வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான்.
ஒருநாள் அவன் வேட்டைக்குப் போன போது பல சிறிய விலங்குகளும் பறவைகளும் அவனது வேட்டையில் சிக்கின. வேட்டையால் கிடைத்தவற்றை ஒரு சாக்குப் பையுள் போட்டவனாக மேலும் விலங்குகள் கிடைக்கக்கூடும் என்ற ஆசையில் காட்டின் உட்பக்கத்திற்குச் சென்று விட்டான். நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்ததால் இருள் சூழ ஆரம்பித்தது. இந்நிலையில் அடர்ந்த காட்டுக்குள் இருந்து வெளியே வரும் வழியை அவனால் அறிய முடியவில்லை.
கொடிய விலங்குகள் அந்தக் காட்டில் இருந்ததால் அவன் தனது பாதுகாப்புக் குறித்து கவலையுற ஆரம்பித்தான். வேறு வழி அறியாத நிலையில் பாதுகாப்பு கருதி ஒரு மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டான். அவனது மணத்தால் கவரப்பட்ட விலங்குகள் மரத்தின் கீழ் வந்து கூடத் தொடங்கின. கீழே நின்ற விலங்குகளை விரட்டலாம் என்ற நம்பிக்கையில் மரத்திலிருந்து சில சிறிய கொப்புகளை முறித்து அவற்றின் மீது எறிந்தான். அவை அகலவில்லை. இரவு முழுவதும் மரத்தைச் சுற்றியபடி நின்றன. எனவே மரத்திலேயே இரவைக் கழிக்க எண்ணி தூங்கி கிழே விழுந்துவிடாதிருக்க இலைகளைப் பறித்துக் கீழே வீசியபடி இருந்தான்.
விடிந்ததும் மிருகங்கள் அகன்று சென்றுவிட்டன. அவன் வேட்டைப் பொருட்களுடன் வீட்டுக்குச் சென்றான். சிறிது காலத்தின் பின்னர் அவன் இறந்த போது அவனுக்கு மோட்சம் கிடைத்ததாக கதை முடிகிறது.
அவன் அன்று இரவு அவன் மிருகங்களுக்கு பயந்து ஏறியிருந்த மரம் வில்வ மரம் என்றும் அவன் இலைகளைப் பறித்துக் கீழே போட்ட போது மரத்தின் அடியில் இருந்த சிவலிங்கத்துக்கு மேலே அவை வீழ்ந்தன என்றும் கூறப்படுகிறது. இவ்வாறாக நித்திரை விழித்து வில்வம் இலைகளைப் போட்டதாலும் அன்று சிவராத்திரி என்பதாலும் அவனுக்கு மோட்சம் கிடைத்தது என்பது கதையில் கூறப்பட்ட முக்கியமான செய்தி.
சிவனுக்கு மிகவும் உகந்தது வில்வம் என்றும் அந்த மரத்தில் மகாலஷ்மி வாசம் செய்கிறாள் என்றும் ஒரு வில்வ மலர் ஒரு லட்சம் தங்க மலர்களுக்கு நிகரானது என்றும் சிவபுராணம் கூறுகிறது. ஒரு வில்வம் இலையை ஈசனுக்கு போட்டு பூசிப்பதன் மூலம் சகல பாவங்களும் நிவர்த்தியாகிறது என்றும் வில்வ மரத்தை வீட்டில் வளர்ப்பதன் மூலம் அஷ்வமேத யாகம் செய்த பலனையும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த பலனையும் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய, சிவ தலங்களைத் தரிசித்த பலனையும் அடையலாம் என்றும் மேலும் வில்வத்தின் பெருமை கூறப்படுகிறது.
மேலே கூறப்பட்ட கதை ஒரு உருவக கதையாகும். அதன் ஒவ்வொரு அம்சத்திற்கும் ஆன்மிக ரீதியில் விளக்கம் கொடுக்கப்படுகிறது.
வேடன் காட்டு மிருகங்களை வேட்டையாடியதைப் போல ஆன்மிக வழியில் போக விரும்புபவர்கள் காமம், கோபம், பேராசை, ஒரு பொருளில் அல்லது மனிதரில் அளவில்லாத ஆசை வைத்தல், பொறாமை, வெறுப்பு ஆகிய விலங்கு குணங்களைக் கொல்லுதல் வேண்டும்.
காடு என்பது வேண்டத்தகாத எண்ணங்கள் மனதில் அலைந்து திரிவதைக் குறிப்பதாகும்.
வேடனின் பெயர் சுஸ்வர. அதன் கருத்து இனிய ஸ்வரம் அதாவது இனிய இசை என்பதாகும். இந்த பெயர் எண்ணங்களினதும் பேச்சினதும் தூய்மையை அதாவது மனத் தூய்மையைக் குறிக்கிறது.
வேடன் வாரணாசியில் பிறந்து வாழ்ந்தவன். வார என்பது நெற்றி, நாசி என்பது மூக்கு. மூக்கும் நெற்றியும் சந்திக்கும் இடம் வாரணாசியாகும். அந்த இடத்தில் இட, பிங்கள, சுசும்ன என்ற மூன்று நாடிகள் சந்திக்கின்றன. ஒருவர் தனது மனத்தை அந்த இடத்தில் குவியச் செய்வாராயின் படிப்படியாக அவர் தனது புலன்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைப் பெற்றுக் கொள்கிறார்.
வில்வ மரம் முள்ளந் தண்டைக் குறிக்கிறது. வில்வ மரத்தின் இலைகள் விசேட அமைப்பைக் கொண்டுள்ளன. ஒரு தண்டில் மூன்று இலைகள் உள்ளன. அவை முன்னர் குறிப்பிட்ட மூன்று நாடிகளைக் குறிக்கின்றன. மரத்தில் ஏறுதல் என்பது மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை ஆக்ஞ சக்கரத்திற்கு ஏற்றுவதைக் குறிக்கின்றது.
நித்திரை கொள்ளாது விழித்திருத்தல் என்பது ஒருமைத் தன்மையையும், உள்ளார்ந்த விழிப்பையும் குறிப்பதுடன், ஆன்மிகத்தை விரும்பும் ஒருவர் அடைய வேண்டிய இலக்கு என்பதையும் சுட்டி நிற்கிறது. அவர் ஒரு நிமிடம் கூட அசட்டையாக இருக்க முடியாது.
சிவன் என்பவர் நடத்தல், கனவு காணுதல், ஆழ்ந்த நித்திரை கொள்ளுதல் என்ற மூன்று நிலைகளையும் பிரகாசமாக்கி மிக உயர்ந்த உணர்தலைக் குறித்து நிற்கிறார். மூன்று இலைகளைக் கொண்ட வில்வத்தை சிவனுக்கு அளித்தல் என்பது மூன்று நிலைகளையும் கடந்து நான்காவது நிலையாகிய துரிய நிலையை அடைதலைக் குறிக்கிறது.