பழைய சீவரம் லஷ்மி நரஸிம்ம பெருமாள் திருவடிகளே சரணம்.....!
இமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ஷே்த்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லஷ்மிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது.
"வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லஷ்மி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும்,'' என்றது.
அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில், இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லஷ்மிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார்.
விஷ்ணு லஷ்மியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் "ஸ்ரீபுரம்' எனப்பட்ட இத்தலம் "சீவரம்' என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம் என பிற்காலத்தில் மருவியது. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது.