கஷ்டங்கள் விலகி... அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற... தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்...!!
அஷ்டமி என்பது பைரவரை வழிபடுவதற்குரிய முக்கிய தினமாகும். மாதந்தோறும் இரண்டு அஷ்டமி திதிகள் வந்தாலும் தேய்பிறை அஷ்டமியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.
இறைவனை வழிபடுவதற்கு எல்லா திதிகளும் விசேஷமானவை என்றாலும், பெளர்ணமி, அஷ்டமி முதலான திதிகளில் செய்யப்படும் வழிபாடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
பெளர்ணமி மற்றும் அஷ்டமி தினங்கள் சிவ வழிபாட்டுக்கு உரியவை. எனவே, இந்த நாட்களில் சிவபெருமானின் பைரவக் கோலங்களை வழிபடுவது சிறப்பு. அதிலும் தேய்பிறை அஷ்டமி திதி மிகவும் சக்தி வாய்ந்தது. அஷ்டமி திதியில் விரதமிருந்து பைரவரை வழிபட, பல்வேறு நன்மைகளைப் பெறலாம்.
அஷ்டமி என்பது திதிகளில் எட்டாவது ஆகும். அந்த நாட்களில் விரதமிருந்து பைரவரை அர்ச்சித்து வழிபடுவது சிறப்பு.
காலத்தின் கடவுளான காலபைரவர் தலைவிதியை மாற்றக்கூடிய ஆற்றல் கொண்டவர். சிவபெருமானின் அம்சமாக பைரவர் கருதப்படுகிறார்.
தமிழ் கடவுள்களில் ஒன்றான பைரவர் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருமேனிகளில் ஒன்றாவார்.
பௌர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட்டால் அவருடைய அருளை முழுமையாகப் பெறலாம். கோவிலுக்கு சென்று பைரவரை தரிசிக்க முடியாவிட்டாலும் வீட்டிலிருந்தே பைரவரை வழிபடலாம்.
பஞ்சதீப விளக்கு :
காலபைரவர் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆள்வதால் இவருக்கு கோவிலில் பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி, பஞ்ச விளக்குகளை ஏற்ற வேண்டும்.
அதாவது 5 அகல் விளக்குகளை எடுத்து கொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு விளக்கிலும் ஒவ்வொரு வகையான எண்ணெய் ஊற்றி தனித்தனியே தீபத்தை ஏற்ற வேண்டும்.
நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்கள் தான் பஞ்ச தீப எண்ணெய்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஒவ்வொரு விளக்கிலும் இந்த ஒவ்வொரு எண்ணெய்களை ஊற்றி, பஞ்சு திரி இட்டு தீபம் ஏற்றி, பைரவருடைய மந்திரத்தை 27 முறை உச்சரித்தால் எல்லா விதமான பிரச்சனைகளும் தீரும்.
இந்த நாளில் பைரவாஷ்டகம் வாசிப்பது உள்ளத்திலும், எண்ணத்திலும் நல்ல விஷயங்களை விதைக்கும். மேலும் நேர்மறை எண்ணங்கள் பெருகி குடும்பத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அத்தனையும் நீங்க செய்து எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று சுபிட்சம் அடைய செய்யும்.
பைரவர் வழிபாடு :
நவகிரக தோஷங்கள் நீங்க சதுர்கால பைரவருக்கு செவ்வரளி பூவால் 9 வாரங்கள் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும்.
வறுமை நீங்க தேய்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரம், சகஸ்ரநாம அர்ச்சனை செய்து 11 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
இழந்த செல்வத்தை திரும்பப்பெற 11 அஷ்டமிகள் பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். பைரவ தீபம் என்பது மிளகைச் சிறு மூட்டையாகக்கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் இட்டு தீபம் ஏற்றுவதாகும்.
சனி தோஷம் நீங்க பைரவருக்கு 9 சனிக்கிழமைகள் சிவப்பு நிறப் பூக்களால் அர்ச்சனை செய்து 4 பைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும்.
திருமணத்தடை நீங்க ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் திருநீறு அபிஷேகம் செய்து மிளகு வடைமாலை சாற்றி அர்ச்சனை செய்ய வேண்டும்.
வீட்டில் செல்வம் செழிக்க தேய்பிறை அஷ்டமிகளில் சதுர்கால பைரவருக்கு சொர்ண புஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசுகளை வீட்டில் பணப் பெட்டியில் வைக்கச் செல்வம் செழிக்கும்.
ஸ்ரீ பைரவரை வணங்குவதால் வறுமை மற்றும் பகைவர்களின் தொல்லை நீங்கும். மேலும், வியாபார முன்னேற்றம், தனலாபம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
பைரவருக்கு மிளகு கலந்த அன்னம் மற்றும் வடையை நைவேத்தியமாக படைக்கலாம். அனுமனுக்கு வடைமாலை சாற்றுவது போல், பைரவருக்கும் வடைமாலை சாற்றி வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.
பலன்கள் :
பைரவரின் அருளோடு அஷ்ட லஷ்மிகளின் அருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
கடன் தொல்லை நீங்கும்.
சனி தோஷம், ஏழரை சனி, அஷ்டம சனி, பாத சனி போன்ற துன்பங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து விதமான கஷ்டங்கள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும்.
மன பயம் நீங்கி, தைரியம் பிறக்கும்.
தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மன அமைதியும், சந்தோஷமும் பெருகும்.