விநாயகர் சதுர்த்தி - இரட்டைப் பிள்ளையார்!

By நந்தா

ஒரு சமயம் சிவபெருமானைப் பிரிந்து பார்வதிதேவி தனியாகத் தவம் செய்ய நேரிட்டது.
அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்தத் திருவுருவத்தையே-அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேரப் பிரார்த்தித்தாராம்.

இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகிலுள்ள திருவேள்விக்குடித் திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.

"ஆதி இரட்டை விநாயகர்'' என்று போற்றப்படுபவரும் இவரே.

அதுபோலவே திருச்சி பாலக்கரைப் பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாகக் கருதப்படுகிறது.

தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும்.

மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக்கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.

திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.

திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம்.

பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும்.
செல்வ வளம் பெருகும்.

விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.

பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட நாகதோஷம் விலகும்.
சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.

ஒவ்வொரு மாத ரோகிணி நட்சத்திரத்தின் போது சந்தனத்தை தங்கள் கைகளாலேயே அரைத்து இரட்டைப் பிள்ளையார்கள் செய்து வணங்கினால் கடன் தொல்லைகள் நீங்கும்.

ஒவ்வொரு மாத சதுர்த்தியின் போது தம்பதியர்கள் இரட்டைப் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நைவேத்தியம் செய்து அந்தக் கொழுக்கட்டையை பக்தர்களுக்கு தானமாகக் கொடுத்தால் தங்கம் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சங்கடஹர சதுர்த்தியன்று விரதமிருந்து இரட்டைப் பிள்ளையாரை வழிபடுபவர்கள் லட்சுமியின் அருளுக்குப் பார்த்திரமாவார்கள். இரட்டை விநாயகரை தாமரை மலர்களால் அர்ச்சித்தால் வீட்டில் உள்ள பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வச் செழிப்பு உண்டாகும்.

தஞ்சை திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் உள்ளார் இரட்டைப்பிள்ளையார். இவர் சந்நிதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம். திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.

மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகிலுள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருவண்ணாமலை கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சந்நிதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE