சிவகிரி ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் சிறப்புகள்!

By சரவணன்

தோஷங்கள் நீக்கி, நினைத்த காரியங்களை வெற்றியடையச் செய்யும் அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், தென்காசி மாவட்டம் சிவகிரியில் இயற்கை எழில் சூழ்ந்த சக்தி மலையின் மீது அமைந்துள்ளது. இக்கோயிலின் சில முக்கிய அற்புதச் சிறப்புகள்:

நவக்கிரக முருகன் (கிரக தோஷ நிவர்த்தி):

இத்தலத்தின் மிக முக்கியச் சிறப்பு, மூலவர் பாலசுப்பிரமணியசுவாமி தமது திருவடியின் கீழ் நவக்கிரகங்களின் ராசிச் சக்கரத்தகடு அமையப்பெற்று அருள்பாலிப்பதாகும். ஜாதக ரீதியிலான நவக்கிரக தோஷங்கள் மற்றும் கிரகப் பாதிப்புகள் உள்ளவர்கள் இவரை வழிபட்டுச் சென்றால் தோஷங்கள் அகலும் என்பது நம்பிக்கை.

சடாமுடி பாலசுப்பிரமணியர்:

இறைவன் சிறு குழந்தையாகவும், தலையில் சடாமுடியுடன் கூடிய அரிய கோலத்திலும் காட்சியளிக்கிறார். திருச்செந்தூர் தலத்தைப் போலவே இங்கும் வழிபாட்டு முறைகளும் பூஜைகளும் பின்பற்றப்படுகின்றன.

சோமாஸ்கந்த அமைப்பு:

சுற்றிலும் இயற்கை வளம் கொஞ்சும் சக்தி மலையில் அமைந்துள்ள இக்கோயிலில், மூலவர் முருகப்பெருமானின் வலப்புறம் சுந்தரேஸ்வரரும், இடப்புறம் மீனாட்சி அம்மனும் வீற்றிருந்து 'சோமாஸ்கந்த' வடிவில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

அகத்தியருக்குக் காட்சி தந்த தலம்:

சூரசம்ஹாரத்திற்குப் பிறகு திருப்பரங்குன்றம் செல்லும் வழியில், அகத்திய முனிவரின் தவத்திற்கு இரங்கி முருகப்பெருமான் காட்சி தந்த திருத்தலம் இதுவாகும். அகத்தியருக்குக் காட்சி தந்த 'பாத மண்டபம்' கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.

மும்மூர்த்தி அலங்காரமும் சிறப்புகளும்:

பங்குனி உத்திரப் பெருவிழாவில் முருகப்பெருமான் சிவப்புச் சாத்தி (சிவன் அம்சம்), வெள்ளை சாத்தி (பிரம்மன் அம்சம்), பச்சை சாத்தி (விஷ்ணு அம்சம்) என மும்மூர்த்திகளின் அம்சமாக காட்சியளிக்கிறார். மேலும், கந்தசஷ்டி திருவிழாவின் 11-ஆம் நாளில் சுவாமிக்கு முடிசூட்டு விழாவும், செங்கோல் ஏந்தி 'பட்டினப் பிரவேசம்' நிகழ்வும் மிகக் கோலாகலமாக நடைபெறுகிறது.

வரும் ஜென்ம நட்சத்திரம் மற்றும் விசேஷ நாட்களில் சிவகிரி பாலசுப்பிரமணியசுவாமியை தரிசித்து நவக்கிரக தோஷங்கள் நீங்கி அனைத்து நலன்களையும் பெறுவோம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE