இறைவன்: ஜெகந்நாதர்
இறைவி : திருமங்கைவல்லி
தீர்த்தம் : பிருகு தீர்த்தம்
விருட்சம் : பாரிஜாதம்
ஆகமம் : வைகானசம்
துவாபர யுகத்தின் இறுதிக் காலத்தில் தர்மம் குறைந்து அதர்மம் தலை தூக்கியது. பெருமாள் தமது திருக்கரத்தில் உள்ள சுதர்சன சக்கரத்தின் அம்சமாக மக்களை நல்வழிப்படுத்த "பக்திசாரர்" என்ற மகானை அவதரிக்கச் செய்தார்.
பக்திசாரர் அவதரித்த திருத்தலமே தொண்டை மண்டலத்தில் திகழும் திருமழிசை தலமாகும். தெய்வ சக்திகள் அனைத்தின் சாரமாகத் தோன்றிய பெருமைமிக்க திருத்தலம் என்பதால் இத்தலத்திற்கு "மகிசாரம்" என்ற திருநாமம் ஏற்பட்டது. வடமொழியில் "மகிசாரம்" என்ற இவ்வூர் தமிழில் "மழிசை" எனப்பட்டது.
திருமகளும் நிலமகளும் பெருமானுடன் சேர்ந்து நித்தியவாசம் செய்யும் திருத்தலம் என்பதால் "திரு" என்னும் அடைமொழி சேர்க்கப்பட்டுத் திருமழிசை என்று இத்தலம் வழங்கப்படுகின்றது.
இத்தலத்தில் பெருமானது விருப்பத்தினால் அவதரித்த பக்திசாரர் திருமழிசை தலத்தில் எழுந்தருளியிருக்கும் திருமங்கை வல்லி சமேத ஜெகந்நாதப் பெருமானிடம் பரமபக்தி கொண்டவராகத் திகழ்ந்ததால் பக்திசாரர் என்ற இந்த மகானுக்கு "திருமழிசை ஆழ்வார்" என்ற திருநாமமே விளங்கியது.
பிரம்ம ரிஷிகள் தவம் செய்த
திருத்தலம்
அத்ரி, பிருகு, வசிட்டர் மற்றும் பார்கவர் ஆகிய நான்கு முனிவர்களும் ஒரு சமயம் சத்திய லோகத்திற்கு சென்று பிரம்மதேவரை வணங்கினர். ஈரேழு பதினான்கு உலகங்களிலும் சிறிதளவு கூட தோஷம் இல்லாத திருத்தலமும் இக, பர சுகங்களை அளித்து, இறுதியில் முக்தியைத் தரும் திருத்தலத்தில் தாங்கள் தவமியற்ற விரும்புவதாகக் கூறினர். பூவுலகில் அத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருத்தலம் எது என்பதை கூறி அருளுமாறு நான்முகனை வேண்டினர்.
நான்முகனும் தேவலோக சிற்பியான விச்வகர்மாவை அழைத்து தராசுக் கோலினை கொண்டு வரக்கூறினார். அந்த தராசுக் கோலின் ஒரு பக்கத் தட்டில் திருமழிசை தலத்தினை வைத்து மறுபக்கத்தட்டில் பூவுலகில் உள்ள மற்ற இடங்களையும் மந்திர ரூபமாகச் சுருக்கி வைத்து பிரம்ம ரிஷிகளிடம் காட்டும்படி செய்தார். அப்போது திருமழிசை இருந்த தட்டு கனமாகி கீழிறங்கியதால் இத்தலத்தின் மேன்மையை அறிய முடிந்தது. இதனைக் கண்ணுற்ற முனிவர்கள் பிரம்ம தேவனுக்கு நன்றி கூறி வணங்கி திருமழிசை தலத்தை அடைந்து தவமியற்றி பேறுகள் பல பெற்றனர்.
சுதர்சன சக்கரத்தின் அம்சமான
திருமழிசை ஆழ்வார்
சுதர்சன சக்கரத்தின் அம்சமாகத் தோன்றிய திருமழிசை ஆழ்வார் திரு அவதாரம் செய்ததும் திருமழிசை திருத்தலமே ஆகும். அனைத்து விதமான கிரக தோஷங்களுக்கும் சிறந்த பரிகாரமாகத் திகழ்வது சக்கரத்தாழ்வார் திருச்சந்நிதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது ஆகும். அத்தகைய சக்தி வாய்ந்த சக்கரத்தாழ்வாரின் அம்சமான திருமழிசை ஆழ்வார் அருள் பாலிக்கும் திருத்தலம் இத்தலம் என்பதால் அனைத்து விதமான கிரக தோஷங்களுக்கும் மிகச்சிறந்த பரிகாரத்தலமாக திருமழிசைப் பெருமாள் திருத்தலம் திகழ்கின்றது.
அருள்மிகு ஜெகந்நாதப் பெருமான்
திருமழிசை சந்நிதியில் அருள்மிகு ஜெகந்நாதப் பெருமாள் தன் தேவியர் ருக்மிணி சத்தியபாமா சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் சேவை சாதிக்கின்றார். திருப்புல்லாணி யில் சயனத் திருக்கோலத்திலும் பூரி தலத்தில் நின்ற திருக்கோலத்திலும் திருக்காட்சி தரும் பெருமாள் திருமழிசைத் தலத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். திருப்புல்லாணி மற்றும் பூரி ஆலயங்களுக்கு இடையே திருமழிசை ஜெகந்நாதப் பெருமாள் திருத்தலம் அமைந்திருப்பதால், இத்தலம் "மத்திய ஜெகந்நாதம்" என்றும் "பூர்ண ஜெகந்நாதம்" என்றும் வழங்கப்படுகிறது. மூலவர் அருள் பாலிக்கும் விமானம் ஜெகந்நாத விமானம் என்று அழைக்கப்படுகின்றது. பெருமானின் கிரீடத்தில் நான்கு பக்கங்களிலும் அஷ்டலட்சுமிகள் உள்ளனர். இதனால் பெருமாளை வணங்குவதால் அஷ்டலட்சுமி களையும் வணங்கிய பேறு கிடைக்கும்.
பிருகு முனிவரும் மார்க்கண்டேய முனிவரும் தவமிருந்து இத்தலத்தில் பெருமானது திருக்காட்சியைக் கண்டதால் இந்த இரு முனிவர்களும் தவக்கோலத்தில் பெருமானை வணங்கியபடி கருவறையில் காட்சி தருகின்றனர். பூவுலகில் உள்ள புண்ணிய தலங்களின் எல்லா மகிமைகளையும் தன்னகத்தே கொண்டு விளங்கும் திருத்தலம் திருமழிசை என்பதால் இத்தலம் மகிசார திருத்தலம் என்று வணங்கப்படுகின்றது. இத்தலத்தில் பிறந்தவர்களுக்கும் இத்தலத்தின் பெருமானை வணங்கியவர்களுக்கும் மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.
திருமங்கைவல்லித் தாயார்
இத்தலத்தில் அருள் பாலிக்கும் தேவியான திருமங்கைவல்லித் தாயாரின் கருணை ததும்பும் திருமுக அழகை காலமெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று நம் மனம் ஏங்குகின்றது. அமைதியையும் தன்னம்பிக்கை யையும் பரம ஆனந்தத்தையும் தரும் தாயாரின் அற்புத தரிசனம் நம் கண்களை விட்டு அகல மறுக்கின்றது. இத்தலத்தில் உள்ள பிருகு தீர்த்தத்தில் நீராடி எம்பெருமானையும் தாயாரையும் வணங்கிட நாம் செய்த பாவங்கள் விலகி நன்மைகள் நம்மை நாடி வந்து சேரும். இத்தலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி திருக்காட்சி தரும் வைஷ்ணவியை வாசம் மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட விரைவில் திருமணம் கைகூடும் என்பது பக்தர்கள் அனுபவத்தில் கண்டு வரும் உண்மையாகும்.
ராகு கேது உடன் விநாயகர்
பெருமானது கருவறை சுற்றுச்சுவரில் உள்ள விநாயகர் தனது திருவயிற்றில் ராகுவும் கேதுவும் பின்னியுள்ளபடி திருக்காட்சி தருகின்றார். இந்த விநாயகரை வழிபட ராகு, கேது தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. விநாயகர் சதுர்த்தி நன்னாளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.
இத்தலத்தில் வடக்கு திசை நோக்கியவாறு வராகத் திருமுக அனுமன் சேவை சாதிக்கின்றார். மிகச்சிறந்த வரப்பிரசாதியான இந்த அனுமனை சனிக்கிழமை களில் நெய் தீபம் ஏற்றி அன்பர்கள் வழிபடுகின்றனர்.
சோழ மன்னர்கள் கால திருப்பணிக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மூன்றாம் குலோத்துங்க சோழன், கோப்பெருஞ்சிங்கன், விசயகண்ட கோபாலன், அரியண்ண உடையார், விருபாட்சன் ஆகிய மன்னர்களின் காலத்தில் இக்கோயிலுக்குத் திருப்பணிகள் செய்யப்பட்டுள் ளன. மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இத்தலம் "திருமழிசை அகரம்" எனப் புகழ்வாய்ந்த நகரமாக விளங்கியுள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இத்திருக்கோயில் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் உள்ளது 3 கி.மீ. தூரத்தில் உள்ளது திருமழிசை திருத்தலம்.
மேலும் விபரங்களுக்குத் திருக்கோயில் அலுவலகப் பணியாளர் திரு அருண் அவர்களை 98403 43535 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.