அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயில், ஆண்டார் குப்பம்.

By சரவணன்

  இறைவன்: பாலசுப்ரமணியர்
  இறைவி    : விசாலாட்சி 
  தீர்த்தம்      : வேலாயுத தீர்த்தம்
  விருட்சம்   : சரக்கொன்றை
  ஆகமம்      : காமிகம் 

படைக்கும் கடவுளான பிரம்மதேவன், படி அளக்கும் தெய்வமான ஈசனை வணங்க திருக்கயிலாய மலைக்குச் சென்றார். கயிலை நாதனையும் அன்னை பார்வதியையும் தரிசித்த நான்முகன் எதிரில் வந்த குமரப்பெருமானை மதியாது செல்ல முற்பட்டார். நான்முகனை அழைத்த கந்தப் பெருமான் "ஓம்" என்னும் பிரணவ மந்திரத்தின் பொருளுக்கு விளக்கம் கேட்டார்.

பிரணவத்தின் பொருளை அறியாத பிரம்மனை தனது வேல்களால் சிறைப்பிடித்தார் முருகப்பெருமான். பிரம்மனை பிரணவத்தின் பொருளுக்கு விளக்கம் கேட்டபோது, முருகன் தன் இரு  திருக்கரங்களை தமது இடுப்பில் வைத்தவாறு அதிகாரத் தோரணையோடு கேள்வி கேட்டுள்ளார். அந்த அதிகாரத் தோரணையோடு முருகன் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரிக்கு அருகில் ஆண்டார்குப்பம் என்ற திருத்தலத்தில் பாலசுப்ரமணியர் என்ற திருநாமத்தோடு அருள் பாலிக்கின்றார். 

பிரம்மனிடம் கேள்வி கேட்ட அதிகாரத் தோரணையில் முருகன் அருள்பாலிப்பதால் இவர் "அதிகார முருகன்" என்றும் அழைக்கப்படுகின்றார். முருகனுக்கு அருகில் இரண்டு யானை வாகனம் உள்ளது. 

ஆண்டியார் குப்பம் 

இத்தலம் அமைந்திருக்கும் பகுதிக்கு வந்த முருக பக்தரான ஒரு அடியார் நீராட நினைத்து அங்கிருந்த காவி உடையும் ருத்ராட்ச மாலையும் அணிந்த ஆண்டிகளிடம் நீராட திருக்குளம் எங்கே உள்ளது என்று கேட்டார். அப்போது ஆண்டிக் கோலத்தில் சிறுவனாக வந்த முருகப் பெருமான் அந்த முருக பக்தரை அழைத்து திருக்குளம் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி உடன் அழைத்துச் சென்றார். தனது வேலாயுதத்தை ஓர் இடத்தில் குத்தினார் முருகனாக வந்த சிறுவன். அந்த இடத்திலிருந்து நீர் பெருக்கெடுத்து குளமாக மாறியது. இத்திருக்குளமே இத்தலத்தின் புனித தீர்த்தமாக "வேலாயுத தீர்த்தம்" என்று வழங்கப்படுகின்றது. 

முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் சிறுவனாக திருக்காட்சி அளித்த திருத்தலம் என்பதால் இத்தலம் "ஆண்டியார் குப்பம்" என்று வழங்கப்பட்டு பின்னர் மருவி ஆண்டார்குப்பம் என்று வழங்கப்படுகின்றது. அதிகாரத் தோரணையில் ஆளுமைத் திறனோடு முருகப்பெருமான் திருக்காட்சி தருவதாலும் இத்தலத்திற்கு "ஆண்டார்குப்பம்" என்ற திருநாமம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர். 

கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் அருளும் பாலசுப்ரமணியரின் இடம் மற்றும் வலமாக வள்ளி மற்றும் தெய்வானை அருள்பாலிக் கின்றனர். காலையில் சிறுவனாகவும், உச்சிப் பொழுதில் இளைஞனாகவும், மாலையில் முதியவராகவும் ஒரே நாளில் மூன்று திருக்கோலங்களில் காட்சி தருகின்றார் ஆண்டார் குப்பம் பாலசுப்ரமணியர். மூலவரான இப் பெருமான் தன்னுடைய திருக்கரங்களில் எந்த ஆயுதங்களையும் ஏந்தாமல் ஏற்கெனவே தெரிவித்தபடி தமது இடுப்பில் கரங்களை வைத்தபடி அருள்பாலிக்கின்றார். 

மூலவரான பாலசுப்ரமணியரின் திருச்சந்நிதிக்கு எதிரில் நான்முகன் நீள் வட்ட சிலை வடிவில் இருக்கின்றார். அவருக்கு உருவம் ஏதும் இன்றி பிரம்மனுக்கு உரிய தாமரை, கமண்டலம் மற்றும் அட்சர மாலை மட்டுமே உள்ளது. 
             பூஜை நேரங்கள் 
  காலை சந்தி: காலை 7.00 மணி 
                             முதல் 9 மணிக்குள்.
  உச்சிக்காலம்: காலை 10.00 மணி 
                      முதல் 11.30 மணிக்குள்
  சாயரட்சை: மாலை 5.30 மணி 
                        முதல் 6:30 மணிக்குள்

 சிறந்த பரிகாரத் தலம்

இளைஞர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறவும் அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள் தங்களது பணி சிறந்து பதவி உயர்வுகள் பெறவும் திருமணம் கைகூடவும் இத்தல பாலசுப்ரமணியரை அன்பர்கள் வழிபடுகின்றனர். தங்களது பிரார்த்தனைகள் நிறைவேறி யதும் முருகப்பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து புத்தாடைகள் அணிவித்தும் சந்தன அலங்காரம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின் றனர். 

விழாக்கள் 

சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, குமார சஷ்டி, கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்கள் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படு கின்றன. சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் விழாவின்போது முருகன் தெய்வானை திருக்கல்யாணமும் ஒன்பதாம் நாள் முருகன் வள்ளி திருமணமும் நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் குமார சஷ்டியின் போது முருகப் பெருமானுக்கு லட்சார்ச்சனை நடைபெறுகின்றது. 

இத்தலத்திற்கு கடந்த 18.3.2016 அன்று சிறப்பாகக் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

ஆண்டார்குப்பம் முருகனை அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழால் பாமாலை சூட்டி வணங்கி உள்ளார். அந்த திருப்புகழ் பின்வருமாறு:-
 "அச்சாயிறுக்காணி காட்டிக்
                                         கடைந்த
செப்பார் முலைக்கோடு நீட்டிச்
                                            சரங்க
ளைப்போல் விழிக்கூர்மை நோக்கிக் குழைந்து ...... உறவாடி
அத்தா னெனக்காசை கூட்டித்
                                    தயங்க
 வைத்தா யெனப்பேசி மூக்கைச்
                                     சொறிந்து
அக்கா லொருக்கால மேக்கற் றிருந்தி ...... ரிலையாசை
வைச்சா யெடுப்பான பேச்சுக்
                                         கிடங்க
ளொப்பா ருனக்கீடு பார்க்கிற்
                                 கடம்பன்
மட்டோ எனப்பாரின் மூர்க்கத்
 தனங்க ...... ளதனாலே
மைப்பா கெனக்கூறி வீட்டிற்
                             கொணர்ந்து
புற்பா யலிற்காலம் வீற்றுக்
                                  கலந்து
வைப்பார் தமக்காசை யாற்பித் தளைந்து ...... திரிவேனோ
எச்சாய் மருட்பாடு மேற்பட் டிருந்த
பிச்சா சருக்கோதி கோட்டைக்
                                  கிலங்க
மிக்கா நினைப்போர்கள் வீக்கிற் பொருந்தி ...... நிலையாயே
எட்டா மெழுத்தேழை யேற்குப்
                                  பகர்ந்த
முத்தா வலுப்பான போர்க்குட்
                                டொடங்கி
யெக்கா லுமக்காத சூர்க்கொத் தரிந்த ...... சினவேலா
தச்சா மயிற்சேவ லாக்கிப் பிளந்த
 சித்தா குறப்பாவை தாட்குட்
                                   படிந்து
சக்கா கியப்பேடை யாட்குப் புகுந்து ...... மணமாகித்
தப்பா மலிப்பூர்வ மேற்குத்
                                    தரங்கள்
 தெற்கா குமிப்பாரில் கீர்த்திக்
                                     கிசைந்த
 தச்சூர் வடக்காகு மார்க்கத் தமர்ந்த ...... பெருமாளே."

 திருத்தல அமைவிடம் 

ஆண்டார்குப்பம் திருக்கோயில் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 34 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச் சாலையிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. செங்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து ஆண்டார்குப்பம் திருத்தலம் 10 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 

காலை 6:30 மணி முதல் 12 30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு 72999 93393 மற்றும் 91591 76453 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். 

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE