அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்!

By நந்தா

இந்த கோயில் எங்கு உள்ளது?

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூர் என்னும் ஊரில் அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் பேரூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. பேரூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

இத்தல மூலவர், தலையில் காமதேனு கன்றின் குளம்படி தழும்புடன் காட்சியளிக்கிறார்.
இக்கோயிலில் சோமாஸ்கந்த வடிவில் சிவனுக்கும், அம்மனுக்கும் நடுவில் முருகன் அருள்பாலிக்கிறார்.
இக்கோயிலின் முன்பு 'பிறவாப்புளி" என்ற புளியமரம் இருக்கிறது. இதன் விதைகளை எங்கு போட்டாலும் முளைக்காது.
 இக்கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள சாணத்தில் கூட புழுக்கள் உண்டாகாது.

இது முக்தி தலம் என்பதால் நாய் வாகனம் இல்லாமல் ஞான பைரவர் இங்கு அருள்பாலிக்கிறார்.
அம்மன் சன்னதிக்கு வெளியே வரதராஜப் பெருமாளும், பிரகாரத்தில் மரத்திலே உருவான பெரிய ஆஞ்சநேயரும் காட்சியளிக்கின்றனர்.

வேறென்ன சிறப்பு?
பொதுவாக சிவாலயங்களில் நடனம் ஆடும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும். ஆனால், இங்கு நடனம் ஆடி முடியப்போகும் நிலையில் உள்ள நடராஜரை தரிசிக்கலாம்.

இந்த நடராஜரின் முகத்தில் குறும்பு பார்வையும், மேடான கதுப்பு கன்னங்களும், பின்புறத்தில் தாழ் சடையும், நடனம் ஆடி முடியப்போகும் நிலையில் கால்கள் தரையை நோக்கி தாழ்ந்தும் காட்சியளிக்கிறார்.

இங்குள்ள கனகசபையில்தான் பிரம்மா, விஷ்ணு, காளி, சுந்தரர் ஆகியோருக்கு நடராஜர் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்துள்ளார்.
சிதம்பரத்திற்கு அடுத்தபடியாக இங்கு திருவாதிரை திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவதால் இத்தலம் 'மேலைச்சிதம்பரம்" என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள பனைமரம் 'இறவாப்பனை" எனப்படுகிறது. இங்கு தரிசனம் செய்தால் அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?
பங்குனியில் பிரம்மோற்சவ தேரோட்டம் சிறப்பாக நடைபெறுகிறது.

இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

முக்தி வேண்டியும், புகழ் கிடைக்கவும், நினைத்த காரியம் நடைபெறவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.
இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் சிவனுக்கு அபிஷேம் செய்தும், வில்வ இலையால் அர்ச்சனை செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE