வளர்பிறை ஏகாதசி பூஜை பலன்கள்

By தேஜஸ்

செய்த பாவங்கள் நீங்க.. புண்ணியம் பெருக.. விரதமிருந்து மனதார வழிபடுங்கள்..!

பௌர்ணமி விரதம், அமாவாசை விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால் ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு. 

பெருமாளுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியைதான் புண்ணியகாலம் என்பர்.

ஏகம் + தசம் = ஒன்று+ பத்து = பதினொன்று அதாவது பெளர்ணமிக்குப் பிறகு பதினோராவது நாளும், அமாவாசைக்கு பிறகு பதினோராவது நாளும் ஏகாதசி எனப்படுகிறது. இதில் அமாவாசைக்கு பிறகு வருகிற ஏகாதசி வளர்பிறை ஏகாதசி என்றும், பெளர்ணமிக்கு பிறகு வருகிற ஏகாதசி தேய்பிறை ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

ஏகாதசி அன்று விரதமுறையைப் பின்பற்றி வழிபாடு செய்யப்படுவதால் உடல் மற்றும் உள்ளம் தூய்மை அடைகிறது.

இவ்விரத முறையை ஆண், பெண் என எவரும் இவ்விரதத்தினைக் கடைப்பிடிக்கலாம்.

காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரம் இல்லை.. ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை.. என்ற பழமொழியின் மூலம் இவ்விரதத்தின் சிறப்பினை அறியலாம்.

இந்த விரதத்தை அனுஷ்டித்தால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் என அனைத்தையும் கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம்.

ருக்மாங்கதன், அம்பரீஷன் ஆகிய மன்னர்கள் இவ்விரத முறையினைக் கடைப்பிடித்து பெரும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவார்.
ஏகாதசி விரத முறை :

ஏகாதசி மரணமும், துவாதசி தகனமும் யோகிகளுக்கு கூட கிடைக்காது என்ற சொல் வழக்கில் இருந்தே இந்த விரதங்களின் சிறப்பை உணர்ந்து கொள்ளலாம். 

எனவே, ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள், ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒருவேளை மட்டுமே உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, விரதத்தை தொடங்க வேண்டும்.

ஏகாதசி திதி முழுவதும் முடிந்தவர்கள் பூரண உபவாசம் இருத்தல் பலன் தரும். ஏழு முறை துளசி இலையை பகவான் நாமம் சொல்லி சாப்பிடலாம். உடல்நிலை மற்றும் வயோதிகம் காரணமாக பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பூஜையில் வைத்து இறைவனுக்கு படைத்து பின் பிரசாதமாக உண்ணலாம். ஏகாதசிக்கு அடுத்த நாளான துவாதசி அன்று அதிகாலையில் உணவு அருந்துவதை தான் நாம் பாரணை என அழைக்கிறோம்.

ஏகாதசி நாளில், பெருமாளை ஆராதனை செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். நாராயண நாமம் சொல்லி, துளசி தீர்த்தம் பருகலாம். அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று, பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி பிரார்த்தனை செய்யுங்கள்.
ஏகாதசி விரதம் இருப்பது ஏன்?

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மானிடர்களுக்கும் மிகுந்த தொல்லை அளித்து வந்தான் முரன் என்னும் அசுரன். இதனால் அவர்கள் அசுரனை அழித்து தங்களை காக்குமாறு ஈசனை வழிபட்டனர். அவர்களை மகாவிஷ்ணுவை சரணடையுமாறு சிவபெருமான் கூறினார். அதன்படி அனைவரும் விஷ்ணுவை சரணடைந்தனர். அவர்களை காக்க எண்ணிய மகாவிஷ்ணு, அந்த அசுரனோடு போர் புரியத் தொடங்கினார். 

போர் 1000 ஆண்டுகள் கடுமையாக நீடித்தது. அதன் பிறகு மிகவும் களைப்படைந்த மகாவிஷ்ணு பத்ரிகாஸ்ரமத்தில் உள்ள ஒரு குகையில் படுத்து ஓய்வெடுத்தார். அந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு, “அசுரன்” பகவானை கொல்லத் துணிந்த போது, அவருடைய திவ்ய சரீரத்தில் இருந்து அவருடைய சக்தி ஒரு பெண் வடிவில் வெளிப்பட்டது. இவளை அசுரன் நெருங்கிய வேளையில் அவளிடம் இருந்து வெளிப்பட்ட ஓங்காரமே, அசுரனை எரித்து சாம்பலாக்கியது. 

விழித்தெழுந்து நடந்ததைக் கண்ட நாராயணன், அந்த சக்திக்கு “ஏகாதசி” எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் சகல நன்மைகளையும் தருவேன் என வரமளித்து தன்னுள் மீண்டும் சக்தியை ஏற்றுக்கொண்டார். 

எனவே, ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து, நாராயணனின் அருளும் வரமும் பெற்ற ஏகாதசி நாளில் நாமும் கண்விழித்து விரதம் கடைபிடித்தால் அவரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று நீங்காப் புகழுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

ஒரு முறை எமராஜன் நாராயணனிடம் எல்லோரும் ஏகாதசி விரதம் இருப்பதால் எங்களுக்கு வேலை இல்லை என்று கூறினார். உடனே நாராயணன் பாபபுருஷனை அனுப்பி ஏகாதசி அன்று உண்ணும் உணவிலெல்லாம் நீ இருப்பாயாக என்று வாக்கு கொடுத்தார். எனவே, ஏகாதசி அன்று உண்ணும் உணவு பாவ மூட்டையாக கருதப்படுகிறது.

விரத பலன்கள்:

நோய்கள் நீங்கி, உடல் நலம் பெறும். 
பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும்.
அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறும். 
ஒளிமயமான வாழ்வு அமையும்.

கு பண்பரசு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE