சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையில் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

By

சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் - கோட்டயம் இடையில் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ரயில் எண் 06151 கொண்ட எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் - கோட்டயம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 15, 17, 22, 24 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

இது சென்னை சென்ட்ரலில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை அடையும். கோட்டயத்தில் இருந்து சபரிமலைக்கு 95 கிலோமீட்டர் தூரம் உள்ளது. எனவே கோட்டயம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்துகள், கார்கள் மூலம் சாலை வழிப் பயணத்தை மேற்கொள்ளலாம். எப்படியும் இரண்டரை மணி நேரத்திற்குள் சென்று விடலாம். சபரிமலைக்கு செல்வோர் பம்பை வரை தான் வாகனங்களில் அனுமதிக்கப்படுவர்.

சபரிமலையில் ஐயப்பன் தரிசனம் செய்து விட்டு மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 06152 கொண்ட கோட்டயம் - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் டிசம்பர் 16, 18, 23, 25 ஆகிய நாட்களில் இயக்கப்படுகிறது. கோட்டயத்தில் இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை காலை 9.30 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரயில் காட்பாடி, சேலம், ஈரோடு, போடனூர், பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் இரு மார்க்கங்களிலும் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 4 நாட்களுக்கு இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் ஐயப்பன் பக்தர்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE