கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் அமைந்திருக்கும் நரசிம்மர் இந்திய தேசத்தின் நரசிம்மர்களில் தனித்துவமானவர், 16 கைகளுடன் அருள்பாலிக்கும் நரசிம்மர் இந்தியாவில் மூன்று இடங்களிலேதான் உண்டு, முதலாவது ராஜஸ்தான் மாகாணம் ஹிந்தவானில் அமர்ந்திருக்கும் நரசிம்ம, இரண்டாவது கடலூர் அருகே சிங்கிரி குடியில் அமைந்துள்ளது
மூன்றாம் ஆலயம் இந்த கீழப்பாவூரில் அமைந்துள்ளது
இந்த கீழப்பாவூர் மிக தொன்மையான ஊர்களில் ஒன்று சித்ரா நதியோரம் அமைந்திருக்கும் இந்த ஊர் முன்பு "பாகு ஊர்" என அழைக்கபட்டது, பாகு என்றால் வலிமையான பதமான என பொருள், பாகு ஊர் என்பது பாகூராகி பின் பாவூராயிற்று , அப்படியே அப்பக்கம் இரு பாகூர் இருந்ததால் இது கீழ்பக்கம் உள்ள பாகூர் என்பதால் கீழப்பாவூர் என்றுமாயிற்று
மதுரையினை ஆட்சி செய்த பாண்டியர்களின் முக்கிய இடம் இது, இந்த பகுதி அடிக்கடி சேர நாட்டு மன்னர்களிடம் சிக்குவதும் பின்னர் பாண்டியர் மீள பிடிப்பதுமாக மாறி மாறி இருவர் கைகளிலும் இருந்தது , ஆப்கானிய காலங்களிலும் இங்குதான் பாண்டியர் ஆட்சி நிலைத்தது
மாலிக்காபூர் இங்கு கொள்ளையிட வந்தபோது அவனை விரட்டி அடித்ததில் தென்காசி பாண்டியருக்கு பங்கு உண்டு, துக்ளக் மதுரையினை ஆளும்போது அவர்களுக்கு அடங்க மறுத்து தனி ராஜ்யம் கண்ட மண் இந்த பகுதி, எப்போதும் வீரத்துக்கும் இந்துமத காவலுக்கும் பெயர் பெற்ற பகுதி
தென்காசி ஆலயம், குற்றால ஆலயமெல்லாம் அங்கு எப்படி பெரும் அடையாளமோ அப்படி இந்த கீழப்பாவூர் ஆலயமும் மகா பிரசித்தியானது
இந்த ஆலயத்தின் வரலாறு மகா தொன்மையானது பிரகலாதனுக்கு பகவான் இரங்கி இரணியகசிபுவினை கொன்றொழித்த சில காலங்களில் உருவாகி வந்தது, அதற்கு காரணம் நாரதமுனி , காசியப்பமுனிவர், சுகாசனர் இன்னும் வருணன் எனும் சிலர்
நாரதர் எப்போதும் கலகம் செய்பவர், அப்படி அவர் காசியப்பமுனிவரிடமும் தேவர்களிடமும் நரசிம்ம அவதாரம் எப்படி நிகழ்ந்திருக்க முடியும்? அவதாரம் என்றால் மானுடர்போல் எல்லோருக்கும் தெரிய வாழவேண்டாமா? இப்படி ஓரிரு நாழிகையில் வந்து செல்வது அவதாரத்தில் சாத்தியமா என்றெல்லாம் சில விதைகளை விதைத்துபோட்டார்
அவதாரங்களில் பக்தன் ஒருவனுக்காக , ஒரே ஒருவனுக்காக இறங்கி வந்த நரசிம்மரின் கோலத்தை தரிசிக்க இந்த ரிஷிகளும் விருப்பம் கொண்டார்கள், அதற்காக தவமிருக்க பொதிகை மலை வந்தார்கள்
அங்கே அவர்களுக்கு பகவானின் வாக்கு கிடைத்தது, "கா தபஸ்விகளே! பொதிகை மலையில் அகத்தியர் ஏற்படுத்திய தாமிரபரணியில் மனிதர்கள் நீராடுவதற்காக சமதள பகுதியில் 86 தீர்த்தங்களும், வரம் பெற்ற ரிஷிகள் நீராடுவதற்காக மலை மேல் 32 தீர்த்தங்களும் உள்ளன.
அப்படியான தீர்த்தமான மணிமுக்தா தீர்த்தம் எனும் பாபநாசம் பாண தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து வடக்கே செல்லும் சித்ரா நதிக்கரையில் தவம் இயற்றுங்கள். அப்போது உங்கள் கோரிக்கை நிறைவேறும் என திருவுளம் பற்றினார்
அதன்படி முனிவர்கள் தவமிருந்தார்கள், அவர்கள் பாபநாசத்தில் நீராடியிருந்ததால் அவர்களின் கர்மவினையெல்லாம் கழிந்திருந்தது, பகவானும் நாரதர் மூலம் அவர்களை கொண்டு ஒரு நாடகம் நடத்தி அங்கு குடியேறும் திட்டமும் கொண்டிருந்தார்
அதாவது அகோபிலம் என்பது ஆந்திராவில் காடும் மலையும் நிரம்பிய இடம் அங்கேதான் நரசிம்மருக்கு மிகபெரிய தலம் உண்டு, மக்களெல்லாம் அங்கு செல்வது முடியாத காரியமாக இருந்தது, இதனால் பாண்டிய மக்களுக்காக சமவெளியில், வயல்சூழ் நிலத்தில் எல்லா மக்களும் வந்து தன் அருள் பெற சித்தம் கொண்டார், முனிவர்களின் தவம் அங்கணமே நிகழ்ந்தது
அவர்கள் தவம் உச்சத்தை அடைந்தபோது ஈரேழு உலகமும் அஞ்சும் வண்ணம் பெரும் சிம்மகுரல் எழுந்தது, சித்ரா நதியே கொதிக்கும் வண்ணாம் பெரும் அணல் சூழ்ந்தது, அண்ட சராசரம் நடுங்கும் வண்ணம் நரசிம்ம மூர்த்தியாய் பகவான் எழுந்து வந்து நின்றார், அவரின் உக்கிர கோலம் தாங்கமுடியாததாய் இருந்தது
பிரகலாதன் பணிந்தது போல் முனிவர்களும் அவர்பாதம் பணிந்தார்கள், அவர்கள் நரசிம்ம மூர்த்தியின்.
உக்கிரத்தை எதிர்கொள்ளமுடியாமல் அன்னையினை வேண்டினார்கள், அன்னை வந்து அவரை சாந்தபடுத்தியதால் அவர் உக்கிரம் தணிந்த நரசிம்மராக அவர்களுக்கு வரமருள முன்வந்தார்
அதன்படி எக்காலமும் பகவான் இங்கிருந்து நரசிம்ம மூற்த்தியாக மக்களுக்கு வரம் அருள வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைக்க அப்படியே அங்கு அமர்ந்து கொண்டார் நரசிம்மர்
அதிலிருந்து தொடங்கும் இந்த ஆலய வரலாறு பாண்டிய மன்னர்களால் தொடரபட்டு இன்று மகா பிரசித்தியான ஆலயமாக நிலைத்து நிற்கின்றது, பதினாறு கரங்களுடன் முனிவர்களுக்கு நரசிம்மர் காட்சி கொடுத்த அந்த திருவுருவம் தானே அமைந்ததாகத்தான் வரலாறு சொல்கின்றது
பாண்டிய மன்னர்களுக்கு சிவனே தலைவர் அதே நேரம் அவர்கள் நரசிம்ம வழிபாட்டையும் செய்திருக்கின்றார்கள், திருவிளையாடலில் வரும் விக்ரம பாண்டியனுக்காக சிவன் சமணர்கள் அனுப்பிய மாய யானையினை கொல்லும் போது அந்த அம்பில் இருந்தவர் நரசிம்மர் என்பதால் இன்றும் அந்த யானைமலை அருகே நரசிம்மருக்கு சிறப்பான ஆலயம் உண்டு
அக்காலத்தில் இருந்தே பாண்டியர்களுக்கு நரசிம்ம வழிபாடு இருந்திருக்கின்றது அதன் தொடர்ச்சியாக இந்த ஆலயத்தை சிறப்பாக கொண்டாடினார்கள்:
முற்கால பிற்கால பாண்டியர்களும், நாயக்கர் காலத்தில் ஆண்ட தென்காசி பாண்டியர்களும் இந்த கோவிலை வெகு சிரத்தையாக கொண்டாடியிருக்கின்றார்கள்
திருவிளையாடல் விக்ரமன் பாண்டியன் தொடங்கி பின்னாளில் வந்த ஜடாவ்ர்ம சுந்தரபாண்டியன் வரை, இன்னும் பின்னாளைய விக்ரம பாண்டியன், வல்லப பாண்டியன் என எல்லா மன்னர்களும் இந்த ஆலயத்தில் பணிந்திருக்கின்றார்கள்
பாண்டியர்க்கு வெற்றிமேல் வெற்றி கொடுத்த ஆலயம் இது, விக்ரம பாண்டியன் வெறும் ஆயிரம் வீரர்களை கொண்டு இந்த நரசிம்மர் துணையால் பெரும் வெற்றிபெற்றதை அங்கிருக்கும் அடையாளமும் வரலாறுகளும் சொல்கின்றன
பாண்டியர்கள் இந்த நரசிம்மரை " முனைகடி மோகர் விண்ணர் " என கொண்டாடினார்கள்,அதற்கு அர்த்தம் ஈட்டி வாள் அம்பு என கூரிய ஆயுதம் கொண்ட படைகள் வந்தாலும் வெற்றி தருபவர் என பொருள், பாண்டியரின் வெற்றிக்கெல்லாம் இந்த ஆலயம் முக்கிய காரணமாய் இருந்தது
ராஜராஜசோழன் பெரும் அரசை எழுப்பிய காலத்தில் இது சோழர்கள் கட்டுபாட்டிலும் இருந்தது, அவர்கள் இந்த ஆலயத்தை" க்ஷத்திரிய சிகாமணி நல்லூர்" என்றார்கள், ஒரு சோழ மன்னனின் மனைவியான அறிஞ்சிகை பிராட்டியின் பெயரில் அ"றிஞ்சிகை பிராட்டி சதுர்வேதி மங்கலம்" என்றும் இது அழைக்கபட்டிருக்கின்றது
பின்னாளில் ஜடாவ்ர்ம சுந்தரபாண்டியன் சோழர்களை ஒடுக்கியபோது மீண்டும் பாண்டிய நாட்டிடம் இந்த ஆலயம் வந்தது
கிழக்கு நோக்கிய வாழில் வழியாக நுழைந்தால் மகாமண்டபம், அர்த்த மண்டபம் கடந்து செல்ல வேண்டும் இந்த கோவிலில் இரண்டு சன்னிதிகள் உள்ளன. வடக்கு பார்த்த தனிச் சன்னிதியில் அலர்மேல் மங்கா பத்மாவதி சமேத ஸ்ரீ பிரசன்ன வேங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.
பாண்டியர் கோவில் என்பதால் சிவனுக்குரிய சன்னதியும் உண்டு திருக்காவலீஸ்வரமுடைய நாயனார் என அவர் அழைக்கபடுகின்றார்
பின்னால் மேற்கு நோக்கிய தனிச் சன்னிதியில் நரசிம்மர் தரிசனம் தருகிறார். , திரிபங்க நிலையில் பதினாறு திருக்கரங்களுடன் இரணியனை மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலத்தில் அபூர்வ வடிவ சிறப்புடன் காட்சி தருகிறார்.
சூரியனும் சந்திரனும் வெண் சாமரங்கள் வீசி சாந்தப்படுத்திக் கொண்டிருக்க, வெண் கொற்றக் குடையுடன் தியானத்தபடி கம்பீரமாக வீற்றிருக்கிறார் நரசிம்மர். பிரகலாதன், அவனுடைய தாய், நாரதர், காசி மன்னன் ஆகியோர் அருகில் நின்று நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கும் காட்சியினை இங்கு காணலாம்
நரசிம்மர் ஆலயங்களில் மிக மிக அழகான உக்கிரமான நரசிம்மர் இவர்தான், சிலிர்க்கும் பிடரியுடன் பிரகாசிக்கும் சிங்கமுகத்துடன் , பிளந்த வாய், நிமிர்ந்த காதுகள், உருக்கிய பொன் போன்று ஒளிரும் கண்கள், தீர்க்கமான பார்வை, அகன்ற நெற்றி, வீங்கிய கழுத்து, விசாலமான மார்பு, ஒட்டிய வயிறு, தலைக்குமேல் வெண்குடை என் அந்த நரசிம்மர் நிற்கும் கோலம் மிக மிக சிலிர்ப்பானது
இந்த நரசிம்மர் எப்போதும் உக்கிரமாக இருப்பதால் ஒருவித அணலும் வெப்பமும் இருந்து கொண்டே இருந்தது அதை தணிக்கத்தான் பெரிய குளம் எதிரில் வெட்டபட்டாது, அதற்கு நரசிம்ம தீர்த்தம் என பெயர், அதன் பின்பே இந்த அணல் கட்டுபட்டது
இந்த ஆலயம் மிக.மிக சக்திவாய்ந்தது எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை ஒழித்து அடக்கி வெற்றிபதரும் ஆலயம் இது
இந்த நரசிம்மரை வழிபட்டே பாண்டியர்கள் இப்பக்கம் காவல் பெற்றனர், அப்போதுதான் ஈசனே பராக்ரம பாண்டியனிடம் வந்து தனக்கு காசியில் ஆலயமில்லை இங்கே ஒரு ஆலயம் கட்டு என சொல்லி காசி போலவே இங்கும் ஒரு ஆலயம் எழுப்பட்டு அது தென்காசி ஆலயம் என்றாயிற்று
தென்காசி ஆலயம் எழும்ப மூல காரணம் இந்த நரசிம்மர்
இங்கு வேண்டினால் எல்லா எதிரிகள் தொல்லையும் ஒடுங்கும். பாண்டிய மன்னர்களுக்கே காவல் தந்த நரசிம்மர் தன்னை வணங்கும் ஒவ்வொருவருக்கும் பெரும் காவல் தருவார், எதிரிகளை ஒழித்து தருவார்
இந்த ஆலயத்தில் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் அன்று சிறப்பு பூஜை விஷேஷம், நரசிம்ம ஜெயந்தி மகா விஷேஷம்
ஒவ்வொரு மாதமும் சுவாதி நட்சத்திரத்தன்று 16 வகை மூலிகை ஹோமம் உள்பட ஐவகை ஹோமமும், தொடர்ந்து பால், இளநீர், திரவியப்பொடிகளால் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கின்றது, இந்த 16 வகை மூலிகை ஹோமம் மிக சிறந்த பலனை தரும்
இங்கு வழிபடும் போது. நரசிம்மருக்கு மிகவும் பிரியமான பானகம் படைத்து வணங்கினால் நினைத்த வரம் கிடைக்கும், இவரை வணங்கி செல்வோர் தம் பகைவர்களை சுலபமாக வெல்லும் திறன் பெறுவர். இங்கு வழிபட்டால் நீண்ட கால துன்பங்கள் நீங்கும்.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும், போன, இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும். எல்லா உலக நன்மையும் இன்பமும் சூழும்
கடன் தொல்லை, கல்யாணத் தடை, நீண்ட நாள் நோய், நீதிமன்ற வழக்கு ஆகியவற்றுக்கு மிகச் சிறந்த பரிகார தலம் இந்த ஆலயம்
குற்றாலம் பக்கம் தென்காசி பக்கம் செல்லும்போது கீழப்பாவூர் நரசிம்மரை தரிசிக்க மறவாதீர்கள், நரசிம்ம அவதாரம் என்பது அக்னியும் ரத்தமும் சேர்ந்த தத்துவத்தை குறிப்பது
உடலின் ரத்தத்தில் உஷ்ணம் உரிய அளவே இருத்தல் வேண்டும் அது கூடினாலும் குறைந்தாலும் நோயாகும், இரண்யகசிபின் ரத்தத்தை பகவான் உறிஞ்சினார் என்பது அவன் உடல் ரத்தம் கொண்டிருந்த உஷ்ண அகந்தையினை அடக்கினார் எனும் தாத்பரியம்
நரசிம்மரை வணங்க வணங்க உடலின் உஷ்ணம் கட்டுபடும், உஷ்ணம் கட்டுபட்டால் சிந்தையும் இதர எண்ணங்களும் சீர்பெறும், சீர்பெற்ற சிந்த தெளிவான நிதானமான செயலுக்கு வழிவகுக்கும் அவர்கள் தொட்டதெல்லாம் வெற்றியாகும்
அவருக்கு பானகமும் இளநீரும் கொடுக்கும் தாத்பரியம் இதுதான்
ஆம், நரசிம்மரை வணங்கினால் உடல் உஷ்ணம் கட்டுபடும், இதனால் உடல்நோய் தீரும் அப்படியே சிந்தையும் மிக மிக துல்லியமானதாக மாறும்
இந்த ஆலயம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நரசிம்மர் போலவே பெரும் அதிசயம் கொண்டது, ஆம் ஸ்ரீரங்கத்தில் நரசிம்மர் சன்னதியில் சிம்மத்தின் உறுமல் கேட்பது இயல்பு இப்போதும் பக்தர்களின் காதில் அந்த சிம்மத்தின் கர்ஜனை அங்கு கேட்கும்
அதே அதிசயம் இந்த ஆலாய்த்திலும் உண்டு, முன்பு மாலை வேளையில் மிக பெரியதாக அங்கு வழிபடும் பக்தர்களுக்கெல்லாம் அக்குரல் கேட்டிருக்கின்றது, இப்போதும் மனமுருக தன்னிடம் கேட்கும் பக்தர்கள் காதில் சிம்ம கர்ஜனை விழுகின்றது
அது நான் உனக்கு இருக்கும் போது என்ன கவலை? எல்லா நிலையிலும் நான் உன்னை காப்பேன் என பகவான் பக்தனோடு பேசும் மொழி, நரசிம்ம மொழி. அந்த கீழப்பாவூர் ஆலயம் சென்று வணங்குங்கள் மனமார அந்த நரசிம்மரை பணிந்தால் பிரகலாதன் பணிந்தது போல் பணிந்தால் உங்கள் காதிலும் அந்த நரசிம்மம் தன் சிம்மமொழியில் பேசும் இது சத்தியமான உண்மை.
பிரம்ம ரிஷியார்