அருள்மிகு நல்லூர்க் கந்தசுவாமி திருக்கோயில், இலங்கை

By தேஜஸ்

நல்லூர்க் கந்தசுவாமி தேவஸ்தானம்
வருடாந்த மஹோற்சவம் - 2025
ஆறாம் நாள் திருவிழா - ஆட்டுக்கிடா வாகனம்.

முருகப்பெருமானுக்கு ஆட்டுக்கிடா வாகனமானது யாங்ஙனம்? 

ஆட்டை வாகனமாகக் கொண்ட ஆறுமுகப்பெருமான் !.
ஆறுமுகப்பெருமானுக்கு ஆடே முதல் வாகனம் !

முருகனுக்குப் பொதுவான வாகனமாக மயில் இருந்தாலும், இந்திரன் கொடுத்த யானை மற்றும் அன்னம், ஆடு, குதிரை ஆகியவையும் வாகனங்களாக இருந்து வருகின்றன. திருப்பரங்குன்றத்தில் இந்த நான்கு வாகனங்களையும் காணலாம். திருவிழாக்காலங்களில் சுப்பிரமணியர் இந்த வாகனங்களில் எழுந்தருளுகிறார். அங்கு அமர்ந்த கோலத்தில் உள்ள முருகனின் கிழே யானையும் ஆடும் வாகனமாக உல்ளது. சில கோயில்களில் கோழி வாகனமும் உண்டு.

[முருகப்பெருமான் கோவில் கொண்டு உள்ள எல்லா புண்ணிய தலங்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் திருப்பரங்குன்றத்தில் அருள் ஆட்சி புரியும் சுப்பிரமணிய சுவாமிக்கு மட்டும் ஆண்டுக்கு ‘‘மூன்று’’ முறை சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இங்கு ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விழாவின் போதும், தைமாதம் தெப்பத் திருவிழாவின் போதும், பங்குனி மாதம் பெரு விழாவின் போதும் சூரசம்ஹார விழா நடைபெற்று வருகிறது. இந்தத் தலத்தின் மூலவரான முருகன் தேவசேனாபதிக்கு கீழே ஆடு, மயில், யானை, சேவல் ஆகிய ௪ [ 4 ]  வாகனங்கள் இருப்பதைக் காணலாம்.

சிதம்பரம், இரத்தினகிரி, வேலூர், திருத்தணி, திருப்பரங்குன்றம், பிராணமலை, செட்டிகுளம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களில் யானை வாகனத்தில் முருகன் காட்சி தருகிறார். அதேபோல், திருப்போரூர் கோவிலில் வலம் வரும் போது ஆட்டு வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனத்துடன் கூடிய முருகனை தரிசிக்கலாம்.]

முருகனின் வாகனம் மயில் சாதாரண பறவை அல்ல. அது வருவதை முன்கூட்டியே அறியக்கூடிய ஞானப்பறவை.

சங்க இலக்கியமான பரிபாடலில் முருகனின் வாகனமாக ‘மேடம்’ எனும் ஆடு குறிப்பிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், தக்கலை அருகிலுள்ள குமாரகோயிலில் உற்சவ காலங்களில் முருகன் குதிரை வாகனத்தில் பவனி வருவார்.

“முருகனுக்கு மயில், யானை, ஆடு என்று மூன்று வாகனங்கள் இருப்பதற்கு உட்பொருள்கள் உண்டு. மனம், புத்தி, சித்தம் என்று உருவகப் படுத்தியதாக வைத்துக் கொள்ளலாம். மனம் தூண்ட, புத்தி அதனை ஏற்க, சித்தம் செயல்படுகிறது என்பர் அறிஞர்.. 'பிணிமுகம்' என்ற யானை மேலுள்ள முருகனின் கோலத்தைக் குமார தந்திரம் போன்ற பல நூல்கள் சொல்கின்றன. "வேழம் மேல்கொண்டு", " அங்குசம் கடாவ ஒரு கை" "ஓடாப் பூட்கைப் பிணி முகம் வாழ்த்தி" என்றெல்லாம் நக்கீரர் திருமுருகாற்றுப் படையில் பாடியுள்ளார்.

சரி ,முருகப்பெருமானுக்கு ஆடு வாகனமாக வந்தது எவ்வாறு ?

விஸ்வரூப முருகனிடம் தேவர்கள், சூரபத்மனால் சிறைபிடிக்கப்பட்ட தேவர்களை விடுவிக்க வேண்டிக் கொண்டார்கள். அவர் மகிழ்வுடன், தேவர்களே கலங்க வேண்டாம், எனது அவதாரமே சூரவதத்தின் பொருட்டு உருவானது தான், தங்கள் கோரிக்கையை விரைவில் நிறைவேற்றுவேன், என்றார். இந்நிலையில், தனக்கு ரிஷபம் வாகனமாக இருப்பது போல், தன் மகனுக்கு ஒரு வாகனம் வேண்டும் என விருப்பப்பட்டார் சிவபெருமான்.

தேவகான பாவலர் நாரதர் மூலமாக இதற்கான ஏற்பாட்டைச் செய்தார். நாரதா ! நீ யாகம் ஒன்றிற்கு ஏற்பாடு செய், என்றார். என்ன காரணத்துக்காக யாகம் நடத்தச் சொல்கிறார் என்பது புரியாவிட்டாலும், ஏதோ ஒன்று செய்ய தனக்கு நேரம் வந்துவிட்டதாக கருதிய நாரதர், சிவனின் கட்டளையைப் பதிலேதும் பேசாமல் ஏற்றுக் கொண்டார். யாகத்திற்காக அதவாயு என்ற பசுவை யாகத்திற்குக் கொண்டு வந்தனர் சிலர்.

யாகம் துவங்கியதும், அந்த பசு பயங்கரமாக சத்தமிட்டது. அனைவரும் ஆச்சரியமும், பயமும் கொள்ளும் வகையில் அந்த பசுவின் வயிற்றில் இருந்து ஒரு பயங்கர ஆடு தோன்றியது. அது யாகத்திற்கு வந்தவர்களை நாலாதிக்கிலும் விரட்டியடித்தது. நேரம் செல்லச் செல்ல அதன் உருவம் வளர்ந்து கொண்டே போனது. யாரும் அதன் அருகே நெருங்க முடியவில்லை. தேவர்கள் கதறினர்.
பார்த்தாயா ? சிவன் சொன்னதாகச் சொல்லி இந்த நாரதன் யாகத்தைத் துவங்கினான். யாகத்திற்கான காரணத்தையும் சொல்ல மறுத்தான். யாகத்தின் பலனை பெற்றுக் கொள்ள வந்த நம்மை, துன்புறுத்தி பார்க்க அவனுக்கு ஆசை. மாட்டை ஆடாக்கினான். ஏதோ மாயாஜாலம் செய்து, பெரிய கொம்புகளுடன் அது நம்மை முட்ட வருகிறது. இதென்ன கொடுமை. என்று திக்குத் தெரியாமல் ஓட்டம் பிடித்தனர்.

எல்லாரையும் கலகம் செய்பவன் நான் தான்; என்னையே கலக்கி விட்டாரே, இந்த சிவபெருமான், என்று நாரதரும் அங்கிருங்து தப்பினால் போதும், என ஓடினார். அஷ்டதிக்கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் உலகத்தில் எட்டு திசைகளையும் தாங்குகின்றன. அந்த ஆடு அந்த யானைகளையும் விரட்டியது. யானைகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகர்ந்ததால், உலகமே ஆடத் தொடங்கியது. 

தேவர்கள் நிலையில்லாமல் தவித்தனர். இதையெல்லாம் உணர்ந்தும் உணராதவர் போல் அயர்ந்திருந்தார் திருமால் . அந்த வைகுண்டத் திற்குள்ளும் புகுந்த ஆடு அட்டகாசம் செய்தது.
இந்த தகவல் முருகப் பெருமானுக்குச் சென்று விட்டது. அவர் தன் தலைமை தளபதி வீரபாகுவிடம் கண் ஜாடை காட்டினார். தலைவனின் கண்ணசைப்பிலேயே அனைத்தையும் புரிந்துகொண்ட வீரபாகு, உடனடியாக புறப்பட்டான். வைகுண்டத்தை கணநேரத்தில் அடைந்ததுமே, பலம் வாய்ந்த அவனை கண்டு ஆடு பின் வாங்கியது. இருப்பினும். அவனை முட்ட வருவது போல் பாசாங்கு செய்தது. வீரபாகு ஆட்டின் கழுத்தை ஒரே அழுத்தாக இழுத்து பிடித்தான். கொம்பை பிடித்து தரதரவென இழுத்து வந்து முருகனின் முன்னால் விட்டான்.

முருகப்பெருமானை பார்த்ததோ இல்லையோ, அந்த ஆடு அவர் பாதத்தில் பணிந்தது. முருகப்பெருமான் கருணைக் கடவுள். மிகப் பெரும் தவறு செய்தாலும், அவரிடம் பணிந்து விட்டால், கருணையுடன் மன்னித்து விடுவார். அவர் அந்த ஆட்டின் மீது ஏறி அமர்ந்தார்.
முருகப்பெருமானுக்கு அந்த ஆடே வாகனமாயிற்று.. ‘௧. அசம் ( அஜம் – ஆடு) மேவிய பெருமாளே ( கனவாலங் – திருப்புகழ்), ௨. தகர் இவர் வல் (குன்றுங் குன்றுந் - திருப்புகழ்) என்று அருணகிரியார் குறிப்பிடுகின்றார் .

௧  . ''தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா
மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே ...''
நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல்
வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே,

மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே,
௨. ''அண்டம் கண்டும் பண்டு உண்டும் பொங்கு அமர் தனில்
விஜயவன் இரதமை நடவிய துங்கன் வஞ்சன் சங்கன்
மைந்தன் தரு மகன் முனி தழல் வரு தகர் இவர் வல ...''

அண்டங்களை உண்டாக்கியும், முன்னொரு நாளில் அவற்றை
உண்டும், முடுகி வந்த போரில் அருச்சுனனின் ரதத்தைத் (தேர்ப்
பாகனாக வந்து) செலுத்திய பரிசுத்த மூர்த்தி, தீயாரை வஞ்சம்
புரிந்து அழிப்பவரும், பாஞ்ச ஜன்யம் என்ற சங்கை உடையவரும் ஆகிய
திருமாலின் புதல்வராகிய பிரம்ம தேவருடைய புத்திரரான நாரத முனிவர்
புரிந்த வேள்வியில் பிறந்த ஆட்டுக் கடாவின் மீது ஏறுகின்ற வல்லவனே,

இந்த சம்பவத்தை வாழ்வியலோடு ஒப்பிடலாம். கடவுள் இருக்கிறார் என்பது தெரிந்தும், ஒவ்வொரு ஜீவனும் தங்களை உயர்ந்த ஒரு பிறவியாகக் கருதிக் கொண்டு ஆணவத்துடன் திரிகின்றன; அநியாயம் செய்கின்றன. இறைவன் அவற்றை தம் பக்கம் இழுக்கிறான். அவை அவனைச் சரணடைந்தால், தனக்கும் ஐக்கியமாக்கிக் கொள்கிறான். திருந்தாத ஜென்மங்களை கடுமையாகச் சோதிக்கிறான். இங்கே ஆடு அடங்கிப் போனதால், அவனுக்குரிய வாகனமாகும் பாக்கியம் பெற்றது.
தேவர்கள் முருகனை மேஷ வாகனனே வாழ்க! எனக்கூறி வாழ்த்தினர். யாகம் நடத்தி அதிர்ந்து போன நாரதர், முருகனிடம் ஓடோடி வந்தார். ஆடு முருகன் முன்னால் பெட்டிப்பாம்பாக நிற்பதைப் பார்த்து, ‘இதென்ன அதிசயம். பசு ஆடானதும், அது உன்னைத் தேடி வந்ததும், எனக்கும் ஏதும் புரியவில்லையே என்றார்.’. முருகப்பெருமான் சிரித்தார்.

‘நாரதரே ! தாங்கள் தவத்தில் உயர்ந்தவர். யாகத்தின் பலனை இந்த உலகுக்கு எடுத்துக் காட்டவே இத்தகைய நாடகம் ஒன்றை என் தந்தையின் ஏற்பாட்டால் நடத்தினேன். நீங்கள் யாகம் செய்த போது தோன்றிய இந்த ஆடு எனக்கு காணிக்கை ஆயிற்று. இதுபோன்ற சிறு காணிக்கையைக் கூட நான் பெரிய மனதுடன் ஏற்பேன். மனமார்ந்த பக்தி செய்ததாகக் கருதி, ஒன்றுக்கு பத்தாக பலனளிப்பேன். தாங்கள் தொடர்ந்து இந்த யாகத்தை செய்யுங்கள். யாகத்தில் தோன்றிய இந்த ஆட்டை எனக்கு பரிசளித்ததால், உங்களுக்கு நூறு யாகம் செய்த பலன் கிடைக்கும்’, என்றார்.

புகைப்படங்கள்:
 யாழ்ப்பாணம் நல்லூர் ஆடுவாகனத்தில் கந்தப்பெருமானின் அற்புத தோற்றங்கள் .
நன்றி :

திருப்புகழ் அமிர்தம் 
 நல்லூர்க் கந்தசுவாமி கோயில் முகநூல் பக்கம் .

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE