செவ்வாய் தோஷம் நீங்க ஆங்காரக பகவான் தரிசனம்!

By தேஜஸ்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள புகழ்பெற்ற செவ்வாய் பரிகார ஸ்தலமாகும்.
செவ்வாய் தோஷம் நீங்க இங்கு அங்காரகனை வழிபடுகின்றனர்.

வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.
இங்குள்ள வைத்தியநாதர் நோய்தீர்க்கும் வல்லவர் என்று போற்றப்படுகின்றார்.

நவக்கிரகங்களுள் ஒன்றான செவ்வாய் என்னும் அங்காரகன், தொழுநோயால் மிகத்தீவிரமாக பாதிக்கப்பட்டதின் விளைவாக கடவுள் சிவனார் வைத்தியநாதசுவாமியாக எழுந்தருளி அவரின் பிணிதீர்த்தார்.
ஆகையால் இக்கோயில் ஒன்பது கிரக கோயில்களில் இது செவ்வாய் கிரகத்தை குறிக்கும் பரிகாரத்தலமாக விளங்குகின்றது.

செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார்.
இக்கோயிலில் வைத்தீஸ்வர சுவாமி மற்றும் அவரின் இணையான தையல்நாயகி அம்பாள் இருவரும் இணைந்து மூலிகை தைலத்துடன் நின்று பக்தர்களுக்கு காட்சித் தருகின்றனர்.

நோய்தீர்ப்பதில் வல்லவரான தன்வந்திரி பகவானுக்கும் இங்கு தனிச்சன்னதி உள்ளது.
இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு திருச்சாந்து’ எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது.

இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை.

இராமரின் மனைவி சீதையை இலங்கை மன்னன் இராவணன் கவர்ந்து சென்றபொழுது கழுகு மன்னனான சடாயு இடைமறித்து தடுத்ததினால், இராவணனின் தாக்குதலுக்குள்ளான சடாயுவின் சடலத்தை..
இராமன் மற்றும் இலட்சுமணன் இருவரும் இங்கு அமைந்துள்ள குளத்தின் அருகே வைத்து சடாயுவின் சிதைக்கு தீமூட்டி எரிக்கப்பட்டதினால் இக்கோயிலில் அமைந்துள்ள குளம் சடாயு குண்டம் என்றழைக்கப்படுகின்றது.
கோவிலுக்குள் இன்னமும் ஜடாயு இடம் என்று ஒன்று உள்ளது.

வைத்தீஸ்வரன் கோவில், சித்தர்கள் பலரோடு நெருங்கிய தொடர்புடையது. வைத்தீஸ்வரனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர்.

அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

மற்ற கோயில்களில் நவக்கிரக சன்னதி சிவபெருமான் சன்னதியின் முன்பக்கமாகவே அமைக்கப்பட்டிருக்கும்.
இங்கு மட்டுமே பின்பக்கம் உள்ளது. நவக்கிரகங்கள் என்றாலே ஆளுக்கொரு திசையை பார்த்துக்கொண்டு தானே நிற்பார்கள்.

ஆனால் இங்கு மட்டும் தான் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையில் காணப்படுகின்றன.
ஒரே நேர்கோட்டில் நின்று வைத்தியநாதருக்கு அடங்கி, கிரக பலனை பக்தர்களுக்கு சாதகமாக்கி நோய் மற்றும் தோஷங்களை நீக்குவதாக நம்பிக்கை !

உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர்.

தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இவரை வேண்டி உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

செல்வமுத்துக்குமார சுவாமி சன்னதியில் அர்த்தஜாமபூஜையில் முருகனின் திருவடிகளில் பயன்படுத்தப்படும் சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது !!

வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் ‘செல்வ முத்துக்குமார சுவாமி’ என அழைக்கப்படுகிறார்.

அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் – 609 117. நாகப்பட்டினம்.
மயிலாடுதுறை – சீர்காழி செல்லும் வழியில் மயிலாடுதுறையிலிருந்து (18 கி.மீ) வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு ரயில் நிலையம் உள்ளது. உழவன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் இங்கு நின்று செல்கிறன.

நாட்பட்ட நோய்களாலும் தீராப் பிணிகளாலும் அவதியுறுவோர், வைத்தியநாதரை நினைத்து மனம் உருகிவேண்டினால் நிச்சயம் நோயிலிருத்து குணம் அடையலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE