அருள்மிகு முன்குடுமீஸ்வரர் திருக்கோயில், பொன்விளைந்த களத்தூர்.

By நந்தா

  இறைவன் : முன் குடுமீஸ்வரர்
  இறைவி     : மீனாட்சி அம்மன் 
  விருட்சம்    : வில்வம் 
  தீர்த்தம்       : வில்வ தீர்த்தம் 
  ஆகமம்        : சிவாகமம்

வேதியர் ஒருவர் தனது நிலத்தைப் பராமரிக்க விவசாயி ஒருவருக்கு குத்தகைக்குக் கொடுத்திருந்தார்.  இந்த விவசாயி, ஈசன் மேல் அதீத பக்தி கொண்டவராவார்.  இந்த விவசாயியின் சொந்த நிலத்தில் விளைந்திருந்த நெற்கதிர்களில் தங்கம் இருப்பதைக் கண்ணுற்ற அந்தணர் தனது நிலத்தில் விளைந்த நெல் மணிகள் முழுவதையும் அந்த சிவபக்தரான  விவசாயியை எடுத்துக்கொள்ளச் சொன்னார். அதற்குப் பதிலாக கூலித் தொழிலாளியான சிவபக்தரின் நிலத்தில் விளைந்த நெல்மணிகளை தாம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னார். 

இதற்கு சிவபக்தரும் ஊர் பொது மக்களும் மறுப்பு தெரிவிக்கவே வழக்கு சோழ மன்னரிடம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த மன்னர் சிவபக்தரின் நிலத்தில் விளைந்த தங்கம் முழுவதையும் அரசு கருவூலத்தில் செலுத்த ஆணையிட்டார். வேதியர் தனது முழுப் பங்கையும் இழந்துவிட, சிவ பக்தரான விவசாயிக்கு அதிக நெல் விளைச்சல் கிடைத்தது.  இதனால் இந்த ஊருக்குப் "பொன் விளைந்த களத்தூர்" என்ற திருநாமம் ஏற்பட்டது. 

குருக்களுக்கு அருளிய ஈசன்

இப்பகுதியை அரசாண்ட சோழ மன்னர், தனக்கு மழலை வரம் வேண்டி ஈசனை வழிபட வந்தார். அவ்வமயம் ஈசனுக்குச் சாற்றிய மலர் மாலையை மன்னனுக்கு குருக்கள் அணிவித்திட, அந்த மாலையை தனது அரசியிடம் கொடுத்தார் மன்னர். 

ஈசனுக்குச் சாற்றிய மாலையில் தலைமுடி இருந்துள்ளது கண்டார் அரசி. மன்னரிடம் இச்செய்தியை 
தெரிவிக்கவே,  இறைவனுக்கு சாற்றிய மாலையில் தலைமுடி வந்தது எப்படி வந்தது என்று குருக்களை நோக்கி கோபக்கனலை வீசினார் மன்னர்.

செய்வதறியாது திகைத்த குருக்களும் "இது இறைவனது திருமுடி" என்று பயத்தால் நடுங்கிக் கூறினார். மன்னரும் "இறைவனுக்கு என்ன கூந்தலா இருக்கிறது" என்று கேட்க குருக்களும், ஆம்! நாளை மன்னருக்கு அக்கூந்தலை காண்பிப்பதாகத் தெரிவித்தார். 

இரவு முழுவதும் பயந்து நடுங்கிய குருக்கள் சோழ மன்னரின் தண்டனையில் இருந்து எப்படியாவது ஈசன் காத்தருள வேண்டும் என்று அர்த்த ஜாமம் வரை உறங்காமல் பூஜை செய்தார். 

மறுநாள் மன்னரும் தன் புடை சூழ கோயிலுக்கு வந்தார். இரவு முழுவதும் உறங்காமல் பிரார்த்தனை செய்த குருக்கள் தன் கைகள் நடுங்கியவாறு தீபமேற்றி ஈசனின் திரு முன்பு ஆரத்தி எடுத்தார். தீப ஒளியில் ஈசனைத் தரிசித்ததும் குருக்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஈசனின் சிவலிங்கத் திருமேனி மீது வாரி முடிக்கப்பட்ட கூந்தலுக்கான குடுமியிருந்தது.  ஆபத்தில் உள்ள தன் பக்தர்களை அரவணைப்பதில் அம்பிகை பாகனுக்கு நிகரான தெய்வம் வேறில்லை என அனைவரும் மெய்சிலிர்த்து இறைவனின் இத் திருவிளையாடலை எண்ணி மனம் நெகிழ்ந்தனர். இதனால் இத்தல இறைவனுக்கு "முன் குடுமீஸ்வரர்" என்ற திருநாமம் ஏற்பட்டது.

சற்று உயரமான திருமேனியாக த்திகழும் சுயம்பு லிங்கத் திருமேனியான ஈசனின் சிரசில் இன்றும் குடுமியை தரிசனம் காண முடிகின்றது. 

ஈசனுக்குத் தொண்டு செய்ததால் 63 நாயன்மார்களில் ஒருவராகும் பேறு பெற்ற கூற்றுவநாயனார் பிறந்த தலம் "பொன் விளைந்த களத்தூர்" என்பதும் நள வெண்பாவை இயற்றிய புகழேந்திப் புலவர் பிறந்த ஊர் இது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

திருக்கோயில் அமைப்பு 

இத்திருக்கோயில் கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம் மற்றும் முக மண்டபம் ஆகியவற்றைக் கொண்டு அமைந்துள்ளது. ஈசனின் கருவறை மீது கஜபிருஷ்ட விமானம் எழுப்பப்பட்டிருந்தாலும் கருவறை சதுர வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டத்தில் விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். அம்பிகை மீனாட்சி தெற்கு நோக்கிய சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். 

கல்வெட்டுகள் 

பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் காலத்தில் செங்கல் தளியாக எழுப்பப்பட்ட இந்த  திருக்கோயில் விக்ரமசோழனின் காலத்தில் கற்றளியாகப் புனர மைக்கப்பட்டுள்ளது. கல்வெட்டுகளில் ஈசனின் திருநாமம் "பெருந்திருக்கோயில் மகாதேவர்" என்றும் மூன்றாம் ராஜராஜனின் கல்வெட்டுகளில் இந்த ஊர் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்துக் களத்தூர் கோட்டத்தில் களத்தூர் நாட்டு களத்தூர்" என்றும் வழங்கப்பட்டுள்ளது. 

சிம்மவர்மனின் கல்வெட்டு, திருக்கோயிலுக்கு நீர் தேக்கம் மூலமாக பெறப்படும் வருமானத்தைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் 12 வது ஆட்சி ஆண்டில் "அனபாய மூவேந்த வேளாண்" என்பவர் சில கிராமங்களை இணைத்து "குலோத்துங்க சோழ சிறு தொண்ட தொகை நல்லூர்" என்று இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளதை ஒரு கல்வெட்டு தெரிவிக்கின்றது.

இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் அனைத்தும் மத்திய தொல்லியல் துறையின ரால் படியெடுக்கப்பட்டு இவர்களது அதிகாரம் பெற்ற பதிவு செய்யப்பட்ட ஒரு அறக்கட்டளை மூலம் இத்திருக்கோயில் நிர்வாகம் நடத்தப்படுகின்றது. 

முன் குடுமீஸ்வரர் திருக்கோயிலுக்கு 27.8. 2017 அன்று மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பொன் விளைந்த களத்தூர் திருக்கோயில். செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து ஷேர் ஆட்டோக்களும் உள்ளன. செங்கல்பட்டு ரயில்வே நிலையத்தில் இருந்தும் ஆட்டோ மூலமாக பொன் விளைந்த களத்தூர் செல்லலாம். 

இத்திருக்கோவில் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும். 

மேலும் விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். 
      97890 49704 
      99624 67355 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE