ஆடி மாதம் சிறப்புகள்

By தேஜஸ்

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆடி மாதத்தை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.

மாதங்களைப் பொறுத்தவரை உத்திராயணம், தட்சிணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தட்சிணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்திராயணம் காலமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

தட்சிணாயணம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிராண வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.

ஆடி மாதம் சக்தி மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதை என்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்திராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தட்சிணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக்கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.

சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாற்றி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது. இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு.

ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.

துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி வெள்ளி, நாகலட்சுமி பூஜை, வரலட்சுமி நோன்பு ஆகிய தினங்களில் விரதம் இருந்து அம்மனை தரிசிப்பது மிகவும் நல்லது.
ஆகையால் ஆடி மாதத்தில் அம்மனை வழிபட்டு நல்ல ஆரோக்கியத்தைப் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்வோம்..!!
*ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?*

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்து, தன் சூலாயுதத்தால் ஆடியை அழிக்க துணிந்தார். அப்போது சூலாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார்வை என்மீது பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால், சிவபெருமான் என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் எடுத்து வந்தது தவறு. எனவே, பூவுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார்.

அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம்... நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார்கள்.

ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பூலோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார்.

ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பூலோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE