திருப்பரங்குன்றம் - முதல்படைவீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது. லிங்க வடிவில் இருக்கும் இக்கோவில் அமைந்துள்ள மலையைப் பற்றி சைவ சமயக் குரவர்களில் முக்கியமானவர்களான சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறை நீக்கிக் கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.
இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன்று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என்று பல்வேறு பெயர்களில் திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.
முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலம் இது என்பதால், இந்த தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. * இக்கோவிலில் மற்ற கோவில்களைப் போன்று சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. மூலவரை தரிசிக்க வேண்டும் என்றால் படிக்கட்டுகள் வழியாக மேலே... மேலே... என்று ஏறிக்கொண்டே போக வேண்டும். அத்துடன், கருவறை, மூலவர், உற்சவர் ஆகியோரை வலம் வருவதும் இங்கு முடியாது.* இக்கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் செய்தால் செல்வம் பெருகி வாழ்வில் வளம் சேரும் என்பது நம்பிக்கை. அதனால், செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைந்து வீட்டில் தயிர் சாதம் செய்து இங்கே கொண்டு வந்து ஏழை மக்களுக்கு வழங்குவதைப் பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தைப்பூசம், கார்த்திகைத் திருநாள், தெய்வயானையை மணந்து கொண்ட பங்குனி உத்திர நாள் ஆகியவை சிறப்பான விழாக்களாக இங்க கொண்டாடப்படுகின்றன.
திருச்செந்தூர் - இரண்டாவதுபடை வீடு
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் இரண்டாவது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர். செந்தில் ஆண்டவர் திருநாமத்துடன் இங்கு எழுந்தருளியுள்ள முருகப்பெருமான், சூரபத்மனுடன் இங்குதான் போர் புரிந்து அவனை சம்ஹாரம் செய்தார். திருநெல்வேலியில் இருந்து கிழக்கே சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடற்கரையோரத்தில் அமைந்துள்ளது திருச்செந்தூர்.
பழனி - மூன்றாவதுபடை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது படை வீடாகத் திகழ்வது பழனி. இந்த தலத்தில் முருகப்பெருமான் ஆண்டி கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சியளிக்கிறார். இவரை பழனியாண்டவர் என்றும் அழைக்கிறார்கள். மூலஸ்தானத்தில் உள்ள பழனியாண்டவர் திருமேனி, அகத்தியரின் தலையாய சித்தரான போகரால், நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். இதனால், மூலவர் மீது அபிஷேகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு எல்லா நோய்களையும் குணப்படுத்தும் சக்தி கிடைக்கிறது.
சுவாமிமலை - நான்காவதுபடை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாகத் திகழ்வது திருவேரகம் என்று போற்றப்படும் சுவாமிமலை. இங்கு கதிர்வேலனாக முருகப்பெருமான் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.தஞ்சாவூரில் இருந்து 32 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது.
இத்தலத்தில் சுவாமிநாதன் நான்கரை அடி உயர நின்ற கோலத்தில் காட்சி கம்பீரமாக காட்சித் தருகிறார். வலது கரத்தில் தண்டாயுதம் தரித்து, இடது கரத்தை இடுப்பில் வைத்து, சிரசில் ஊர்த்துவ சிகாமுடியும், மார்பில் பூணூலும் ருத்திராட்சமும் விளங்க... கருணாமூர்த்தியாக காட்சித் தருகிறார். முகத்தில் ஞானமும் சாந்தமும் தவழ்வதை கண்குளிர பார்க்க முடிகிறது.
திருத்தணி(கை) - ஐந்தாவதுபடை வீடு
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஐந்தாவது படை வீடாகத் திகழ்வது திருத்தணி என்று அழைக்கப்படும் திருத்தணிகை. இங்கு முருகப்பெருமான் பாலசுப்பிரமணிய சுவாமியாக, தனது இச்சா சக்தியான வள்ளியுடன் அருள்பாலிக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டத்தில், அரக்கோணத்தில் இருந்து வடக்கே 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருத்தணி. "தொண்டை நாடு" என்று அழைக்கப்படும் பகுதியில் திருத்தணி அமைந்திருப்பதாக தமிழ் நூல்கள் கூறுகின்றன.
தொண்டை நாட்டின் தலைநகராகிய காஞ்சீபுரம் தெற்கிலும்; விரிஞ்சிபுரம், வள்ளிமலை, சோளிங்கபுரம் ஆகியவை மேற்கிலும்; திருவாலங்காடு கிழக்கிலும்; ஸ்ரீகாளஹஸ்தி, திருப்பதி ஆகியவை வடக்கிலும் சூழ்ந்திருக்க, அவற்றிற்கு மத்தியில் நடுநாயகமாக திருத்தணி அமைந்துள்ளது.
பழமுதிர்ச்சோலை - ஆறாவதுபடை வீடு
முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார்.
பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது.