வலங்கைமான் வட்டம் சம்மந்தர் கோயில்

By தேஜஸ்

ஞானசம்பந்தர், சோழ நாட்டில் பல தலங்களை பாடிப்பரவி பின்னர்  கொள்ளம்பூதூருக்கு வருகை தந்தபோது முள்ளியாற்றில் பெருவெள்ளம் போய்க்கொண்டிருந்தது. ஓடம் செலுத்த முடியாமையால் ஓடக்காரர்கள் தங்கள் ஓடங்களை கரையில் நிறுத்திவிட்டுப் போயிருந்தனர். அங்கு வந்த ஞானசம்பந்தர், அவ் ஓடங்களுள் ஒன்றினில் அடியார் பெருமக்களுடன் ஏறி  "கொட்டமே கமழும் கொள்ளம்புதூர்" எனத் தொடங்கும் பதிகம் பாட ஓடம் தானாகவே பெருவெள்ளத்தை ஊடறுத்துக்கொண்டு  மறுகரையை அடைந்தது. கொள்ளம்புதூர் இறைவனை  தரிசித்து, ஆலயத்தை அடைந்து பதிகத்தை நிறைவு செய்து வழிபட்டார். 

அவர் முள்ளியாற்றின் கரையில் நின்று கொள்ளம்புதூரை தரிசித்த இடத்தில்  கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது.  இக்கோயில்  சம்பந்தர் கோயில் என்றும் நம்பர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. சம்பந்தர். கோயிலுக்கு கிழக்கே  இந்த ஆறு ஓடுகிறது. இது முள்ளியாறு என்றும் அகத்திய காவேரி என்றும் சம்மந்தர் ஓடம் வழி கடந்ததால்  ஓடம்போக்கி ஆறு என்றும் அழைக்கப்படுகிறது.  

 இக்கோயிலுக்கு வழி – ஆலங்குடி நீடாமங்கலம் இடையில் உள்ள நரிக்குடி வழியாக முள்ளியாற்றின் கரையில் உள்ள இக்கோயிலுக்கு  வரவேண்டும். முள்ளியாற்று கரை சாலை சற்று மோசமாக உள்ளது. 

 இது சிறிய கிழக்கு நோக்கிய ஒற்றை கருவறை திருக்கோயில், இறைவன் கருவறையில் சிவலிங்க வடிவில் உள்ளார். வாயிலின் ஒருபுறம் வினாயகரும் மறுபுறம் சம்மந்தப்பெருமான் சிலையும் உள்ளது. வெளிப்புற படிக்கட்டை ஒட்டி  விநாயகர் சன்னதி காலியாக உள்ளது மறுபுறம் ஓடத்தில் சம்மந்தரும் அடியார்களும் ஓடத்தில் செல்வது போன்ற சிலையும் உள்ளது. தற்போது சுற்றிலும் தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. 
இவ்வற்புதம் இன்னும் கொள்ளம்புதூர் தலத்தில் 'ஓடத் திருவிழா 'வாக ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

2025 ஐப்பசி அமாவாசை (தீபாவளி மறுநாள்) அன்று தீர்த்தவாரி மற்றும் ஓடத்திருவிழா  நடைபெற்றது.  கொள்ளம்புதூர் பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், அவ்வாலயத்திலேயே விழா நடைபெற்றது

திருஞானசம்பந்தர் அடியார்களுடன் ஆற்றின் மறுகரையிலிருந்து பதிகம் பாடிக்கொண்டே ஓடத்தில் ஏறி இக்கரைக்கு வரும் காட்சியும் மேலவாயிலில் ரிஷபாரூடராகப் பெருமான் அவருக்கும் மற்ற அடியார்களுக்கும் தரிசனம் கொடுக்கும் காட்சியும்   மிகச் சிறப்பாக நடைபெறும். 2026 ல்அனைவரும் சென்று தரிசியுங்கள். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE