பைரவர் ஆலயங்கள் பூஜை பரிகாரங்கள்!

By நந்தா

வடக்குப் பார்த்தபடி  திருமயம் கோட்டையில் எழுந்தருளியிருக்கும் அபூர்வ பைரவர் கோவில்.

இமயமலையை விடப் பழைமையான திருமயம் மலை' என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.  தமிழகத்தில் உள்ள பலமான கோட்டைகளில் திருமயம் கோட்டையும் ஒன்று. 

புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தொலைவில் திருமயம் கோட்டை உள்ள இந்தக் கோட்டை ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாத தேவர் எனும் 'கிழவன் சேதுபதி'யால் 1676-ம் ஆண்டு கட்டப்பட்டது. 

இந்தக் கோட்டையின் கீழே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் மற்றும் திருமால் கோயில்கள் 7- ம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது என்கிறது வரலாறு. 

திருமெய்யம் எனப்பட்ட இந்த ஊர், புராணக் காரணங்களால் திருமயம் என்றானது.  மெய் என்றால் உண்மை. அதுவே வடமொழியில் சத்தியமாகி இங்குள்ள ஈசன் சத்தியகிரீஸ்வரர் என்றும் பெருமாள் சத்தியமூர்த்தி என்றும் ஆனார்கள். 

திருமயம் கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்த கோட்டை. இதற்கு மூன்று வழிகள் உள்ளன. 

எதிரிகளால் நெருங்க முடியாத சிறப்பான கோட்டையிது. கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. 

இங்கிருந்து கண்டெடுக்கப்பட்ட வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், ஆயுதங்கள், போர் உடைகள் போன்றவை புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

கோட்டையில் குடைவரைச் சிற்பங்களாக தீர்த்தங்கரர் பலரின் திருவுருவங்களும் காணப்படுகின்றன. ஒரே சுற்றில் குடைவரைக் கோயிலாக சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது.   இங்குள்ள அழகிய திருக்குளம் புகழ்பெற்றது. 

சத்தியகிரீஸ்வரர் ஆலயம் சிற்பக்கலைக்குப் புகழ் பெற்றது. 

இது பல்லவர் காலத்துக்குப் பிறகு முத்திரையர் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டது.  இங்கு உமாபதீஸ்வரர், ராஜ ராஜேஸ்வரி அம்மன், பைரவர், நவகிரக சந்நிதிகள் உள்ளன. 

இங்குள்ள அம்பிகை வேணுவனேஸ்வரி அதாவது மூங்கில் காட்டு அரசியாக வீற்றிருக்கிறாள். 

ஒருவர் தன் வாழ்வில் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னிக்கும் இறைவனாக இங்குள்ள சத்தியகிரீஸ்வரர் வணங்கப்படுகிறார். 

தல விருட்சம்: மூங்கில்மரம், தீர்த்தம் சந்திரபுஷ்கரணி.

இங்குள்ள மண்டபத்தில் அப்பண்ணா தண்டநாயகர் தலைமையேற்ற மெய்யம் சபையின் தீர்ப்பு பொறிக்கப்பட்டுள்ளன. 

இது தென்னிந்தியாவின் நீளமான கல்வெட்டுகளில் ஒன்று. இசையைக் குறிக்கும் பல கல்வெட்டுகள் இங்குள்ளன. மேலும் தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கோத்பவர் சிலை இங்குள்ளது.

இங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் திருமங்கை ஆழ்வாரால் பாடப்பட்டது.

“மையார் கடலும் மணிவரையும் மாமுகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே' என்கிறது பெரிய திருமொழி.
இங்கு பெருமாள் பிரமாண்ட வடிவில் அனந்த சயனக் கோலத்தில் வீற்றிருக்கிறார். 

இங்குள்ள பெருமாளை வணங்க வாக்கில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
திருமயம் கோட்டையின் காவல் தெய்வமாக விளங்குபவர் பைரவர். 

தமிழ் நாட்டிலேயே வடக்கு பார்த்தபடி, தனிக் கோயில் கொண்டருளும் பைரவர் இவர் மட்டுமே என்கிறார்கள். 

தெற்கே ராமேஸ்வரம் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு தரும் கண் கண்ட தெய்வமாகவே, 'கோட்டை பைரவர்' விளங்குகிறார். 

இன்றும் கோயிலைத் தாண்டிச் செல்லும் வாகனங்களில் செல்லும் பக்தர்கள் சில நிமிடங்கள்கள் நிறுத்தி இவரை வணங்கிச் செல்வது வழக்கம். 

இல்லாவிட்டால் பயணம் தடைப்படும் என்பது நம்பிக்கை. பலரும் வாகனத்தில் இருந்தே இவரது சந்நிதி நோக்கிக் காணிக்கையை வீசுவதும் உண்டு.

திருமயம் கோட்டை பைரவர் கால பைரவ அம்சம். இது விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்புத் தலம். 

அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் எல்லாவித சனி தோஷங்களும் இந்த கோட்டை பைரவரை வணங்கினால் தீரும் என்பது நம்பிக்கை. 

வடைமாலை, சந்தனகாப்பு செய்து, நெய்தீபம், மிளகுதீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும். 
பிதுர் தோஷங்களுக்கு பைரவருக்கு புனுகு சாத்தி, எலுமிச்சம் பழமாலை சூட்டி, எள் சாதம் நைவேத்தியம் செய்து, அபிஷேகம் செய்து வழிபட்டால் நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. 

செவ்வாய் அன்று மரிக்கொழுந்து மாலை சாத்தி, நெய்தீபம் ஏற்றி வந்தால் பாவங்களில் இருந்து விலகி மேன்மை பெறலாம். 

பைரவருக்கு சிதறு காய் அடித்து வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
இப்பைரவருக்கு சந்தனாதி தைலம் சாத்தி, வடைமாலை அணிவித்து வழிபட்டால் வியாபாரம் தொழில் அபிவிருத்தி ஏற்படும். 

ராகு காலத்தில் செவ்வரளிமாலை சாத்தி நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் வழிபாடு செய்து வந்தால் குடும்ப ஒற்றுமை ஏற்படும். 

மேலும் இந்த பைரவரை வணங்க ஆட்சி அதிகாரம் நிலைக்கும். ஆபத்துகள் விலகும் என்பதும் நம்பிக்கை. 

ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சியை அவ்வப்போது காத்து வந்தவர் இந்த பைரவர் என்று அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE