அருள்மிகு கச்சிநெறிக்காரைக்காட்டீஸ்வரர் திருக்கோயில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம் - 631 501.
காஞ்சிபுரம் மாவட்டம்.
*இறைவன் - சத்தியவிரதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர்.
*இறைவி - இத்தலத்திற்குரிய உற்சவ அம்பாளாக பிரமராம்பிகை
தீர்த்தம் - இந்திர தீர்த்தம்.
இப்பகுதியில் வேப்பமரங்கள் அடர்ந்திருந்தமையால் இத்தீர்த்தம் மக்களால் வேப்பங்குளம் என்றழைக்கப்படுகிறது.
*தலமரம் - காரைச் செடி. தற்போது இல்லை.
*பாடல் பெற்ற தலம்:
இக்கோயில்
காஞ்சிபுரத்தில் உள்ள பாடல் பெற்ற ஐந்து திருக்கோயில்களுள் ஒன்று. இங்கு சம்பந்தர் தேவாரப்பதிகம் அருளியுள்ளார்.
*ஞானசம்பந்தர் வாக்கில் "கச்சிநெறிக்காரைக் காட்டாரே" என்றே திருப்பெயர் வருகிறது. ஒரு காலத்தில், இப்பகுதி காரை (முட்) செடிகள் நிரம்பியிருந்ததால் கச்சிநெறிக், "காரைக்காடு" என்று பெயர் பெற்றது.
*இத்தல இறைவன் - சத்தியவிரதேஸ்வரர் பெயரைஒட்டியே காஞ்சிக்கு 'சத்தியவிரதக்ஷேத்திரம்' என்ற பெயருண்டாயிற்று.
*இது இந்திரன் வழிபட்ட தலம். அதனால் இப்பகுதிக்கு இந்திரபுரி என்றும் பெயர் வழங்கியது.
*மக்கள் வழக்கில் இக்கோயில் 'திருக்காலீஸ்வரர் கோயில்' என்றும் அமைவிடம் காலிமேடு என்றும் வழங்குகின்றது.
*நித்திய பூஜை இருவேளை மட்டுமே நடைபெறுகின்றது.
*வெள்ளாழஞ் செட்டியார் மரபைச் சேர்ந்தவர்களே அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டு நிர்வாகம் செய்து வருகிறார்கள்.
*சத்தியநாதேஸ்வரர்காஞ்சிபுரத்தின் ஆதி நாயகராவார். ஜோதிலிங்கத்தை விஷ்ணு வழிபடுவதற்கு முன்பாகவும், மண் லிங்கமான ஏகம்பனை, அம்பிகை வழிபடுவதற்கு முன்பாகவும் தோன்றியது இந்த ஆலயம் என்று கூறப்படு கிறது.
*மேற்கு நோக்கிய சந்நிதியில் மூலவர் சுயம்புமூர்த்தியாக, சற்று உயர்ந்த பாணத்துடன் -லேசான செம்மண் நிறத்தில் காட்சியளிக்கிறார்.
*மூலவருக்குப் பக்கத்தில் கருவறையில் அம்பாள் உற்சவத் திருமேனி வைக்கப்பட்டுள்ளது.
அன்னை போக சக்தியாக (உலோகத் திருமேனியில்) எழுந்தருளி உள்ளார். அன்னையின் திருப்பெயர் பிரமராம்பிகை என்பதாகும். அன்னை வலது கரத்தில் மச்ச ரேகையும், தான்ய ரேகையும், மீனின் வடிவம் மற்றும் நெற்கதிர் வடிவம் அமைக்கப் பட்டுள்ளன.
*சூரியனின் மூலத் திருமேனியும் உள்ளேயே உள்ளது.
சந்திரனுக்கும், வியாழனின் பத்தினியான தாரைக்கும் பிறந்தவர் புதன். தன் பிறப்பின் ரகசியம் அறிந்து மனம் வருந்திய புதன், காரைக்காடு சத்திய விரத நாதரை வழிபட்டு நவக்கிரகங்களில் ஒன்றாகத்திகழும் வரம் பெற்றார். எனவேதான் இந்த தலத்தில் சிவன் சன்னிதியை நோக்கி புதன் சன்னிதி அமைந்துள்ளது.
*புதன் கிரக தோஷம் நீக்கும் தலமாக இத்தலம் விளங்குகிறது.
*புதன்கிழமைகளில் இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, புதனுக்கு பச்சைத் துணி சாற்றி, பச்சைப் பயறு படைத்து வழிபட்டால் புதன் கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்.
*மற்றோர் புராண வரலாறு :
தனது தவ வலிமையால் விரும்பிய வடிவம் பெறும் வரம் பெற்றவன் இந்திரன். ஒரு முறை கவுதம மகரிஷியின் உருவம் தரித்து, அவரது மனைவி அகல்யாவை அடைந்தான். இதையறிந்த மகரிஷி, இந்திரனுக்கு சாபமிட்டார். அகல்யாவையும் கல்லாக மாற்றினார்.
அந்த சாபம் நீங்குவதற்காக அகல்யா வழிபட்ட தலம் இது என்று தல புராணம் தெரிவிக்கிறது.
*இக்கோயில் காஞ்சிபுரம் பேருந்துநிலையத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ. தொலைவில் ஊருக்கு சற்றுத் தள்ளி அமைந்துள்ளது.
ரயில்வே ரோடில் உள்ள தலைமை அஞ்சல் நிலையத்திற்கு எதிரில் திருக்காலிமேட்டிற்குச் செல்லும் பாதையில் சென்று இக்கோயிலை அடையலாம். கோயில்வரை கார், வேன் முதலியன செல்லும்.