பட்டுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் சாலையில் 14 கிமி தூரத்தில் நம்பிவயல் உள்ளது இங்கிருந்து தெற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் அதம்பை ஊரை அடையலாம்.
அடம்பை எனும் ஒரு வகை மரங்கள் அடர்ந்த காடாக இத்தலம் இருந்திருக்கலாம். அடம்பை என்பது கடம்ப மரங்களை குறிக்கிறது என சொல்லப்படுகிறது.
இந்த ஊரில் அய்யனார் கோயில், மாரியம்மன் கோயில், ஆயாள் கோயில், பெருமாள் கோயில் அத்துடன் ஒரு சிவன்கோயில் ஒன்றும் உள்ளது.
ஊரின் வடகிழக்கில் ஒரு குளத்தின் கரையில் அரை ஏக்கர் பரப்பில் கோயில் வளாகம் அமைந்துள்ளது. கோயில் எக்காலத்தில் கட்டப்பட்டது என்ற தரவு இல்லை. கட்டுமானம் வைத்து பார்க்கும் போது 17-18 ம் நூற்றாண்டில் கட்டப்படதாக தோன்றுகிறது. எனினும் இறைவன் இத்தலத்தில் அருள் பாலிக்க துவங்கியது யுகம் கடந்த நிகழ்வாகும்.
இறைவன் சோமநாதர் இறைவி பெரியநாயகி
சோமன் எனப்படும் சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்திற்க்காக பல தலங்களில் இறைவனை பிரதிஷ்டை செய்து வழிபடுகிறான், அதில் ஒன்று தான் இந்த அதம்பை திருத்தலம். ஆகும். அதனால் இறைவனுக்கு சோமநாதர் என பெயர்.
இப்படி சிறப்பு மிக்க இந்த தலத்தின் இன்றைய நிலை மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது.
கருவறை, அர்த்த மண்டபம், முகப்பு மண்டபம் என இருந்துள்ளது, இன்று கருவறை செடி கொடிகள் முளைத்து பெரும் சிதைவை உண்டாக்கி உள்ளது. அர்த்த மண்டபம் கருங்கல் தூண்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது அதன் விதானம் இடிந்து கீழிறங்கி உள்ளது. முகப்பு மண்டபம் முற்றிலும் இடிந்து போனது. அதன் வெளியில் நந்தி மண்டபம் பலிபீடம் கொடிமர மேடை, கொடிமர விநாயகர் மாடம் என இருந்துள்ளது.
முகப்பு மண்டபத்தில் அம்பிகை கருவறை சேர்க்கிறது இந்த சன்னதியும் சிதைவுற ஆரம்பித்துள்ளது. பிராகார சிற்றாலயங்கள் முதலில் வினாயகருக்கு உள்ளது, இதுவும் இடிபாடுகளுடன் உள்ளது. வடமேற்கில் முருகன் சற்று பெரிய சிற்றாலயம் கொண்டுள்ளார். முகப்பில் அச்சு ஓடுகள் கொண்ட கூரை அமைக்கப்பட்டுள்ளது.. கோமுகத்தருகில் சண்டேசர் சன்னதி உள்ளது. அம்பிகை கோயிலின் பின்புறம் வடக்கு நோக்கியபடி இடும்பனுக்கோர் சிற்றாலயம் உள்ளது. சுற்றிலும் செம்பாறாங்கல்லால் ஆன பெரிய கற்கள் கொண்டு மதில் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதிலும் பெரும் பகுதி சிதைவடைந்து விட்டது.
கருவறை தரை மட்டம் வரை கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது, அதற்கு மேல் செங்கல் கட்டுமானமாக உள்ளது, எனினும் அற்புதமான வேலைப்பாடுகளாக உள்ளது கும்பபஞ்சரங்களும், தாமரை தாங்கு தூண்களும் உள்ளன. அழகிய கோஷ்ட மாடங்களும் உள்ளன.
முதலாம் இராஜராஜர் காலத்தில் வெட்டுப்போதிகை அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, போதிகைக்கு வெளியே முக்கோண வடிவில் ஒரு வெட்டு நீட்டிக்கொண்டிருக்கும். முதலாம் இராஜேந்திரர் காலத்திலும் அது தொடர்ந்தது. இதனை வைத்து இக்கட்டுமானம் சோழர் பாணியினை பின்பற்றி கட்டப்பட்டது என கூறலாம். சிவபெருமான் வீற்றிருக்கும் கருவறை விமான அதிட்டானம் உபானவரி, ஜகதிவரி, குமுதவரி அடுக்குகளாகக் கட்டுமானத் திறனோடும், பொறியியல் திறனோடும் பிரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
ஆயிரம் இருந்தும் இன்று இக்கோயில் இருக்கும் நிலை கட்டுமான ஆர்வலர்களை, சிவ பக்தர்களை வேதனைக்குள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை.
கோயிலில் எந்த ஒரு மூர்த்தியும் இல்லை. பாதுகாப்பு கருதி அனைத்து மூர்த்திகளும் ஒரு நீண்ட கொட்டகையில் தனியாக வைக்கப்பட்டு உள்ளது. அங்கே துவாரபாலகர் இருவர் அடுத்து இரு நந்திகள் பலிபீடம் சிவலிங்கம் அம்பிகை இருவிநாயகர்கள் வள்ளி தெய்வானை சமேத முருகன் இடும்பன் பைரவர் சண்டேசர் என அனைத்தும் அழகிய வடிவமைப்பில் உள்ளன. அனைத்து பூஜைகளும் இங்கேயே வைத்து செய்யப்பட்டு வருகின்றன.
சோமநாதர் கோயில் எத்தனை பௌர்ணமிகளை கண்டதோ தெரியவில்லை, இப்போது கிரகணங்களை மட்டுமே கண்டு வந்து கொண்டிருக்கிறது என்பது தான் நிஜம்.
அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறது திருக்கோயில் விரைவில் திருப்பணிகள் துவங்கி நடைபெறவேண்டும்.