நாம் கடவுளுக்கு விரதம் இருப்பது நமது வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான். செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.
மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு.
நவகிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகரானவர் சனிபகவானே ஆவார்.
சனிபகவான் யாருக்கும் எந்தவிதமான பாரபட்சமும் பார்க்க மாட்டார். பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்தவர்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வரும் பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்கள் ஏதேனும் ஒன்றில் சனிபகவானுக்கு விரதம் தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
சனி பகவானின் வாகனம் காகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் தினமும் அல்லது சனிக்கிழமை மட்டுமாவது காகத்துக்கு உணவு படைப்பவர்களுக்கு முன்னோரின் ஆசிகளுடன், சனி பகவானின் ஆசிகளையும் பெற்றுத் தரும் என்பது உறுதி.
இயற்கையிலேயே அசுப கிரகமான சனி கிரகத்தின் 3, 7, 10ம் பார்வை பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், சனீஸ்வரரை நேருக்கு நேர் நின்று தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள்.
சனிபகவான் புராணக்கதை
நவகிரகங்களை தனது கட்டுப்பாட்டில் வேலைக்காரர்களாக வைத்து கொடுமைப்படுத்தி வந்தான் இலங்கை வேந்தன் ராவணன். இவன் சூரியன், சந்திரன், செவ்வாய் முதலான ஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழே அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் படுக்கவைத்து, அவர்களின் மார்பின் மீது கால்களை வைத்து மிதித்துக்கொண்டு அரியணை ஏறும், இறங்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
இதற்காக நவகிரகங்கள் ஒன்பதும் ஒவ்வொரு படிகளில் வரிசையாக மேல்நோக்கி படுக்கவைக்கப்பட்டிருந்தது. ஆனால், சனி கிரகம் மட்டும், தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதால் மேல் நோக்கிப் பார்க்காமல், கீழ் நோக்கி குப்புறப் படுத்திருந்தது.
ராவணனின் கொடுமைக்கு முடிவு கட்ட நினைத்த நாரதர், ராவணன் சபைக்கு வந்தார். அங்கே ராவணன் நவக்கிரகங்களை தனது காலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம் நாரதர், "ராவணா, உனது கட்டளையை மதித்து இந்த நவகிரகங்கள் அனைவரும் மேல்நோக்கி படிகளில் படுத்திருக்கிறார்கள். ஆனால், சனி கிரகம் மட்டும் உன்னை அவமதிக்கும் வகையில் கீழ் நோக்கி படுத்திருக்கிறது பார்த்தாயா?" என்று கூற, ராவணனும் சனி கிரகத்தை மேல் நோக்கிப் படுக்கச் சொன்னான்.
தனது பார்வை பட்டால் கெடுதல் விளையும் என்பதை சனி கிரகம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ராவணன் கேட்காததால், சனி கிரகமும் படிக்கட்டில் மேல் நோக்கியபடி திரும்பிப் படுத்தது. ராவணன் தனது காலால் சனி கிரகத்தை மார்பில் மிதித்து ஏறுகையில், சனி கிரகத்தின் குரூரமான பார்வை ராவணனின் மீது விழுந்தது. அப்போது முதல் ராவணனுக்கு ஏழரை ஆரம்பித்தது. அதன்பின், சில காலங்களிலேயே இராமனின் கையால் வீழ்த்தப்பட்டு மடிந்தான் இராவணன்.
நாரதரும் தான் வந்த வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் அங்கிருந்துப் புறப்பட்டார். புராணத்தில் கூறப்படும் இந்த நிகழ்ச்சியின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பதே சிறந்தது என்பதை அறியலாம்.
சனிக்கிழமை தோறும் நவக்கிரகம் சுற்றும் பழக்கம் உள்ளவர்கள், சனீஸ்வரனை நேருக்கு நேர் நின்று வழிபடாமல் சன்னதிகளின் இரு பக்கங்களில் நின்று வழிபடலாம். இவ்வாறு வழிபட்டால் சனிபகவானின் கெடு பார்வையால் நமக்கு எந்தவித தீங்கும் ஏற்படாது.
மேலும், ஏழரை சனி, பாதச் சனி, ஜென்ம சனி, அஷ்டம சனி நடைபெறும் பட்சத்தில், பாதிக்கப்பட்டவர்கள் சனிபகவானுக்கு 27 தடவை சுற்றி வந்து எள் விளக்கு ஏற்றி வந்தால் சனீஷ்வரனின் தாக்கம் குறைந்து, ஆபத்துகள் விலகும் என்பது ஐதீகம்.
விரத முறைகள் :
அன்றைய தினத்தில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் உங்கள் வீட்டின் பூஜையறையை சுத்தம் செய்து, அதன் முன்பாக அரிசி மாவில் தாமரை பூ கோலம் போட வேண்டும். பின்பு அக்கோலத்தின் நடுவில் ஒரு கலசத்தில் நீரை நிரப்பி வைக்க வேண்டும்.
சனி பகவானின் அம்சம் கொண்டவர் திருப்பதி திருமலை வெங்கடாசலபதியின் படத்திற்கு வாசமுள்ள பூக்களை சூட்டி, புது நீல நிற துணியை வைத்து, எள் கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.
விரதம் மேற்கொள்பவர்கள் நீல நிற உடைகளை அணிவது சிறப்பு.
மேலும் நெய் தீபங்கள் ஏற்றி, சந்தன மணம் கொண்ட தூபங்கள் கொளுத்தி சனி பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து பூஜைகள் செய்ய வேண்டும்.
சனிக்கிழமை விரதம் மேற்கொள்பவர்கள் காலை முதல் மாலை வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். காலையில் சிறிது உணவை காகங்கள் உண்ண வைக்க வேண்டும்.
மாலை அருகில் உள்ள பெருமாள் ஆலயம் சென்று துளசி மாலை சாற்றி வழிபாடு செய்யலாம்.
மாலையில் பூஜை செய்து முடித்து, நைவேத்திய பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.
சனிக்கிழமை விரதத்தின் பலன்கள்:
சனிபகவானானவர் ஆயுள் தரும் ஆயுள்காரகனாக இருக்கிறார். எனவே சனிக்கிழமை விரதத்தை மேற்கொள்பவர்கள் சனீஸ்வரனின் அருள் பெற்று நீண்ட ஆயுளை பெறலாம்.
தொழில், வியாபாரங்களில் நிலையான வருமானம், மேலும் தொழில் விருத்தியும் உண்டாகும்.
ஆரோக்கியம், ஆயுள், செல்வம் பெருகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வது சனி பகவானை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்றாகும். எனவே, சனிக்கிழமைகளில் உங்களால் முடிந்த அளவுக்கு தானம் செய்வது சிறப்பு.