பொரவாச்சேரி ஸ்ரீ சுப்பிரமணியம் வள்ளி மற்றும் தெய்வானையுடன்!

By சரவணன்

தேவலோகத்துச் சிற்பியான விஸ்வகர்மாவே பூவுலகம் வந்துவிட்டாரோ என்று நினைக்கும்படியான திறமைமிக்கவர் சிற்பி, சில்பா. இவர் சோழநாட்டைச் சேர்ந்தவர்.

அவர் செய்யும் சிலைகளுக்கு மட்டும் உயிர் கொடுத்தால் அவை நிச்சயமாக பிரம்மன் படைத்தவற்றை விடப் பேரழகு மிக்கவையாக இருந்திருக்கும்.

அப்படிப்பட்ட சிற்பிக்கு ஒருநாள் சோழ அரசன் முத்தரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. எதற்குத் தெரியுமா? சிலை ஒன்றைச் செய்ய வேண்டும் என்பதற்காக.

அழைத்த மன்னர் கேட்டார். ``ஆறுமுகக் கடவுளுக்கு ஓர் அற்புதச் சிலை வடிக்க வேண்டும்! முடியுமா?''
அரசர் கேட்டதுமே சிலிர்த்துப் போனார் சிற்பி. ``மன்னா... எங்களின் குலதெய்வமே அந்த ஏறுமயில் வாகனன்தான். இதுநாள்வரை ஏனோ அவன் சிலையை அமைக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. இன்று தாங்கள் மூலம் கிட்டியிருக்கிறது. நிச்சயம் மிகச் சிறப்பான சிலை ஒன்றை அமைப்பேன்.''

சொன்னதுபோலவே சொக்கவைக்கும் அழகுடன் சுப்ரமண்யனின் சிலையை வடித்தார் சில்பா சிற்பி.
அழகுக்கு இலக்கணம் முருகன் என்பார்கள். அந்த இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டுபோல் அமைந்திருந்தது சில்பா சிற்பி வடித்திருந்த முருகன் சிலை.

அதிசயமாய்ப் பார்த்தான் அரசன்.
மலைத்துப்போனார்கள் மக்கள்.
ஆறுமுகம் பன்னிரண்டு கையும் வேலும்... அலங்கார ஆபரணம் அணிந்த மார்பும்...' என்று கந்தன் துதி ஒன்று வர்ணிப்பது போன்ற அழகு ரூபனாக அமைந்திருந்த அந்தச் சிலையைத் தன் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியான பொரவச்சேரி எனும் "பொருள் வைத்த சேரியில்" இருந்த ஆலயத்தில் ஸ்தாபித்து கும்பாபிஷேகம் நடத்தினான் மன்னன்.

மனம் குளிர்ந்தார்கள் மக்கள். ஆனால் மன்னனுக்கோ உள்ளம் சூடானது. உடல் கொதித்தது. காரணம், சில்பா சிற்பிக்குக் கிடைத்த வரவேற்பு மற்றும் புகழ்.
அதே கோபத்தோடு, சிற்பியை அழைத்து ``இனி ஒரு சிலையை இம்மாதிரி நீ செய்யக் கூடாது!'' என்று ஆணையிட்டான் முத்தரசன். அதோடு, நில்லாமல் ஒரு காரியம் செய்தான்.

சில்பா சிற்பி கதறக் கதற, அவரது கட்டைவிரலை வெட்டி எறிந்தான்.
வேதனையோடு வேலவனை வேண்டினார் சிற்பி. `கட்டை விரல் இல்லாமல் இனி எப்படி உளி பிடிப்பேன்' என்று உள்ளம் வருந்தினார்.

கவலைப்பட்ட அவரது கனவில் வந்தான் கனக மயில்வாகனன். ``இன்னும் ஓர் அழகுச் சிலை எனக்கு அமைத்திடுக!'' என்று ஆணையிட்டான்.
உறவுக்காரச் சிறுமி ஒருத்தி உதவியுடன் உளி பிடித்தார் சிற்பி. உமைபாலனை உருவாக்கினார். அழகு ததும்பியது அந்தச் சிலையும்.

உளிஓசை எதிரொலித்ததுபோல் தகவல் அரசனின் செவிகளுக்குப் போனது. பார்த்தான் அரசன். ஆச்சரியப்பட்டான்.

இரண்டாவது சிலையை நன்னாள் ஒன்றில் எட்டுக்குடியில் ஸ்தாபித்தான். அது உயிரோட்டமுள்ளதாக இருக்கிறது என்று ஊரார் புகழவே, மீண்டும் உள்ளம் நொந்தான் முத்தரசன். பார் வேந்தனான தனக்குக் கிடைப்பதைவிட அதிகமான புகழ் சாதாரண ஸ்தபதிக்குக் கிடைப்பதா?

பொறாமையில் புழுங்கிய அரசன், அந்தக் கொடிய காரியத்தைச் செய்தான்.
சில்பா சிற்பியின் இரு விழிகளையும் பறித்து வீசினான்.
கலங்கிப்போன சிற்பிக்கு மறுபடியும் காக்ஷி தந்த கந்தன், மறுபடியும் ஒரு சிலை வடிக்கக் கட்டளையிட்டான்.
முன்னிலும் அழகாக அவர் அமைத்த மூன்றாவது சிலை, "எண்கண்" தலத்தில் இடம்பிடிக்க, முருகன் திருவருளால் சிற்பிக்குப் பார்வையும் விரலும் மீண்டும் கிடைத்தது.

முத்தமிழ்க்கடவுளான முருகனுக்கு, மூன்று தமிழ்களைத் தனித்தனியே வடிவமைத்ததுபோல் அமைந்த அந்த மூன்று சிலைகளுள், முதற்சிலை
அமைந்திருக்கும் பொரவச்சேரி கோவில் .கோயிலுக்குள் நுழையும் முன், திருக்குளத்து நீரைக் கொஞ்சம் தலையில் தெளித்துக்கொண்டு செல்லவேண்டும்

அடுத்து, கந்தனுக்குத் தாயான அம்பிகை, சொர்ணகாளிதேவியாக தரிசனம் தருகிறாள். அவளை வணங்கி கந்தனின் காவலன், காவடியின் காரணகர்த்தாவான ஸ்ரீ இடும்பனை அடுத்து வணங்கி, இன்னல்கள் தீர்க்க வேண்டிக்கொண்டு, மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரரையும் வணங்கிவிட்டு, கருவறைக்குச் செல்லவேண்டும் .வழியில் உள்ள ஸ்ரீ அன்னதானப்பிள்ளையாரரையும் தரிசிக்க வேண்டும்.

"அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல்தோன்றும் -
நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும்தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்"
என்று தீந்தமிழ்ப்பாடல் புகழ்வது போலவே தித்திக்கத் தித்திக்கத் தெய்வக்குமரனின் தரிசனத்தை நாம் காணலாம்.

ஆறுமுகம், பன்னிருகரம், அழகு மயில்வாகனம், அருகே தேவகுஞ்சரியும், குறமகளும் நின்றிருக்கும் திறம் என்று, நெஞ்சை கொள்ளை கொள்கிறது குமரனின் கோலம். தெளிவாகத் தெரியும் நரம்புகள், சீராக அமைந்து பளபளக்கும் நகங்கள், உங்களைத்தான் பார்க்கிறேன் என்பதுபோல் அமைந்திருக்கும் அருள் விழிகள் என்று ஆனந்தக் காக்ஷி தருகிறான் ஆறுமுகன். சில்பா சிற்பி செதுக்கிய முதற்சிலை இதுதான்... மற்ற இரண்டு சிலைகளுக்கும் பிள்ளையார் சுழி போட்ட முருகன் சிலை இதுதான் என்று நினைக்கும்போது மனம் சிலிர்க்கிறது.
பக்தர்கள் அனைவரும் தங்களின் வாழ்நாளில் ஒரு முறையாவது நிச்சயம் இந்த பொரவாச்சேரி திருத்தலத்திற்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி மற்றும் வள்ளி தெய்வானையின் அருளைப் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். செவ்வாய்க்கிழமையான இன்று இந்த அபூர்வமான அழகான முருகப்பெருமானின் தரிசனத்தைக் காண மீண்டும் பக்தர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தொன்மையான திருத்தலம் மிக மிக சக்தி வாய்ந்தது. இது நாகப்பட்டினத்தில் இருந்து (திருவாரூர் செல்லும் நெடுஞ்சாலையில்) சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற சிக்கல் சிங்கார வேலவனின் திருக்கோயிலில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

*ஸ்ரீ முருகன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!*
*சௌஜன்யம்..!*
*அன்யோன்யம் .. !!*
*ஆத்மார்த்தம்..!*
*தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!*
*அடியேன்*
*ஆதித்யா*

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE