சொன்ன வண்ணம் செய்த பெருமாள் திருவெஃகா:
காஞ்சியிலுள்ள திருவெஃகா என்ற பகுதியில் திருமால் அழகிய திருக்கோலத்தில் பள்ளி கொண்டுள்ளார்.
திருமழிசை ஆழ்வார் இந்தக் கோயிலுக்கு அருகே வசித்து வந்தவர். அவரது வளர்ப்புத் தந்தையின் மகனான கணிகண்ணன் திருமழிசை ஆழ்வாரையே தனது குருவாக ஏற்று அவரது சீடராக உடன் இருந்து வந்தார். ஒருமுறை பல்லவ மன்னன் கணிகண்ணனிடம் கோபம் கொண்டு அவரை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டான். இதை அறிந்த ஆழ்வார் கணிகண்ணனுடன் தானும் பல்லவ நாட்டை விட்டு வெளியேறுவதாக முடிவு செய்தார். அத்துடன் இந்த திவ்ய தேசத்தில் சயனித்திருக்கும் புஜங்க சாயனப் பெருமாளையும் தன்னுடன் வரும்படி உரிமையுடன் அழைத்தார்.
கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உந்தன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!
என்று ஆழ்வார் 'கட்டளை' இட்டதும், பெருமாளும் அவருடன் கிளம்பி விட்டார்! ஆழ்வாரும் கணிகண்ணனும் காஞ்சியிலிருந்து நான்கு மைல் தொலைவு நடந்து ஒரு ஊரில் தங்கினார். ஆழ்வார் ஓர் இரவு இந்த ஊரில் தங்கியதால் இந்த ஊருக்கு ஓரிரவிருக்கை என்று பெயர் வந்தது. இது மருவி இப்போது ஓரிக்கை என்று ஆகி விட்டது!
பெருமாள் ஆழ்வாருடன் கிளம்பி விட்டதால் கர்ப்பக்கிரகம் காலியாகி விட்டது. விவரமறிந்த மன்னன் ஆழ்வாரைத் தேடி வந்து மன்னிப்புக் கேட்க, ஆழ்வாரும் மனம் மாறி காஞ்சிக்குத் திரும்பினார். முன்பு பாடிய பாடலையே சற்று மாற்றிப் பாடி, பெருமாளையும் காஞ்சிக்குத் திரும்பும்படி 'பணித்தார்'!
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயும் உந்தன்
பைந்நாகப் பாய் விரித்துக் கொள்!
ஆழ்வாரின் பாட்டைக் கேட்டு பெருமாள் மீண்டும் சந்நிதிக்கு வந்து சயனித்தார். ஆழ்வார் சொன்னபடி செய்ததால் பெருமாளுக்கு 'சொன்ன வண்ணம் செய்த பெருமாள்' என்ற பெயர் ஏற்பட்டது. இதே பொருள் கொண்ட 'யதோக்தகாரி' என்ற சம்ஸ்கிருதப் பெயரும் ஏற்பட்டது. பெருமாள் திரும்பி வந்து படுத்துக்கொண்டபோது தலையை மாற்றி வைத்துப் படுத்துக்கொண்டு விட்டாரென்றும் அதனால்தான் மற்ற கோயில்களிலிருந்து மாறுபட்டு இங்கே தலை நமக்கு வலப்புறம் இருக்குமாறு சயனித்திருப்பதாகவும் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு!
பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்களாலும், விஜயநகர மன்னர்களாலும் திருப்பணிகள் செய்யப்பட கோயில் இது. முதலாம் குலோத்துங்க சோழன், மூன்றாம் குலோத்துங்க சோழன் , ராஜாதிராஜ சோழன் ஆகியோரின் கல்வெட்டுகள் கோயிலில் காணப்படுகின்றன. காஞ்சிபுரத்தின் மிகப் பழமையான மூன்று கோயில்களில் இதுவும் ஒன்று. (உலகளந்த பெருமாள் கோயில், திருப்பாடகம் ஆகியவை மற்ற இரண்டு கோயில்கள்) இந்தக் கோயில் பற்றி தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை ஆகிய நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஓம் நமோ நாராயணாய.