அர்ஜுனன் தீர்த்த யாத்திரை மேற்கொண்ட சமயத்தில், ஒரு பன்றியை வேட்டையாடினான். சிவபெருமான் வேடன் வடிவில் சென்று, அது தனக்குரியது என்று சொல்லி அவனை சண்டைக்கு இழுத்தார். அவருடன் போரிட்ட அர்ஜுனன் அம்பு எய்யவே, சிவனின் தலையை பதம் பார்த்தது. ரத்தம் வழிய நின்ற வேடன், சுயரூபம் காட்டினார். வருந்திய அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான்.
சிவன் அவனை மன்னித்ததோடு, பாசுபதாஸ்திரம் கொடுத்தருளினார். அதன்பின், அவன் பல இடங்களில் சிவவழிபாடு செய்தான். அவன் இத்தலத்திற்கு வந்தபோது, இங்கும் சுயம்புலிங்கத்தைக் கண்டு வழிபட்டான். வேடன் வடிவில் வந்து அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவர் என்பதால், இவர் "திருவேட்டீஸ்வரர்' என்று பெயர் பெற்றார். பார்த்தபிரகரலிங்கம்' (பார்த்தன் அர்ஜுனன்) என்றும் இவருக்கு பெயர் உண்டு.
ராகு கேது பரிகார தலம், சிவன், அம்பாள், சண்முகர் என மூவருக்கும், மூன்று கொடிமரத்துடன் அமைந்த தலம் இது. மகாலட்சுமி, திருமாலை மணந்து கொள்வதற்காக இங்கு சிவனை வணங்கியதாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்குள்ள ஒரு தூணில் மகாலட்சுமி கைகளில் கலசத்தை வைத்து, சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தபடி காட்சி தருகிறாள். மகாலட்சுமி, சரஸ்வதியும் மற்றொரு சன்னதியில் அருகருகே இருக்கின்றனர். சரஸ்வதியிடம் வீணை கிடையாது. இக்கோயிலுக்கான விநாயகர், எதிரே தனிச்சன்னதியில் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு தேங்காய் மாலை சாத்தி, தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். பிரகாரத்தில் சண்முகர் தனிச்சன்னதியில் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
சிவன் கோயில்களில் அர்த்தஜாம பூஜை முடிந்து, பள்ளியறை பூஜையின்போது பெரும்பாலும் சிவனின் பாதமே கொண்டு செல்லப்படும். ஆனால், இங்கு பள்ளியறைக்குள் சிவனே செல்கிறார். இதற்காக சிலை ஒன்று செய்யப்பட்டுள்ளது. இவர் அர்த்த மண்டபத்தில் காட்சி தருகிறார். கோஷ்டத்தில் யோக தெட்சிணாமூர்த்தி, இடது காலை குத்திட்டு அமர்ந்தபடி காட்சி தருகிறார். இவருக்கான உற்சவரும் இங்கிருக்கிறார். இத்தலத்தில் சிவனை, இந்திரன் வழிபட்டதாக ஐதீகம். இதனடிப்படையில் புரட்டாசியில் இந்திரபூஜை விழா நடக்கிறது. அப்போது, சுவாமி சன்னதி முழுதும் காய்கறி, பழம் மற்றும் இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது.