அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார் கோவில்

By சரவணன்

பிரம்மாவின் மானச புத்திரரான தட்சன் தன் மகள் தாட்சாயிணியை இறைவன் சுவர்ணபுரீஸ்வரருக்கு மணமுடித்து தருகிறாரன். பின் ஒரு சமயம் தட்சன் தனது அகந்தை காரணமாக தான் நடத்தும் ஒரு யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் தன் தந்தை தட்சனை திருத்தி நல்வழிப்படுத்த தாட்சாயிணி இத்தலத்திலிருந்து திருப்பறியலூருக்கு சென்றபோது தட்சன் ஆணவத்தினால் சிவனையும் சக்தியையும் நிந்தித்து விடுகிறான். தாட்சாயிணி கோபம் கொண்டு தட்சனின் யாகம் அழிந்து போகட்டடும் என்று சாபம் இடுகிறார். அத்துடன் சிவனிடம் தட்சனை தண்டிக்கும் படி வேண்டுகிறார். 

சிவனும் வீரபத்திரர், பத்திரகாளி ஆகியோரை தோற்றுவித்து யாகத்தை அழித்து தட்சனையும் சம்ஹாரம் செய்து விடுகிறார். தாட்சாயிணியும் சிவநிந்தை செய்த தட்சனின் மகள் என்ற பாவம் தீர வேண்டி இத்தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் கடும் தவம் புரிகிறார். சிவபெருமான் தாட்சாயிணியை மன்னித்து மருவார் குழலியம்மை என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் என்னருகில் இருந்து அருளாட்சி செய் என்று அருள்பாலிக்கிறார். இத்தலம் தாட்சாயணிக்கு அருள்புரிந்ததும், வீரபத்திரர் தோன்றியதுமாகிய சிறப்பினையுடையது.

இறைவர் : ஸ்ரீ செம்பொன்பாள்ளியார்

இறைவியார் : ஸ்ரீ மருவார் குழலி

லட்சுமி இத்தல இறைவனை வழிபட்டு திருமாலை தன் கணவனாக அடைந்ததாள். எனவே இத்தலத்திற்கு இலக்குமிபுரி என்ற பெயர் வந்தது. இந்திரன் இங்குள்ள சூரிய தீர்த்தத்தில் நீராடி சிவனை பூஜித்து விருத்திராசூரனை வெல்ல வச்சிராயுதம் பெற்றான். இதனால் இத்தலத்திற்கு இந்திரபுரி என்ற பெயரும் உண்டு. முருகப்பெருமான் இத்தல இறைவனை வழிபட்டு தாருகனை வதைத்ததால் இத்தலத்திற்கு கந்தபுரி என்றும் பெயர் உண்டு. வட்டவடிவமான ஆவுடையார் மேல் லிங்க உருவில் எழுந்தருளியுள்ள இத்தல மூர்த்தியான சுவர்ணபுரீஸ்வரர் திருமாலால் பூஜிக்கப்பட்டவர்.

"மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
திருவார் செம்பொன் பள்ளி மேவிய
கருவார் கண்டத்து ஈசன் கழல்களை
மருவாதவர் மேல் மன்னும் பாவமே."

(சம்பந்தர் தேவாரம் : 01.025.01)


பொருளுரை : மணம் பொருந்திய கூந்தலை உடையவளாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக உடையவராய்த் திருமகள் வாழும் செம்பொன்பள்ளி என வழங்கும் திருத்தலக்கோயிலில் எழுந்தருளிய, கருநீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி அவற்றைத் தம் மனத்தே பொருந்தவையாதவர்களைப் பாவங்கள் பற்றும்.

ஆளுடைய பிள்ளையார் திருமயிலாடுதுறை என்னும் மாயூரத்தை வணங்கிப் பதிகம் பாடி வழியில் விளநகரை வணங்கித் திருச்செம்பொன் பள்ளியை அடைந்தார். அங்கு அணிகிளர் சூலக் கைத்தலப் படை வீரராகிய செம்பொன் பள்ளியாரை வணங்கி "மருவார் குழலி" என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். இப்பதிகத்து மருவார் குழலி என அம்மையின் திருநாமமும், செம்பொன்பள்ளி மேயான் எனச் சுவாமியின் திருநாமமும் அறிவிக்கப்படுகின்றன. ஏழாம் திருப்பாடலில் வரும் "கையார் சூலமேந்தும் கடவுளை" என்பதைச் "சூலக் கைத்தலப் படைவீரர்" எனச் சேக்கிழார் பெருமான் சொல்லிக்காட்டுகிறார்.

ஆலய முகவரி : அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில், செம்பொனார்கோவில், செம்பொனார்கோவில் அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம், PIN - 609 309. 

எப்படிப் போவது : மயிலாடுதுறையில் இருந்து பொறையாறு செல்லும் பேருந்துப் பாதையில் 10 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE