ஆடம்பர விருந்தை புறக்கணித்த கிருஷ்ணர்!

By தேஜஸ்

பாண்டவர்கள் வனவாசம் முடிந்து திரும்பினாலும் அவர்களுக்குரிய தேசத்தை திருப்பித் தர மாட்டோம் என்றான் துரியோதனன். இதையடுத்து, பாண்டவர்களின் சார்பில் ஸ்ரீகிருஷ்ணர் தூது சென்று, துரியோதனனை சந்திக்க முடிவு செய்தார். பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் மற்றும் துரியோதனன் உள்ளிட்டோர் ஸ்ரீகிருஷ்ணரை தங்களது மாளிகையில் தங்க வைத்து உபசரிக்க விரும்பினர். எனவே, தங்களது மாளிகைகளை அழகுபடுத்தினர். 

ஊரெங்கும் தோரணங்கள் கட்டி ஸ்ரீகிருஷ்ணரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்தனர்.
அஸ்தினாபுரமே விழாக் கோலம் பூண்டிருந்தது. ஆனால், இதைப் பற்றி விதுரருக்கு எதுவும் தெரியாது. திருதராஷ்டிரன் சகோதரர்தான் விதுரர். வியாசரின் மைந்தர், தர்ம தேவதையின் அம்சமானவர். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீ கிருஷ்ணரிடம் பெரும் மதிப்பும் பக்தியும் கொண்டவர்.

அரசாங்க விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு விதுரர் ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவர் அல்ல என்று துரியோதனன் கருதினான். இதனால் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையை அவரிடம் கூறவில்லை. அஸ்தினாபுரத்திற்கு வந்து சேர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றார் பீஷ்மர். மிகுந்த அலங்காரத்துடன் திகழ்ந்த அந்த மாளிகையைக் கண்டதும், ‘இது யாருடைய மாளிகை’ என்று கேட்டார் கிருஷ்ணர். ‘எனது மாளிகைதான். தங்களது வருகையொட்டி அலங்கரித்துள்ளேன்’ என்றார் பீஷ்மர். இதைக் கேட்டு ஸ்ரீ கிருஷ்ணர் எதுவும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தார். வரவேற்க வந்தவர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.

அடுத்து, ஒரு மாளிகை. அது பீஷ்மருடைய மாளிகையை விட பிரம்மாண்டமாக இருந்தது. ‘இந்த மாளிகை யாருடையது?’ என்று கேட்டார். உடனே துரோணர், ‘இது என்னுடையது கிருஷ்ணா. இங்கே எல்லா வசதிகளும் உள்ளன. தாங்கள் தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளேன்’ என்றார். அதனுள்ளும் செல்லாமல் நடையை தொடர்ந்தார் ஸ்ரீ கிருஷ்ணர். அடுத்து தென்பட்டது துச்சாதனனின் மாளிகை. ‘எனது மாளிகையை தங்களுக்காக உல்லாசபுரியாகவே மாற்றி உள்ளேன்’ என்றான் துச்சாதனன். அவன் சொன்னதை தனது காதிலேயே கிருஷ்ணர் வாங்கவில்லை. மாளிகைகளின் ஆடம்பரமும், ‘என்னுடையது’ என்ற அவர்களது வார்த்தைகளில் தொனித்த கர்வமும் அவருக்கு அறவே பிடிக்கவில்லை.

அங்கிருந்து சென்றவர், தான் செல்லும் வழியில் சிறிய குடிசை ஒன்றைக் கண்டார். ‘இந்தக் குடிசை அழகாக இருக்கிறதே, இதன் உரிமையாளர் யார்?’ என்று கேட்டார். அதற்குள் சத்தம் கேட்டு வெளியில் வந்த விதுரர், ஸ்ரீ கிருஷ்ணரை கண்டதும் முகம் மலர்ந்தார். ‘இது உனது வீடு கிருஷ்ணா. உனது அருளால் அடியேன் இங்கே வசிக்கிறேன். இந்த இல்லத்தில் உனது திருப்பாதங்கள் பட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும். தயவு செய்து உள்ளே வரவேண்டும்’ என்று கூறி,
ஸ்ரீ கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்து வணங்கினார். கிருஷ்ணருக்கு எல்லை இல்லாத மகிழ்ச்சி. மிகுந்த உற்சாகத்துடன் அந்தக் குடிசைக்குள் நுழைந்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் அமர்வதற்கு அங்கு தகுந்த ஆசனம் கூட இல்லை. ஒரு எளிய இருக்கையில் அமரும்படி வேண்டினார் விதுரர். அடுத்த கணம் எந்தத் தயக்கமும் இல்லாமல் அதில் ஆனந்தமாக அமர்ந்தார். பிறகு, ‘என்ன விதுரரே, உங்களது வீடு தேடி வந்திருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது. சாப்பிட எதுவும் தர மாட்டீர்களா?’ என்று உரிமையுடன் கேட்டார் ஸ்ரீ கிருஷ்ணர். ‘காலையில் கஞ்சி மட்டுமே குடிப்பது அடியேன் வழக்கம். இன்றைக்கும் அவல் கஞ்சி உள்ளது. ஆனால், அதை எப்படித் தங்களுக்கு…’ என்று தயங்கினார் விதுரர். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணர் குதூகலம் அடைந்தார். ‘அடடா, அவல் கஞ்சி எனக்கு ரொம்பவே பிடிக்கும். கொடு விதுரா’ என்று முகம் நிறைய உற்சாகமானார்.

உடனே ஆவலுடன் விதுரர் ஒரு குவளையில் கஞ்சியை ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க, அதை ரசித்துக் குடித்தார் கிருஷ்ணர். இதைக் கண்டதும் விதுரரின் கண்களில் நீர் பெருக்கெடுத்தது. ‘என்ன விதுரரே, ஏன் உங்கள் விழிகளில் நீர் பெருக்கெடுக்கிறது’ கிருஷ்ணர் பரிவுடன் கேட்டார். ‘பரந்தாமா உனக்கு பாலும் தேனும் கலந்து சுவையான விருந்து படைக்க பீஷ்மர், துரோணர் முதலானோர் காத்திருக்கிறார்கள். ஆனால், நீயோ இந்த ஏழையின் குடிசையில் கஞ்சி குடிப்பதில் களிப்புறுகிறாயே’.

அவரைப் பார்த்து புன்னகைத்து, ‘அவர்கள் ஆடம்பரப் பிரியர்கள். தங்களது அந்தஸ்தை வெளிப்படுத்துவதில் மட்டுமே குறியாக இருந்தனர். அவர்களது பேச்சில் ‘நான், எனது’ என்ற அகந்தையே வெளிப்பட்டது. ஆனால், நீங்கள் மட்டுமே இது உனது இல்லம் என்று கூறி, என்னை பெருமைப்படுத்தினீர்கள். கஞ்சி என்று இல்லை, தாங்கள் அன்புடன் சிறிய உத்தரணியில் தீர்த்தம் தந்தாலும் மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக் கொள்வேன்’ என்று கூறி, விதுரரை ஆசீர்வதித்துச் சென்றார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE