அருள்மிகு அருளாழீசுவரர் திருக்கோயில், செங்குந்தர் பேட்டை, மதுராந்தகம்.

By சரவணன்

   இறைவன் : அருளாழீசுவரர்
   இறைவி     : ஏலவார்குழலி
   விருட்சம்     : வன்னி 
    ஆகமம்       : சிவாகமம்

அருள்மிகு ஏலவார் குழலி உடனுறை அருளாழீஸ்வரர் திருக்கோயில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் நகரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளது. 

 "மதுரை கொண்ட ராஜகேசரியான இரண்டாம் பராந்தகன்" என்ற "சுந்தர சோழன்" மதுரையை வெற்றி கொண்டதன் நினைவாக இந்த ஊருக்கு "மதுராந்தகம்" என்ற பெயர் ஏற்பட்டுள்ளது. 

இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகளின் படி இப்பகுதி "மதுராந்தக சதுர்வேதி மங்கலம்" என்று அழைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்கிரம சோழன் காலத்துக் கல்வெட்டுகள் அதிட்டானத்தில் காணப்படுகின்றன.

கல்வெட்டுகளில் இத்தலம் "அகளங்கேசுவரம்" என்றும் "அருளாலேசுவரம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது விக்கிரம சோழனின் மற்றொரு பெயர் "அகளங்கன்" என்பதால் இத்தலம் "அகளங்கேஸ்வரம்" என்று வழங்கப்பட்டுள்ளது. "அகளங்கன்" என்பதற்குக் கலங்கமற்றவன், குற்றமற்றவன், மாசிலான் என்பது பொருளாகும். 

 விக்ரமசோழனின் (கிபி 1118-1136) காலக் கல்வெட்டுகள் இத்திருக்கோயிலில் திருச்சுற்று மாளிகை அமைக்கவும் அன்றாட பூஜைகளுக்காகவும் தானம் வழங்கிய செய்தியைத் தெரிவிக்கின்றது. 

இரண்டாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுகள் இத்தல வழிபாட்டிற்காகக் கொடைகள் அளித்த விபரங்களையும் ஈசன் அருளாலீசுவரர் என்று வழங்கப்பட்டதையும் தெரிவிக்கின்றது. 

முதலாம் பராந்தகனின் விருதுப் பெயரான "மதுராந்தகன்" என்ற "வீரசோழன்" பெயரில் உள்ள "வீரசோழப் பேரேரி" திருக்கோயிலின் மிக அருகில் உள்ளது. மிகப்பெரிய நீர் ஆதாரமான இந்த மதுராந்தகத்து ஏரி பராந்தகன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் உத்தம சோழனாகிய மதுராந்தகன் காலத்தில் வெட்டப்பட்டது என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் இடையே இரு வேறு கருத்துகள் உள்ளன. 

மதுராந்தக சதுர்வேதி மங்கலத்தில் மதுராந்தகச்சேரி இருமுடி சோழச்சேரி ஆகிய குடியிருப்புப் பகுதிகளும் முதல் குலோத்துங்க சோழனின் மனைவியான தீன சிந்தாமணி பெயரில் ஒரு வணிகக் கடைவீதியும் இருந்துள்ளதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. வீரநாராயண வீதி, வீரசோழன் வாய்க்கால், வீரசோழப் பேரங்காடி ஆகியவை பாராந்தக சோழனின் பெயரால் அமைந்திருந்ததையும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகின்றது. 

அருளாழீசுவரர்

கருவறையில் வட்ட வடிவமான ஆவுடையார் மீது அருளாழீஸ்வரர் லிங்கத் திருமேனியாக எழுந்தருளியுள்ளார். இவருக்கு "அகளங்கேஸ்வரர்" என்று திருநாமம் வழங்கப்படுவதைக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. ஈசன் கிழக்கு நோக்கியவாறு திருமுக தரிசனம் தருகின்றார். கருவறையின் தேவகோட்டத்தில் விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை அருள்பாலிக்கின்றனர். பிராகாரத்தில் நால்வர், விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், நடராஜர், பைரவர், வரசித்தி விநாயகர், லட்சுமி விநாயகர், நாகர் ஆகியோர்  திருமேனிகளாக எழுந்தருளியுள்ளனர்.

ஏலவார்குழலி அம்பிகை 

காஞ்சியம்பதியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அருளும் அம்பிகையின் திருநாமம் "ஏலவார் குழலி" என்பதாகும். அதே திருநாமத்துடன் மதுராந்தகம் அருளாழீஸ்வரர் திருத்தலத்திலும் "ஏலவார் குழலி அம்பிகை" எழுந்தருளியுள்ளார். காஞ்சிபுரத்தில் கம்பை ஆற்றின் கரையில் மணல் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அம்பிகை வழிபட்டபோது ஈசனின் திருவிளையாடலால் 

கங்கை நீர் பெருக்கெடுக்க, மென்மையான தன் கூந்தலை பின்னி, லிங்கத்திற்குக் கூந்தலால் தடுப்பு ஏற்படுத்தி வெள்ளத்தில் இருந்து காத்தார் அம்பிகை. (ஏலம்+ வார்+குழலி= ஏலவார் குழலி) ஏலத்தின் நறுமணம் போன்ற வாசனை மிக்க கூந்தல் உடையவள் என்பதால் அம்பிகைக்கு ஏலவார் குழலி என்று அழகு தமிழில் திருநாமம் ஏற்பட்டுள்ளது. 

அருளாழீஸ்வரர் தன் பக்தர்களுக்கு அருளை வழங்குவதில் ஈடு இணையற்றவராக விளங்குவதால் இவருக்கு அருளாழீஸ்வரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. தன் பதியின் வரமளிக்கும் தன்மைக்குச் சற்றும் குறையாதவராக தன் பக்தர்களை காத்தருள்வதில் வரப்ரசாதியாக ஏலவார் குழலி அம்பிகை திகழ்கின்றாள். 

திருமண வரம் வேண்டியும் மாங்கல்ய பலம் கூடவும் மழலை வரம் அருளவும் ஏலவார் குழலி அம்பிகையின் சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபடுகின்றனர் அன்பர்கள்.

வழக்கமான பூஜைகளோடு பிரதோஷ நாட்களிலும், மகா சிவராத்திரி நாட்களிலும் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு தினங்கள் அபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது.

இத்திருக்கோயிலுக்கு17.9.2023 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. 

இத்திருக்கோயில் காலை 7:00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும். 

மதுராந்தகம் பேருந்து நிலையத்திலிருந்து 800 மீட்டர் தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையின் அருகிலேயே உள்ளது இத்திருத்தலம். 

மேலும் விபரங்களுக்கு திருக்கோயிலின் அர்ச்சகர் திரு சரவண குருக்கள் அவர்களை 
97917 96102 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE