இறைவன்: ஆதிகேசவப் பெருமாள்
இறைவி :மரகதவல்லி
தீர்த்தம் : அஷ்ட தீர்த்தங்கள்
ஆகமம் : வைகானஸம்
கூவத்தூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் சென்னையிலிருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில் சென்னையிலிருந்து 80 கிலோமீட்டர் தூரத்திலும் கல்பாக்கத்திலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும் செங்கல்பட்டிலிருந்து 38 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. கூவத்தூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் இத்திருக்கோயிலை அடையலாம்.
புனிதம் பெற்ற புண்ணிய நதிகள்
"கூவம்" என்ற சொல்லுக்கு தமிழில் "கிணறு" என்று பொருள். கூவத்தூர் திருக்கோயிலில் 8 புனித தீர்த்தங்கள் கிணறுகளாக உள்ளன. ஏழு தீர்த்தங்கள் கோயில் பிராகாரத்திலும் ஒரு தீர்த்தம் ஆஞ்சநேயர் திருக்கோயிலின் அருகிலும் உள்ளன.
கங்கை, யமுனை, சரஸ்வதி, சரயு, கோதாவரி, நர்மதை, துங்கபத்திரா மற்றும் காவேரி ஆகிய எட்டு நதிகளே இத்தலத்தில் எட்டு தீர்த்தங்களாக உள்ளது என்றும் கூறப்படுகின்றது. மனிதர்கள் தங்களது பாவங்களை விட்டுச் செல்வதால் வருத்தம் அடைந்த இந்த எட்டு நதிகளும் தங்களைப் புனிதப்படுத்திக் கொள்ள பிரம்ம தேவனின் உதவியை நாடியது.
பிரம்மதேவன் அந்தப் புனித நதிகளிடம் பூவுலகம் சென்று அங்கு வேத கோஷ முனிவரை சந்தித்து அறிவுரை பெறக் கூறினார். நதிகளும் அவ்வாறே சென்று வேத கோஷ முனிவரைச் சந்திக்க அவர் இத்தலத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமானை வணங்க அறிவுறுத்தியதோடு உங்களது பாவங்களை தீர்க்க வல்லமை பெற்றவர் இவர் ஒருவரே என்றும் கூறினார்.
வேதகோஷ முனிவரின் அறிவுரைப்படி இந்த புனித நதிகள் ஆதிநாயகரான ஆதிகேசவப் பெருமாளுக்கு நித்ய பணிவிடைகள் செய்து பூஜித்து வந்தனர். இந்த புனித நதிகளின் அதீத பக்தி மற்றும் பூஜையில் மகிழ்ந்த ஆதிகேசவப்பெருமாள் இவர்களது வேண்டுதல்களை நிறைவேற்ற அருள் புரிந்தார். மேலும் இந்த புனித நதிகள் எட்டு கிணறுகள் வடிவில் இத்தலத்தில் தங்கவும் ஆசீர்வதித்தார்.
அனுமனுக்கு அருளிய
பெருமாள்
இலங்கை மன்னன் ராவணனைக் கொன்ற பிறகு ஸ்ரீ ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. இந்த தோஷத்தில் இருந்து விடுபட ஆலகால விடம் உண்டு அகிலம் காத்த அம்பிகை பாகனின் சிவலிங்கத் திருமேனிக்கு பூஜை செய்ய விரும்பினார் ராமர். லிங்க மூர்த்தியைக் கொண்டுவர காசி தலத்திற்கு விரைந்தார் அனுமன். ஆனால் குறித்த வேளை முடிவதற்குள் அனுமன் திரும்பி வரவில்லை. அதனால் அன்னை சீதாதேவி மணலில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய, அந்த லிங்கத் திருமேனியை பூஜை செய்து தமது தோஷம் நீங்கப் பெற்றார் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி.
காசியிலிருந்து திரும்பிய அனுமன் பூஜைகள் முடிவுற்றதை எண்ணி ஏமாற்றமடைந்து தன் முகத்தில் அதிருப்தியை வெளிக் காட்டினார். இதனை சீதா தேவியும் கண்ணுற்றார். தனது அன்னைக்கு நிகரான சீதையிடம் தன்முக பாவனையால் அதிருப்தியைக் காட்டிய அனுமன் இதுவும் பாவச் செயலே என்று மனம் வருந்தி கூவத்தூர் திருத்தலம் வந்து இந்த எட்டு புனித தீர்த்தங்களில் நீராடி ஆதிகேசவப் பெருமானை வணங்க பாவம் நீங்கியதாக ஒரு புராண வரலாறும் இத்தலம் பற்றிக் கூறுகின்றது.
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள்
ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் இத் திருக்கோயிலில் நின்ற திருக்கோல நாயகராக ஆறு அடி உயரத்தில் அற்புதத் திருக்காட்சி தருகின்றார். பெருமான் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாங்கியும் கீழ் வலது திருக்கரத்தில் அபய முத்திரை காட்டியும் கீழ் இடது திருக்கரம் கடிக அஸ்தத்துடனும் காட்சியளிக்கும் அழகினைக் காணக் கண் கோடி வேண்டும். எம்பெருமானின் வலது புறத்தில் இக்கோயிலின் தாயாரான மரகதவல்லித் தாயாரும் இடது புறத்தில் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் சன்னிதியும் உள்ளன.
திரேதா யுகத்திலிருந்து இப்பெருமான் இத்தலத்தில் எழுந்தருளியிருப்பதாகவும் துவாபரகர யுகத்தில் பஞ்சபாண்டவர்களில் முதல்வரான ஸ்ரீதர்மர் இத்தலத்தில் வணங்கிப் பல பேறுகள் பெற்றதாகவும் திருக்கோயிலின் புராண வரலாறு தெரிவிக்கின்றது.
மகாபாரதப் போரில் துரியனுக்கு ஆதரவாக நின்ற கர்ணனே தனது
தலைமகன் என்பதை மறைத்ததால் ஏற்பட்ட பாவம் தீர குந்திதேவி இத்தலத்தில் பெருமானை வழிபட்டதாக அன்பர்கள் தெரிவிக்கின்றனர்.
கலியுகத்தில் தாயைக் கவனிக்காமல் கைவிட்ட நபர்கள் பெண் பாவத்தால் அவதியுறும் நபர்களும் இங்குள்ள அஷ்ட தீர்த்தங்களில் நீராடிப் பெருமானை வணங்க அவர்களின் பாவங்கள் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகின்றது.
கூவத்தூர் பெருமானை வணங்கியதால் நன்மைகள் பெற்ற அன்பர்கள் பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்ஜனம் செய்து புத்தாடைகள் அணிவித்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகின் றனர்.
இத்தலத்தில் தும்பிக்கை ஆழ்வாரான விநாயகருக்கும் 12 ஆழ்வார்களுக்கும்,ஸ்ரீ சுதர்சனர், நரசிம்மர், அஷ்டபுஜ துர்க்கை, கருடன், அனுமன் ஆகியோரும் கருவறைக்கு வெளியே துவார பாலகர்களாக ஜயன் மற்றும் விஜயனும் அருள்பாலிக்கின் றனர்.
இத்திருக்கோயில் விஜயநகர மன்னர்கள் காலத்தில் சதாசிவராயரால் நிர்மாணிக் கப்பட்டது என்று இத்தலத்தின் அருகில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் கண்டெடுக்கப் பட்ட கல்வெட்டின் மூலம் அறிய முடிகின்றது.
காலை 6:00 மணி முதல் 10.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காக திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
மேலும் விபரங்களுக்கு திரு கோபு பட்டாச்சாரியார் அவர்களை 9790846554 என்ற எண்ணிலும் இத்திருக்கோவில் நிர்வாகியை 09444609788 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.