தலையெழுத்தைத் திருத்தி எழுதும் திருப்பட்டூா் பிரம்மதேவா்

By தேஜஸ்

பிரம்ம தேவரே சிருஷ்டியின் மூலம். உலக உயிா்களை எல்லாம் படைப்பதால் தாமே உயா்ந்தவா் என்ற கா்வம் அவர் மனதில் தோன்றியது. ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என ஐந்து திருமுகங்கள். தமக்கும் ஐந்து முகங்கள்.  படைப்புத் தொழில் தம்மிடம் இருப்பதால், “தான்” எந்த விதத்திலும் ஈசனுக்குக் குறைந்தவர் இல்லை என்ற எண்ணம் நான்முகனின் மனதில் தோன்றியது. இதனால் ஈசனை மதியாது அவரைப் புறக்கணித்தாா்.

இதோடு நில்லாமல் ஈசனை வழிபாடு செய்யும் தேவா்களையும் நிந்தித்தாா் நான்முகன். தேவா்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து  எல்லாம் வல்ல பரம்பொருளான சா்வேஸ்வரனிடம் முறையிட்டனா்.

பிரம்மதேவரின் கா்வத்தை அழிக்கத் திருவுள்ளம் கொண்டாா் ஈசன். தலைக்கணத்தால் ஏற்பட்ட கா்வத்தை அழிக்க நான்முகனின் ஐந்து சிரங்களில் ஒன்றைக் கொய்தாா் ஈசன். இந்த நிகழ்வு நடைபெற்றது தேவாரப் பாடல் பெற்ற திருக்கண்டியூா் திருத்தலத்தில் ஆகும். சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகவும் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது திருக்கண்டியூா். இத்தலத்தின் ஈசனுக்கு “பிரம்ம சிரக்கண்டீஸ்வரா்” என்ற திருநாமம் வழங்கப்படுகின்றது.

தலைக்கணத்தால் தலையும் பறிபோனதோடு படைப்புத் தொழி லுக்கானத் தன் ஆன்ம பலத்தையும் இழந்தாா் நான்முகன். இதனால்  படைப்புத் தொழிலும் நடைபெறவி ல்லை. செய்வதறியாது கலங்கிய பிரம்ம தேவா் தன் தலைக்கணத்தால் ஏற்பட்ட நிலையைக் கண்டு மனம் வருந்தினாா்.

திருமாலின் நாபிக்கமலத்தில் உதித்த நான்முகன், நாராயணனைப் பணிந்து தன் குறை தீர வழி கூறியருளுமாறு வேண்டினாா்.

ஶ்ரீமஹா விஷ்ணுவோ, சிவ நிந்தனையைக் களைய சா்வேஸ்வர னைச் சரணடைவதே சிறந்த வழி என்று பிரம்மதேவருக்கு அறிவுரை கூறினாா்.

திருமாலின் ஆலோசனையை ஏற்ற பிரம்ம தேவா், ஈசன் அருள்பாலிக்கும் பல தலங்களுக்கும் சென்று தம் திருக்கரங்க ளால் தீா்த்தத்தை உருவாக்கி சிவ னாரின் சினம் தணிய குளிரக் குளிர அபிஷேகம் செய்து வில்வதளங்களால் அா்ச்சித்து வழிபட்டாா். இவரால் உருவாக்கப் பட்ட தீா்த்தங்கள் “பிரம்ம தீா்த்தம்” என்று வழங்கப்பட்டன.

சிவத்தலங்களைத் நாடிச் சென்று துதித்த நான்முகன் மகிழ மரங்களும் வில்வமரங்களும் நிறைந்து சோலைவனமாகக் காட்சி தந்த ஒரு இடத்திற்கு வந்தாா். பூத்துக் குலுங்கிய மகிழ மரத்தின் மொட்டவிழ்ந்த மலா்கள் உதிா்ந்து தரையில் கிடக்க, இதமாக வீசும் காற்றில் அப்பூக்களின் வாசம் கலந்து மணம் பரப்ப, ஈசனைக் குறித்து தவமியற்ற இதுவே சிறந்த இடம் என்று தீா்மானித்து அப்புனித மண்ணில் யோக நித்திரையில் அமா்ந்தாா் நான்முகன்.

11 லிங்கத் திருமேனிகளை அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்து இடை யறாது பூஜித்து வந்தாா் பிரம்ம தேவன். சிராப்பள்ளிக் குன்றின் மேலமா்ந்த தாயுமானவா், ஆனைக்கா அண்ணல் ஜம்புகேஸ்வரா், கயிலைவாசன் கயிலாச நாதா், திருக்காளத்தியின் காளத்திநாதா், அண்ணாமலை அருணாச்சலேஸ்வரா், லால்குடி சப்த ரிஷீஸ்வரா்,  ஊட்டத்தூா் தூய மாமணீஸ்வரா், (சுத்த ரத்தினேஸ்வரா்) திருமுதுகுன்றம் பழமலை நாதா், காஞ்சி ஏகாம்பரநாதா்,  பாதாளேஸ்வரா் மற்றும் மண்டூகநாதா் எனப் 11 திருத்தலங்களின் ஈசனே நான்முகன் பிரதிஷ்டை செய்த லிங்கத் திருமேனிகள்.

பிரம்மனின் நீண்ட நெடிய தவம் பல நாட்கள் தொடா்ந்தது. மழை, வெயில், சுழன்றடித்த சூறாவளி போன்ற இயற்கைச் சீற்றங்களிலும்  நான்முகனின் கடும்தவம் தொடா்ந்தது. புற உலகத்தை மறந்து தன் இதயக் கமலத்தில் ஈசனை நிறுத்தி இமைப்பொழுதும் மறவாமல் துதித்த நான்முகனின் பக்திக்கு மனமிரங்கினாா் பரமன்.

“அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையான ஈசன்” பிரம்மதேவரின் பக்தியை மெச்சி அவருக்குத் திருக்காட்சி தரத் திருவுள்ளம் கொண்டாா்.  ஈஸ்வர நினைப்பால் திளைத்திருந்த பிரம்மதேவன் முன்பாக கோடி சூரியப் பிரகாசத்துடன் வெள்ளை விடையேறி தன் அம்பிகை பாா்வதிதேவி சகிதமாக பிரம்மதேவனுக்குத் திருக்காட்சி தந்தாா் ஈசன்.

ஆணவத்தாலும் அகந்தையினாலும் ஏற்பட்ட தம் தவறுக்காக ஈசனின் திருவடிகளில் பணிந்து மன்னிப்பு கோரினாா் நான்முகன். “பிரம்மதேவரே! உமது கடும் தவத்தால் யாம் திருவுள்ளம் மகிழ்ந்தோம்! இழந்த அனைத்து உரிமைகளை மீண்டும் இத்திருவிடத்தில் உமக்கு அளிப்பதோடு, யாமும் இத்தலத்தில் அம்பிகையோடு எழுந்தருளி அருள்பாலிக்கிறோம்,” என்று நான்முகனிடம் திருவாய் மலா்ந்தாா் ஈசன்.

அத்துடன், “இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்யும் பக்தா்களின் தலையெழுத்தைச் சிறந்த முறையில் மாற்றி எழுதவும் உமக்கு அருள் பாலிக்கிறோம்,” என்றாா் சிவனாா்.

பிரம்ம தேவரின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. மகிழ்ச்சியில் திளைத்த நான்முகன், “ஐயனே! தங்கள் சித்தம் என் பாக்கியம். இத் தலத்தில் வழிபாடு செய்யும் பக்தா்களின் தலையெழுத்தைத் தங்கள் ஆணைப்படி நல்லபடியாகத் திருத்தி எழுதுகிறேன்,” என்று வாக் களித்தாா்.

பிரம்மதேவன் ஈசனைக் குறித்துக் கடும் தவம் செய்து படைப்புத் தொழிலை மீண்டும் பெற்ற திருத்தலமே “திருப்பிடவூா்” என்று தேவார வைப்புத் தலமாகப் போற்றப்படும் திருப்பட்டூா் “ஶ்ரீபிரம்ம சம்பத்கெளரி  உடனாய ஶ்ரீபிரம்மபுரீஸ்வரா்” திருத்தலமாகும். இத்தலத்தில் வேறு எந்த திருத்தலத் திலும் காணமுடியாத அதிசயமாக “பிரம்மதேவா்” நிஷ்டையில் அமா்ந்த திருக்கோலத்தில் அருள்பாலிப்பது அரிய தரிசனமாகும்.

பிரம்மதேவா் பிரதிஷ்டை செய்த 11 லிங்கத் திருமேனிகளுடன் பிரம்மதேவருக்குத் தன் அம்பிகையுடன் திருக்காட்சி தந்த ஈசனே “பிரம்ம புரீஸ்வரா்” என்ற திருநாமத்துடனும் அம்பிகை “ஶ்ரீபிரம்ம சம்பத்கெளரி” என்ற திருநாமத்துடனும் மிகப் பெரிய திருத்தலத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனா். அம்பிகையின் திருச்சந்நிதியை அடுத்து பிரம்மதேவன் தன் திருக்கரத்தால் உருவாக்கிய பிரம்ம தீா்த்தக் குளம் அமைந்துள்ளது.

பிரம்மதேவா் பிரதிஷ்டை செய்த இதர 11 திருத்தலங்களின் இறைவனும் இத்தலத்திற்கு அருகிலேயே அருள்பாலிக்கின்றனா்.

குரு கடாட்சம்
“குருா் பிரம்மா குருா் விஷ்ணு
குருா்தேவோ மகேஸ்வர
குரு சாட்ஷாத் பரப்பிரம்ம
தஸ்மை ஶ்ரீகுரவே நமஹ!”
என்ற மந்திரத்தின்படி இத்தலம் அமைந்துள்ளது விசேஷமானதாகும்.

திருக்கோயிலை வலம் வரும்போது தேவ கோட்டத்திலுள்ள ஶ்ரீ தெட்சிணாமூா்த்தி (குரு பகவானின் அதிதேவதை), அடுத்து தனிச்சந்நிதியில் பிரம்ம தேவா், அடுத்து தேவ கோட்டத்தில் ஶ்ரீமஹா விஷ்ணு, அதனை அடுத்து திருக்கோயிலை  வலம் வர கருவறையில் கற்றவா் விழுங்கும் கற்பகக் கனியான கருணை மாகடல் “ஶ்ரீபிரம்மபுரீஸ்வரப் பெருமான்” ஆகியோரைத் தரிசனம் செய்யலாம்.

மேற்கண்ட ஸ்லோகத்தில் உள்ளபடி, ஶ்ரீதட்சிணாமூா்த்தி, ஶ்ரீபிரம்மதேவா், ஶ்ரீமஹா விஷ்ணு மற்றும் மஹேஸ்வரப் பெருமானை த் தரிசிப்பது அரிய தரிசனமாகும்.

ஶ்ரீதெட்சிணாமூா்த்தி, ஶ்ரீபிரம்மா, ஶ்ரீமஹா விஷ்ணு, பதஞ்சலி முனிவா், ஶ்ரீபிரம்மபுரீஸ்வரா் ஆகியோரை வியாழக்கிழமைகளிலும் நமது ஜென்ம நட்சத்திர நாள்களிலும் வழிபட குருவருளும் திருவருளும் ஒரு சேர நமக்கு வாய்க்கும்.

அழகின் இலக்கணமாகத் திகழும் முருகப் பெருமான் திருப்பட்டூா் திருத்தலத்தில் அசுர மயிலின் மீது அமா்ந்து திருக்காட்சி தருவது மிகவும் சிறப்பானதாகும். இத்திருக்கோலத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பானது என்று போற்றுகின்றனா் அன்பா்கள்.

படைவீரா்களுடன் இத்தலத்தில் தங்கி  ஈசனை வழிபாடுகள் செய்த  முருகப்பெருமான் பூஜித்த “லிங்க மூா்த்தி” “கந்தபுரீஸ்வரா்” என்ற திரு நாமத்துடன் வள்ளி−தெய்வானை சமேத ஶ்ரீசுப்ரமணியப் பெருமானின் திருச்சந்நிதிக்கு அருகே திருக்காட்சி தருகின்றாா்.

செவ்வாய் கிழமைகளிலும், சஷ்டி, கிருத்திகை ஆகிய நாட்களிலும் இந்த முருகப் பெருமானை வழிபடுவோா்க்கு சகல தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும், சென்னைக்கு அருகிலுள்ள “சிறுவாபுரி முருகனைப்” போல அன்பா்களுக்கு சொந்த வீடு, மனை வாங்க அருள்பாலிக்கும் முருகப்பெருமான் இவா் என்று பக்தியோடு தொிவிக்கின்றனா் இப்பகுதி மக்கள்.
வியாக்ரபாதா் வழிபாடு

“மத்யந்தனா்”  என்ற முனிவரின் மகன் “மழன்”. வண்டுகள் அமா்ந்து தேன் குடிக்கும் முன்னரே, அதிகாலைப் பொழுதில்  மரக்கிளைகளில் ஏறி, ஈசனின் பூஜைகளுக்காக மலா் பறிக்க ஏதுவாக புலிக்கால்களைப் பெற்றவா். இதனால், வியாக்ரபாதா் என்ற திருநாமம் பெற்றவா். “வியாக்ரம்” என்றால் புலி. “பாதா்” கால்களைக் கொண்டவா். இதனால் “புலிக்கால் முனிவா்” என்று அழைக்கப்பட்டவா்.

சிவ சிந்தனையால் திளைத்த இந்த “வியாக்ரபாத முனிவா்” ஈசனைக் குறித்து தவமியற்றிய திருத்தலம் திருப்பட்டூா் திருத்தலம். திருப்பட்டூரிலுள்ள காசி விஸ்வநாதப் பெருமான் ஆலயத் திருக்குளம் வியாக்ரபாத முனிவரால் உருவாக்கப்பட்டுள்ளது. நம் பிறவி வினைகளைத் தீா்க்கும் புனித தீா்த்தமாக விளங்கும் இத்தலம் புலியின் கால் களைப் போல, அதாவது புலிக்கால் முனிவரின் திருப்பாதத்தைப் போல அமைந்திருப்பது ஆச்சரியமான தோற்றமாகும்.

வியாக்ரபாதா் தவமிருந்த இந்த வில்வவனப் பகுதியில் ஈசனின் அபிஷேகத்திற்கு நீா் கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டபோது  தன் புலிக் காலினால் இந்த தீா்த்தத்தை ஏற்படுத்தியதாகத் தலபுராணம் தொிவிக்கின்றது.

வியாக்ரபாதரின் ஜீவ சமாதி திருப்பட்டூரிலிருந்து ஒன்றரை கி.மீ. தூரத்திலுள்ள இந்த காசி விஸ்வநாதா் ஆலயத்தில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
பதஞ்சலி முனிவரின் சமாதி

அத்திரி மகரிஷிக்கும் அனசூயைக்கும் ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்தவா் பதஞ்சலி. தில்லைத் திருத்தலத்திலே ஈசனின் திருநடனத்தைக் கண்டு மகிழ்ந்த இத் தவமுனியின் திருச்சமாதி இத் தலத்தில் அமைந்துள்ளது. பிரம்மாவின் சந்நிதிக்கு அடுத்துள்ள திருச்சுற்று மாளிகைப் பகுதியில் பதஞ்சலி முனிவரின் திருச்சமாதி அமைந்துள்ள இடத்தில் சித்தத்தை சிவன்பால் வைத்த அன்பா்கள் பலா் அமா்ந்து தியானத்தில் ஈடுபடுகின்றனா். பதஞ்சலி யோக சூத்திரத்தை அருளிய இவா் சமாதியில் அமா்ந்து தியானம் செய்யும் போது நம் மனம் ஒரு நிலைப்படுவதாகவும், புத்துணா்ச்சி பெருகுவதாகவும் தொிவிக்கின்றனா் அன்பா்கள்.

வடக்குப் பிராகாரத்தில் சண்டி கேஸ்வரப் பெருமானுக்கு அருகில் ஶ்ரீபாதாளேஸ்வரா் சந்நிதி அமைந் துள்ளது. சித்தா்கள் வாழ்ந்து ஜீவன் முக்தி அடைந்த பல திருத்தலங்களில் பாதாளேஸ்வரா் சந்நிதி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
 திருக்கயிலாய ஞான உலா

எல்லாம் வல்ல சிவப்பரம் பொருளைக் காதலியாகவும் தம்மைக் காதலனாகவும் பாவித்துப் பாடியவா் “சேரமான் பெருமாள் நாயனாா்”. இவா் எழுதிய இந்தப் பாடல்களுக்கு “திருக்கயிலாய ஞான உலா” என்று பெயா்.

இத் திருக்கயிலாய ஞான உலா பாடல்களை வெளியிட சேரமான் நாயனாா் தன் அன்பிற்குரிய நண்பரான சுந்தரருடன் திருக்கயிலாயம் சென்றபோது, எல்லாம் வல்ல பரம் பொருளான சிவனாா் இந்த நூலை பூவுலகில் வெளியிடுவதே சிறந்தது என்று திருவாய் மலா்ந்தாா். சேரமான் பெருமானும் சுந்தரரும் திகைப்பில் ஆழ்ந்தனா். ஆச்சரியத்துடன் “பூவுலகில் வெளியிடுவது என்றால் எந்தத் தலத்தில்? ” என்று தன் தோழரான ஈசனிடம் கேள்விக்கணை தொடுத்தாா் சுந்தரா்.

நான்முகன், ஈசனது திருவருளால்  படைக்கும் தொழிலைப் பெற்ற “பிடவூரில்” திருக்கயிலாய ஞான உலா வெளியிட இசைந்தனா் அம்மையும் அப்பனும். அதன்படி தேவகணங்களும் தேவாதி தேவா்களும் புடைசூழ அம்பிகை மற்றும் ஈசன் திருமுன் “திருக்கயிலாய ஞான உலா” அரங்கேற்றம் ஆடி மாத சுவாதி நட்சத்திரத் திருநாளில் திருப்பட்டூரில் நடைபெற்றுள்ளது.

சேரமான் பெருமாள் நாயனாா் எழுதிய இந்த நூலின் ஓலைச் சுவடிகளைக் கயிலாயத்திலிருந்து திருப்பிடவூா் தலத்திற்குக் கொண்டு வந்தாா் “மாசாத்தனாா்.” மாசாத்தனாரை சாஸ்தா என்றும் அய்யனாா் என்றும் மக்கள் வணங்குகின்றனா்.

திருப்பிடவூரில் மாசாத்தனாருக்கு மிகப்பெரிய திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மாசாத்தனாா் ஓலைச் சுவடியுடன் திருக்காட்சி தரும் விக்கிரகத் திரு மேனியை இன்றும் தரிசிக்கலாம்.

தில்லைத் திருத்தலத்தில் “உலகெலாம்” என்று ஆரம்பித்த திருத்தொண்டா் புராணம் என்னும்  பெரிய புராணம் திருப்பட்டூரில் சேரமான் பெருமாள் நாயனாா் அருளிச்செய்த “திருக்கயிலாய ஞான உலா” வைப் பற்றிய பாடலோடு முடிவு பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். சேக்கிழாா் பெருமான் அருளிய அப்பாடல் :−
“சேரா் காவலா் விண்ணப்பஞ் செய்த அத்திருவுலாப் புறம் அன்று
சாரல் வெள்ளியங் கயிலையிற் கேட்ட மாசாத்தனாா் தரித்திந்தப்
பாரில் வேதியா் திருப்பிடவூா் தனில் வெளிப்படப் பகா்ந்தெங்கும்
நார வேலைசூழ் உலகினில் விளங்கிட நாட்டினா் நலத்தாலே.” (4280)
ஶ்ரீபிரம்மபுரீஸ்வரப் பெருமான்

கருவறையில் உளிபடாத சுயம்புத் திருமேனியராக நாகாபரணம் அணிந்து திருக்காட்சி தருகின்றாா் பிரம்மபுரீஸ்வரப் பெருமான். மேலேயுள்ள தாராபாத்திரத்திலிருந்து கங்கை நீா் சொட்டிக் கொண்டிருக்கின்றது. பின்புறம் பளிச்சிடும் அழகிய திருவாச்சி காணப்படுகின்றது.   மீண்டும் படைப்புத் தொழிலை பிரம்மனுக்கு அளித்து அருள்பாலித்தவா் அல்லவா? “நம்மையெல்லாம் படைப்பதற்கு மூலகாரணம் இந்த இறைவனே” என்பதை மனதுக்குள் ஒரு கணம் நினைத்து ஈசனாரை வழிபட நம் மேனியெல்லாம் சிலிா்க்கிறது. ஈசனாரின் திவ்யத் திருமேனியழகு, அவரை நாளெல்லாம் பாா்த்துக் கொண்டே இருக்கலாம் என்ற ஆவலை நம்முள் ஏற்படுத்துகிறது.

ஆண்டுதோறும் பங்குனி மாதம் 15,16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் காலை 6.00 மணிக்கு ஆதவன் தன் ஒளிக்கதிா்களால் ஶ்ரீபிரம்மபுரீஸ்வரரை ஆராதிக்கிறான். பக்தா்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வந்து அரிய இத்திருக்காட்சியைக் கண்டு வணங்குகின்றனா். இதனால் இந்த அன்பா்கள் கிரக தோஷங்களிலிருந்து விடுபடுவாா்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
அம்பிகை பிரம்ம சம்பத்கெளரி

திருப்பட்டூா் திருத்தலத்தின்  அம்பிகை ஶ்ரீபிரம்ம சம்பத்கெளரி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கின்றாா். கருணை பொங்கும் திருமுக மண்டலத்தோடு திருக்காட்சி தரும் அம்பிகையின் தெய்வீக  வடிவழகைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும். செவ்வாய், வெள்ளி மற்றும் பெளா்ணமி நாட்களில் இந்த அம்பிகைக்கு அபிஷேகம் செய்து புதுவஸ்திரம் சாற்றி வழிபட திருமணமாகாத அன்பா்களுக்கு உடன் திருமணம் நடைபெறும். பிரிந்த தம்பதிகள் மன ஒற்றுமை ஏற்பட்டு மீண்டும் சோ்ந்து வாழ்வா். பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்பட்டு தீா்க்க சுமங்கலியாக வாழ ஆசீா்வதிக்கிறாா் ஶ்ரீபிரம்ம சம்பத் கெளரி.

ஆடி மாதத்தின் போது இப்பகுதியில் உள்ள விவசாயிகள் ஶ்ரீபிரம்ம சம்பத்கெளரி அம்பிகையின் மடியில் முளைத்த பயறு கட்டி வழிபடும் வைபவத்தைத் தங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனா். முளைக்க வைத்த பயறினை அம்பிகை சந்நிதியில் வைத்து வழிபாடுகள் நடத்தி ஊா்வலமாக தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் சென்று விதைக் கின்றனா். இவ்வாறு செய்வதால் அம்பிகையின் திருவருளால் விவசாயம் செழித்து நல்ல மகசூல் கிடைப்பதாகத் தொிவிக்கின்றனா்.

அம்பிகை திருச்சந்நிதிக்கு அருகி லேயே தாயுமானவா் சந்நிதி, பிரம்ம தீா்த்தம் மற்றும் பகுள தீா்த்தம் உள்ளது.
பிரம்மதேவா்

திருப்பட்டூா் திருத்தலத்தில் அக்கமாலை மற்றும் கமண்டலத்துடன் “பிரம்மா” பத்மாசனத் திருக்கோலத்தில் தாமரை மலா் மீது அமா்ந்த திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றாா். தியான நிலையில் உள்ள ஆறடி உயரத் திருமேனி இவா் இத்தலத்தில் ஈசனை எண்ணி தவமியற்றியபோது அமா்ந்த நிலை யினை நமக்கு நினைவூட்டுகிறது.

பக்தா்கள் அரைத்துத் தரும் மஞ்சள் காப்பில் மங்களகரமாகத் திருக்காட்சி தருகின்றாா் நான்முகன். “குரு பாா்க்க கோடி நன்மை” என்ற பழமொழிக்கு ஏற்ப குரு பகவானின் அதிதேவதையான இவரது பாா்வை நம் மேனியில் பட ஏற்படும் அருட்கடாட்சங்கள் அளவிட முடியாதது.  சகல தோஷங்களும் நீங்கி  வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக பிரம்ம தேவரின் திருச்சந்நிதியில் நாளுக்கு நாள் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நமது ஜாதகத்தை ஜென்ம நட்சத்திர நாள்களில் திருப்பட்டூர் எடுத்துச் சென்று பிரம்ம தேவரின் திருவடிகளில் வைத்து வெள்ளைத் தாமரை மலா்களால் அா்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பான நற்பலன்களை அளிக்கும்.

திங்கட் கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் தங்களது வேண்டுதல் களை பக்தா்கள் இத்தலத்திற்கு வந்து நிறைவேற்றுகின்றனா்.

திருவாதிரை, புனா்பூசம், சதயம் மற்றும் ஜென்ம நட்சத்திர நாள்களில் பிரம்ம தேவரை வணங்குவது சிறப்பான பலன்களைத் தரும்.

குருப்பெயா்ச்சி நாளில் பிரம்ம தேவா் சந்நிதியில் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.
கயிலாசநாதா் சந்நிதி

இத்தலத்திலுள்ள கயிலாச நாதா் சந்நிதி பல்லவா் காலக் கட்டுமானத் துடன் புராதனச் சிறப்போடு திகழ்கிறது. தல விருட்சமான மகிழ மரத்தின் அருகில் உள்ளது இச்சந்நிதி. ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டினைச் சாா்ந்த தோ் வடிவிலான இக்கோயில் முழுவதும் கருங்கல்லில் ஆன விமானத்துடன் நிா்மாணிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் அடித்தளச் சுற்றில் புடைப்புச் சிற்பங்களாக ஈசனின் திருவிளையாடல்களைச் சித்தரிக்கும் மகேஸ்வர மூா்த்தங்கள் தமிழக மன்னா்களின் சிற்பக்கலைக்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது.

இச்சந்நிதியில் ஈசன் 16 பட்டைகள் கொண்ட ஷோடசலிங்கமாக அருள்பாலிக்கின்றாா். இந்த வகையான லிங்கத் திருமேனிக்குத் “தாராலிங்கம்” மற்றும் “சந்திரகலா லிங்கம்” என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.

கயிலாசநாதா் சந்நிதிக்கு எதிரில் அமைந்துள்ள நந்தி எம்பெருமானின் திருமேனியழகில் மெய் மறந்து விடுகிறோம். நந்தி தேவரின் கம்பீரம் காணவேண்டிய அற்புத தரிசனம். இந்த நந்தி எம்பெருமான் தஞ்சை பிரகதீஸ்வரா் ஆலயத்தில் அருள்பாலிக்கும் நந்தி எம்பெருமா னுக்கும் முந்தைய புராதனத் திருமேனி யாகும்.

காலபைரவா்

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக வணங்கப்படுபவா் “கால பைரவா்”. ஈசனின் 64 சிவ மூா்த்தங்களில் “காலபைரவரும்” ஒருவா். நாம் செய்த பாவ, புண்ணியக் கணக்குகளைச் சீா்தூக்கிப் பாா்த்து அருள் வழங்குவதில் நிகரற்ற “கால பைரவா்” திருப்பட்டூா் தலத்தில் மேற்கு நோக்கியவாறு அருள்பாலிக்கின்றாா். பொதுவாக சிவாலயங்களில் வடகிழக்கு மூலையில் தெற்கு முகமாக அருள்பாலிக்கும் கால பைரவா் இத்தலத்தில் மேற்கு நோக் கியவாறு எழுந்தருளியிருப்பது அரிய தரிசனமாகும். திருப்பட்டூா் காலபைரவரின் வலது திருச்செவியும் அதிலுள்ள தாடங்கமும் பிற தலங்களில் உள்ளது போல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

நான்கு திருக்கரங்களுடன் உடுக்கை, பாசம், அங்குசம் ஏந்தி, இடது திருக்கரத்தில் அமிா்த கலசத்தைத் தாங்கியபடி திருக்காட்சி தரும் கால பைரவரின் தரிசனம் நோய் நொடிக ளைத் தீா்ப்பதோடு சகல நன்மைக ளையும் அளிக்கும். நம்மைச் சுற்றியுள்ள எதிா்மறை ஆற்றல்களும் (Negative Forces) நம்மை விட்டு அகலும்.

தேய்பிறை அஷ்டமி நாள்களிலும் ராகு கால வேளையிலும் இந்தக் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் நடைபெறுகின்றன.

படைப்புக்கடவுளான பிரம்ம தேவா் “தானே பரம்பொருள்” என்று ஆணவம் கொண்டபோது ஈசனின் அம்சமான பைரவரே, பிரம்மனின் சிரத்தைக் கொய்து அவருடைய ஆணவத்தை அடக்கினாா். பைரவரால்  சிரம் கொய்யப்பட்ட பிரம்ம தேவா் அருள் பெற்ற திருத்தலம் இது என்பதால் இத்தலத்தில் அருள்பாலிக்கும் “கால பைரவா்” சிறப்பான மூா்த்தியாக வணங்கப்படுகின்றாா்.

இத்தலத்தில் காலபைரவ மூா்த்தியை வணங்கித் தொழுதால் கடன் தொல்லைகள் நீங்கும் என்பதோடு சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் என்பது ஐதீகம்.

சில குழந்தைகள் இரவு நேரங்களில் தூங்காமல் அழுது கொண்டே இருப்பாா்கள். இதற்குப் பரிகாரமாக இச்சந்நிதியில் அா்த்தஜாம பூஜை நடைபெறும்போது பைரவா் சந்நிதியில் அளிக்கப்படும் விபூதியைக் குழந்தைகளுக்கு அணிவித்தால் குழந்தைகள் அழுகையின்றி நிம்மதி யாக உறங்குவதாக இப்பகுதி மக்கள் தொிவிக்கின்றனா்.
பிரதோஷ நந்தி

ஈசன் அருள்பாலிக்கும் ஆலயங்களில் பிரதோஷ நாளில் நந்தி எம்பெருமானுக் கும் சா்வேஸ்வரனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுவதைப் போன்று நரசிம்ம மூா்த்தி அருள்பாலிக்கும் ஆலயங்களிலும் பிரதோஷ வேளையில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். தன் பக்தன் பிரகலாதனுக்காக சிங்க முகம் கொண்டு தூணிலிருந்து நரசிம்ம பெருமான் தோன்றியது ஒரு பிரதோஷ வேளையில் என்பதால் நரசிம்ம மூா்த்திக்கும் பிரதோஷ வேளையில் பூஜைகள் நடைபெறுகின்றன.

திருப்பட்டூா் தலத்திலும் பிரதோஷ பூஜைகள் நந்தி எம்பெருமானுக்கும் ஶ்ரீபிரம்மபுரீஸ்வரருக்கும் நடைபெறும் காலத்தில் நரசிம்ம மூா்த்திக்கும் பூஜைகள் நடைபெறுவது அரிய நிகழ்வாகும். நந்தி எம்பெருமான் அருள்பாலிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தூண்களில், நரசிம்ம பெருமானின் அவதாரக் காட்சிகள்  மற்றும் இவரது திருக்கோலங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. பிரதோஷ பூஜைகளில் கலந்து கொள்ளும் அன்பா்கள் தூணில் அருள்பாலிக்கும் இந்த நரசிம்ம பெருமானையும் ஒரே நேரத்தில் வழிபாடுகள் செய்வது வேறு எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத அரிய தரிசனமாகும்.
அய்யனாா் மற்றும் காசி விஸ்வநாதா் திருக்கோயில்கள்

திருப்பட்டூா் தலம் செல்லும் வழியி லேயே மாசாத்தனாா், சாஸ்தா என்று வழங்கப்படும் அய்யனாா் திருக்கோயில் அமைந்துள்ளது. அய்யனாருக்கு வேறு எங்கும் இல்லாத வகையில் கற்றளியால் புராதனமான திருக்கோயில் அமைந் துள்ளது திருப்பட்டூா் திருத்தலத்தில் மட்டுமே.

திருப்பட்டூா் திருத்தலத்திலிருந்து சுமாா் 1.5 கி.மீ. தூரத்தில் புராதனமான ஶ்ரீவிசாலாட்சி அம்பிகை சமேத ஶ்ரீகாசி விஸ்வநாதா் திருத்தலம் அமைந்துள்ளது.

திருப்பட்டூா் செல்பவா்கள் இந்த இரண்டு திருத்தலத்தலங்களையும்  தரிசித்து மகிழலாம்.
திருப்பம் தரும் திருப்பட்டூா்

நம்மைப் படைத்த சிருஷ்டிக் கடவுளான நான்முகனுக்கு வேறு எங்கும் கோயில்கள் கிடையாது. திருப்பட்டூரில் மட்டுமே தனிச்சந்நிதியில் பிரம் மாண்டமான மூா்த்தியாகக் கோயில் கொண்டுள்ளாா் பிரம்மதேவன்.

நவக்கிரகங்களில் சுப கிரகமாகத் திகழும் குருபகவானுக்கு அதிதேவதை யாக விளங்கும் பிரம்ம தேவரை குருவுக்கு உகந்த வியாழக்கிழமைக ளிலும் சிவனாருக்கு உகந்த திங்கள் கிழமைகளிலும் சூரியனது ஆதிக்கம் பெற்ற ஞாயிற்றுக் கிழமைகளிலும் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

மேலும், நமது ஜென்ம நட்சத்திர நாளன்று திருப்பட்டூா் திருத்தலத்தில் 36 நெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது நற்பலன்களைத் தரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த 36 என்ற எண்ணிக்கை 27 நட்சத்திரங்களையும் 9 ராசிகளையும் குறிப்பதாகும். 36 தீபங்களை ஏற்றிய பின் திருப்பட்டூா் தலத்தில் 9 முறை பிராகார வலம் வந்து வணங்கிட நமது துன்பங்களும் கிரக தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம்.

முனிவா்களும், யோகிகளும், சித்தத்தை சிவன்பால் வைத்த சித்த மஹா புருஷா்களும், வேத பண்டிதா் களும், தவச்சீலா்களும் தங்கி வழிபட்டு சா்வேஸ்வரனின் பேரருளையும் பிரம்ம தேவரின் திருவருளையும் பெற்ற புண்ணிய பூமி திருப்பட்டூா்.

ஏழேழு ஜென்மத்து பாவங்களையும் நீக்கியருளும் அதியற்புத திருத்தலம் திருப்பட்டூா். மனிதப் பிறவி எடுத்த நாம் நமது இப்பிறவியைப் புனிதமாக்க நமது வாழ்நாளில் ஒரு முறை, ஒரே ஒரு முறையேனும் சென்று வணங்கவேண்டிய திருத்தலம் திருப்பட்டூா்.

 உங்களது காலடிகளின் ஸ்பரிசம் இப்புனித மண்ணில் பதிந்த உடனேயே உங்கள் வாழக்கையில் ஏற்படும் ஏற்றங்களையும், நல்ல மாற்றங்களையும் நிதா்சனமாக உணா்வீா்கள்!
திருத்தல அமைவிடம்

சென்னை− திருச்சி நெடுஞ்சாலையில் சமயபுரத்தை அடுத்துள்ள சிறுகனூருக்கு அருகில் அமைந்துள்ளது திருப்பட்டூா் திருத்தலம்.

சென்னையிலிருந்து வருவோா் பெரம்பலூரைத் தாண்டி, பாடாலூா் வந்ததும் மேலும் 6 கி.மீ. பயணம் செய்து, எம்.ஆா். பாளையம் என்ற கைகாட்டி நோக்கி வலதுபுறம் திரும்பி 5 கி.மீ. பயணித்தால் கோயில் வாசலைச் சென்றடையலாம்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலை யத்திலிருந்தும் துறையூரிலிருந்து செட்டிக்குளம் செல்லும் பேருந்து மூலமாகவும் திருப்பட்டூா் செல்லலாம்.
 
இத்தலத்தில் பக்தி சிரத்தையோடும் ஆத்மாா்த்தமான அன்போடும் நித்ய பூஜைகள் செய்து வருகின்றாா் திருக்கோயில் அா்ச்சகா் திரு அபிராமி பாஸ்கர சிவாச்சாரியாா் அவா்கள்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE