அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், கூவத்தூர்.

By தேஜஸ்

    இறைவன்: வாலீஸ்வரர்
    இறைவி    : திரிபுரசுந்தரி 
    தீர்த்தம்      : வாலி தீர்த்தம் 
    ஆகமம்       : சிவாகமம்

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டத்தில் உள்ள கூவத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமையான ஸ்ரீ திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ வாலீஸ்வரர் திருக்கோயில். 

இத்திருக்கோயில் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் இத் திருக்கோயிலின் புனித தீர்த்தமான "வாலி தீர்த்தம்" என்னும் அழகிய தடாகம் திருக்கோயிலின் எதிரில் அமைந்துள்ளது. 

திருக்கோயிலின் உள்ளே நுழைந்ததும் பலிபீடம், துவஜ ஸ்தம்பம், நந்தியம்பெருமான் ஆகியவை அமைந்துள்ளன. மூலவர் சன்னதிக்கு வெளியே அர்த்தமண்டபத்தில் துவார பாலகர்கள் அருள் பாலிக்கின்றனர். 

கருவறையைச் சுற்றியுள்ள தேவகோட்டத்தில் ஸ்ரீ விநாயகப் பெருமான், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின் றனர். 

பிராகார வலத்தில் ஸ்ரீ விநாயகர், பெருமாள், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்ரமணியர், திரிபுரசுந்தரி அம்மன் சன்னதி, சந்திரன், சூரியன், சனீஸ்வரர், பைரவர், சண்டிகேஸ்வரர் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளன. அம்பிகை திரிபுரசுந்தரி தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கின்றார். 

திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமானின் தேவியான திரிபுரசுந்தரி அம்மன் தன்னை மனம் உருக வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு பல நன்மைகளை வாரி வழங்குகின்றார். திருமணத்தடையால் பாதிக்கப்பட்டிருக்கும் அன்பர்கள் வெள்ளிக்கிழமைகளில், இந்த அன்னையை  தரிசனம் செய்து நெய் தீபம் ஏற்றி வழிபட அவர்களுக்கு உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்கள் கண்கூடாக அனுபவித்து வரும் உண்மையாகும். மழலை பாக்கியம் இல்லாத அன்பர்களும் இத்தலத்தில் அன்னை திரிபுரசுந்தரிக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து வழிபட, அவர்களது இல்லத்தில் விரைவில் மழலை ஒலி கேட்க ஆசீர்வதிப்பாள் அம்பிகை.

வாலீஸ்வரரின் லிங்கத் திருமேனியில் 16 பட்டைகள் உள்ளன. 16 பட்டைகள் கொண்ட லிங்கத் திருமேனிக்கு "ஷோடச லிங்கம்" என்று பெயர். சக்தி வாய்ந்த இந்த லிங்கத் திருமேனியை வணங்குபவர்கள் கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், செல்வம், அழகு, இரக்கம், அறிவு, துணிவு, இளமை, வாழ்நாள், நல் விதி, நுகர்ச்சி மற்றும் நோயின்மை ஆகிய 16 செல்வங்களையும் பெற்று பூரணமான வாழ்க்கை அமையப்பெறுவர் என்பது இங்கு ஈசனை வழிபாடு செய்பவர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

இத்திருக்கோயில்  கருவறை, அர்த்தமண்டபம் மற்றும் மகா மண்டபம் ஆகிய அமைப்புகளைக் கொண்டுள்ளது. சமீபத்திய காலத் திருப்பணியாக பிராகாரத்தில் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. தமிழில் "கூவம்" என்ற சொல்லுக்கு "கிணறு" என்பது பொருளாகும். கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நர்மதை, துங்கபத்ரா மற்றும் காவேரி ஆகிய நதிகள் கூவத்தூர் தலத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமானை வழிபட்டு புனிதம் பெற்றதோடு அத்தலத்தில் எட்டு புனித தீர்த்தங்களாக (கிணறு) அருள்பாலிக்கின்றன. இதனால் இத்தலத்திற்கு கூவத்தூர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. 

இத்தலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்ததாகக் கூறப்பட்டாலும் இத்திருக்கோயிலின் பழைமையை அறியும் வண்ணம் கல்வெட்டுகள் ஏதும் இத்தலத்தில் இல்லை. விஜயநகர மன்னர்கள் காலத்தில் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் கட்டப்பட்ட போது இத்திருக்கோயிலுக்கும் திருப்பணி செய்யப்பட்டிருக் கலாம் என்று கருதுகின்றனர். 

வானர அரசர்களின் தலைவனான வாலி இத்தலத்தில் ஈசனை வழிபட்டு தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதால் இத்தலத்திற்கு "வாலீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. 

சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னையில் இருந்து 80 கி.மீ. தூரத்திலும் கல்பாக்கத்தில் இருந்து 13 கி.மீ. தூரத்திலும் செங்கல்பட்டில் இருந்து 38 கி.மீ தூரத்திலும் உள்ளது கூவத்தூர் வாலீஸ்வரர் திருக்கோயில். 

இத்திருக்கோவில் காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் திறந்திருக்கும். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE