடுத்து அவரை எப்போதும் தான் சயனமாக ஏற்றுக்கொள்வதாக அருளினார். எம்பெருமானை ஆதிசேஷன் இத்தலத்தில் ஆராதித்த காரணத்தால் இத்தலத்திற்கு அவர் பெயராலேயே நாகப்பட்னம் என்கிற பெயர் வந்தது. பின்னாளில் நாகப்பட்டினம் என்று ஆகியது.

இந்த திருநாசௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலின் மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் திருவருள் புரிகிறார். மூலவருக்கு மேல் கருவறைக்கு மேல் சௌந்தரிய விமானம் உள்ளது.

உற்சவ பெருமாளின் பெயர் ஸ்ரீ சௌந்தரிய ராஜன், இக்கோயிலின் அன்னை ஸ்ரீ சௌந்தர்யா வள்ளி, உற்சவர் அன்னை ஸ்ரீ கஜலக்ஷ்மி. இத்தலத்தின் தீர்த்தம் சார புஷ்கரணி, ஆழ்வார்களின் மங்களாசாசனங்கள் பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களின் பட்டியலில் இத்தலம் 19வது திவ்யா தேசமாகும்.

இத்தல பெருமாளைத் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். பத்து பாக்களால் அவர் மங்களாசாசனம் செய்துள்ளார். ஒவ்வொரு பாடலிலும் அச்சோ ஒருவர் அழகியவா, அச்சோ ஒருவர் அழகியவா என்று இத்தலப் பெருமாளின் அழகில் மயங்கிய படி, கடைசி பாசுரத்தில் தான் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

எம்பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த ஆகிய மூன்று கோலங்களை இக்கோயிலில் தரிசிக்கலாம். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். இன்னொரு பெருமாள் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ரங்கநாத பெருமாள் காட்சி தருகிறார்.

நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம்.இக்கலியுகத்திலேயே பக்தியில் சிறந்த சாலிசுகன் என்னும் சோழன் இப்பெருமானை வழிபட்டு அருள் பெற்றான்.

மூலவர் - நீலமேகப் பெருமாள். கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். (Neelamega Perumal)

உற்சவர் - சௌந்தர்ய ராஜன். நாகை அழகியார்.

தாயார் - சௌந்தர்ய வல்லி, கஜலெட்சுமி.

பாடியவர் - திருமங்கையாழ்வார். (Thirumangai Azhwar)

தலவிருட்சம்- மாமரம்

தீர்த்தம் - சார புஷ்கரணி

புராணப் பெயர்கள் - சௌந்தர்ய ஆர்ணயம், சுந்தராரண்யம்  

பிரத்யட்சம்: நாகராஜன் (ஆதிசேடன்),துருவன், திருமங்கையாழ்வார், சாலிசுக சோழன்

மங்களாசாசனம்

பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்

திருமங்கையாழ்வார்

*திருநாகை பாசுரம்:

"பொன்இவர் மேனி மரகதத்தின்*  பொங்கு இளஞ் சோதி அகலத்து ஆரம்,*

மின்இவர் வாயில் நல் வேதம் ஓதும்*  வேதியர் வானவர் ஆவர் தோழீ,*

என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி*  ஏந்துஇளங் கொங்கையும் நோககுகின்றார்,* 

அன்னை என் நோக்கும் என்று அஞ்சுகின்றேன்*  அச்சோ ஒருவர் அழகியவா!  

_திருமங்கையாழ்வார்

நின்ற, இருந்த, கிடந்த திருக்கோலங்களில் நாகராஜனுக்கு எம்பெருமான் திருக்காட்சி கொடுத்தார் எனக் கூறப்படுகிறது. இங்குள்ள ரங்கநாத பெருமாள் சன்னதியில் மிகவும் அபூர்வமான முறையில் அமைந்திருக்கும் நரசிம்ம பெருமாள் திருவடிவைக் காணலாம்.

இந்த நரசிம்ம பெருமான் ஒரு கையால் பிரகலாதனைத் தாங்கி ஆசீர்வாதம் செய்கிறார். மற்றொரு கையால் அபய முத்திரையைக் காட்டுகிறார். மற்ற எல்லா கைகளாலும் இரணியனை வதம் செய்கிறார். பாவங்களை நிவர்த்தி செய்யும் கோயிலாக இத்தலம் விளங்குகிறது.

வீற்றிருந்த பெருமாள்” என்று அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் இங்கு காட்சி தருகின்றனர். நாகராஜனுக்கு மூன்று திருக்கோலங்களிலும் எம்பெருமான் ஸேவை சாதித்ததாகச் சொல்லுவர்.

*வரலாறு!

இத்தலத்தில் பெருமாளைக் குறித்துத் தவமியற்றினால் வேண்டியது கிட்டும் என்று உத்தானபாத மகராஜனின் குமாரன் துருவன் சிறுவனாய் இருந்த போது, நாரதர் மூலம் இத்தலத்தின் பெருமையை அறிந்தான். உலகமே தனக்கு அடிமையாக வேண்டும் எனப் பெருமாளைத் தரிசித்துத் தவம் செய்தான்.பெருமாள் கருடன் மீது அமர்ந்து பேரழகுடன் அவனுக்குத் தரிசனம் தந்தார். பெருமாளின் அழகில் மயங்கிய துருவன் தான் கேட்க இருந்த வரத்தை மறந்தான். இறைவனது அழகே பெரும் சுகம். எப்போதும் அதைத் தரிசிக்கும் பாக்கியம் வேண்டும் என்று கேட்டான்.  எம்பெருமானும் அவ்வண்ணமே அருளி இத்தலத்தில் அதே அழகுத் திருமேனியுடன் காட்சியளிக்கிறார்!

 

பெருமாள் தனது சௌந்தர்யமான கோலத்தை துருவனுக்குக் காட்டி அவன் தங்கியிருந்த தலத்திலேயே தங்கினார். சௌந்தரராஜ பெருமாள் ஆனார்.

 

இத்தலத்தைப் பாட வந்த திருமங்கை மன்னனும் பெருமாளின் பேரழகில் மயங்கிப் பாடல் இயற்றுகையில், ஒன்பது பாடல்களைப் பாடிவிட்டுப் பத்தாவது பாட்டில்தான் தலத்தின் பெயரைக் குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் “அச்சோ ஒருவர் அழகியவா” என்று எம்பெருமானின் எழிலை வியக்கிறார் மங்கை மன்னன்!

வம்பு அவிழும் துழாய் மாலை தோள் மேல்;

கையன ஆழியும் சங்கும் ஏந்தி,

நம்பர் நம் இல்லம் புகுந்து நின்றார்;

நாகரிகர்; பெரிதும் இளையர்;

செம்பவளம் இவர் வாயின் வண்ணம்;

தேவர் இவரது உருவம் சொல்லில்,

அம்பவளத் திரளேயும் ஒப்பர்--

அச்சோ, ஒருவர் அழகியவா!

எண் திசையும், எறி நீர்க் கடலும்,

ஏழ் உலகும் உடனே விழுங்கி,

மண்டி ஓர் ஆல் இலைப் பள்ளி கொள்ளும்

மாயர்கொல்? மாயம் அறியமாட்டேன்,

கொண்டல், நல் மால்வரையேயும் ஒப்பர்;

கொங்கு அலர் தாமரை, கண்ணும் வாயும்;

அண்டத்து அமரர் பணிய நின்றார்

அச்சோ, ஒருவர் அழகியவா!

அன்னமும் கேழலும் மீனும் ஆய

ஆதியை, நாகை அழகியாரை,

கன்னி நல் மா மதிள் மங்கை வேந்தன்,

காமரு சீர்க் கலிகன்றி, குன்றா

இன் இசையால் சொன்ன செஞ்சொல் மாலை

ஏழும், இரண்டும், ஓர் ஒன்றும் வல்லார்,

மன்னவராய் உலகு ஆண்டு, மீண்டும்

வானவராய், மகிழ்வு எய்துவரே!

*தலத்தின் சிறப்புகள்!

பெருமாள் தன்மீது எப்போதும் பள்ளி கொள்ள வேண்டும் என்று ஆதிசேடன் பெருமாளை நோக்கித் தவமிருக்கிறான். அவன் தவம் மெய்ப்படுகிறது. அவன் பெயராலேயே இத்தலம், நாகன்பட்டினமாகி, மருவி, நாகப்பட்டினம் ஆனது!

கப்பல்களுக்கு வழிகாட்ட இந்த ஆலயத்தின் ஏழு நிலைக் கோபுரங்களின் மீது விளக்குகள் ஏற்றப்பட்டது. (இப்போது ஒரு நிலைக் கோபுரம் மட்டுமே உள்ளது!)

நின்ற, இருந்த, கிடந்த என்னும் மூன்று விதமான திருக்காட்சிகளை இத்தலத்தில் காணலாம். மூலவர் நின்ற திருக்கோலம். வீற்றிருந்த பெருமாள் என்ற அமர்ந்த திருக்கோலமும், பள்ளி கொண்ட திருக்கோலத்தில் அரங்கநாதனும் காட்சியளிக்கின்றனர்.

அரங்கனின் சன்னதியில் உள்ள நரசிம்ம அவதாரத்தை விளக்கும் வெண்கலச் சிலை அரிதானது!

பத்து அவதாரங்களை விளக்கும் செம்புத் தகடால் ஆன மாலை, பெருமாளின் இடையில் இருக்கிறது!

பெருமாளின் பேரெழிலுக்காகவே காண வேண்டிய ஆலயம்!

மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்லும்

இத்தலத்தில் பெருமாள் நின்று,கிடந்த இருந்த கோலத்தில் நரசிம்மராக அருள்பாலிக்கிறார்.ஒருகை பிரகலாதனை ஆசிர்வதிப்பது போலவும், ஒரு கை அபய முத்திரையையும் காட்டுகிறது. மற்ற கைகள் இரண்யனை வதம் செய்கின்றன.

பெருமாள் கிழக்குப் பார்த்து நின்ற கோலத்தில் திருமஞ்சன திருமேனியுடன் காட்சி தருகிறார்.இங்குள்ள விமானம் சௌந்தர்ய விமானம்.இங்கு ஆதிக்ஷேஷன், துருவன், திருமங்கையாழ்வார்ம்சாலிசுகசோழன் ஆகியோர் பெருமாளைத் தரிசித்துள்ளனர்.

தசாவதாரங்களை விளக்கக்கூடிய செம்பு தகட்டால் ஆன மாலை பெருமாளின் இடையை அலங்கரிக்கிறது.ஆதிக்ஷேஷனால் உருவாக்கப்பட்ட சாரபுஷ்கரணியில் நீராடிப் பெருமாளை வழிபட்டால் புண்ணியமாகக் கருதப்பெறுகிறது.

கண்டன், சுகண்டன் என்று இரு சகோதரர்கள் செருக்குடன் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் சாரபுஷ்கரணியில் நீராடப் பாவம் தீர்ந்து வைகுண்டம் சென்றார்கள். இவர்களது சிற்பங்கள் பெருமாள் சந்நிதியில் உள்ளன.

நாகங்களுக்குத் தலைவனான ஆதிஷேசன் இத்தலத்தில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி சார புஷ்கரணி எனப் பெயரிட்டான்.அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கித் தவம் செய்தான். பெருமாளும் மகிழ்ந்து தன் படுக்கையாக ஆதிக்ஷேசனை ஏற்றார்.பெருமாலை நாகம் (ஆதிக்ஷேசன்) ஆராதித்ததால் ஊருக்கு நாகப்பட்டினம் என்ற பெயர் வந்தது.   

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி படமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜபெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம்மண்டபத்தில் சௌந்தரராஜபெருமாள் கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்கு முன்பாக கொடி மரம் உள்ளது.

இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன. தசாவதாரதத்தை விளக்கும் செப்பு தகடுகளால் ஆன மாலையை இந்த திருத்தல எம்பெருமான் இடையை அலங்கரிப்பதை சேவிப்பது பெரும் புண்ணியம் / பாக்கியம்.

பெண் கருடன் கேள்விப்பட்டதுண்டா ? கருடனின் மனைவி, கருடி எனப்பெயர். நாகை அழகியார் கோவில் தாயாருக்கு பெண் கருட ( கருடி) வாஹனம் உண்டு

இந்த கருடி வாஹனத்தில் தாயார் பவனிவருவது சிறப்பு.

பல கோவில்களில் தாயார் கோவிலை விட்டு வெளியே வரமாட்டார்.( படிதாண்டா பத்தினி என பெயர் உண்டு) ! நாகை அழகியார் கோவிலில் பெருமாள் கருட வாஹனத்திலும் தாயார் கருடி வாஹனத்திலும்

ஜோடியாக வருவது கண்கொள்ளாகாட்சியாகும் .

இந்த திவ்யதேசத்தில் காட்சி அளிக்கும் ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன், பக்த பிரஹலாதனுக்கு ஓரு திருக்கரம் ஆசி வழங்குவதும், ஒரு திருக்கரம் அபயஹஸ்தமாகவும், மற்ற திருக்கரங்களால் ஹிரண்யனை வதம் செய்வது போலவும் இருப்பது சிறப்பாகும்.

இதேபோல், அஹோபிலம் திவ்ய தேசத்தில், ஜ்வால நரசிம்ம ஸ்வாமி, எட்டு திருக்கரங்களுடன் காட்சி அளிப்பதை நினைவில் கொள்ளலாம். அஹோபிலத்தில், இரண்டு திருக்கரங்கள் ஹிரண்யனை பிடித்து கொள்ள, இரண்டு திருக்கரங்கள் அவனின் குடலை கிழிக்க, இரண்டு திருக்கரங்கள் குடலை தனக்கு மாலையாக சார்த்திக் கொள்ளும்படியும். இரண்டு திருக்கரங்கள் சங்கு, சக்கரம் கொண்டும் அமைந்துள்ளன.

*பேருந்து வசதி:

இத்திருக்கோயில் அருகாக, மயிலாடுதுறையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் பேருந்துகள் செல்கின்றன. சென்னையில் இருந்து வருகிறவர்கள் நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இறங்கி, வேளாங்கண்ணி அல்லது திருவாரூர் மார்க்கத்தில் செல்லும் நகரப்பேருந்தில் பயணம் செய்து வந்தால் 2 கி.மீ தொலைவிலுள்ள பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினால் எதிர்ப்படுவது நம்பெருமாள் கோவில் ஆகும். கோயம்புத்தூர் மதுரை திருச்சி தஞ்சாவூர் மார்க்கத்தில் வருபவர்கள் பேருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக வந்தால் பழைய பேருந்து நிலையத்தின் முந்தைய நிறுத்தமான பெருமாள் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கலாம். பேருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் சென்றால் கோட்டை வாசப்படி என்கிற பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து மிக அருகில் உள்ள கோயிலை 10 நிமிட நடை பயணத்தில் வந்தடையலாம.

.
மேலும்