விநாயகர் சதுர்த்தி 2026 தேதி மற்றும் திதி தொடக்கம் எப்போது.
செப்டம்பர் 14 திங்கட்கிழமை அன்று ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திருநாள் கோலாகலமாக வருகிறது. அன்றைய தினம் காலை 07:06 மணிக்கு தொடங்கும் சதுர்த்தி திதியானது மறுநாள் செப்டம்பர் 15 காலை 07:44 மணி வரை நீடிக்கிறது.
விநாயகர் சதுர்த்தி நேரம் மற்றும் விசேஷ வழிபாட்டிற்கு உகந்த காலம் எது?
கணபதி அவதரித்ததாக கருதப்படும் மத்தியான வேளையே வீட்டில் வழிபட மிகச் சிறந்த நேரமாகும். குறிப்பாக காலை 11:02 மணி முதல் மதியம் 01:31 மணி வரையிலான நேரத்தில் கணேச பெருமானை முறைப்படி பீடத்தில் எழுந்தருளச் செய்து மனதார வணங்குவது அளவில்லாத நன்மைகளைத் தரும்.
காலையில் எழுந்து நீராடி மனத்தூய்மையுடன் பூஜையறையை சுத்தப்படுத்த வேண்டும். மரப்பலகையில் கோலமிட்டு அதன்மேல் தலைவாழை இலையை பரப்ப வேண்டும். இலையில் பச்சரிசியை சமமாக இட்டு நடுவில் எளிய களிமண் பிள்ளையாரை வைத்து சந்தனம் மற்றும் குங்குமத்தால் திலகமிட வேண்டும்.
உங்கள் வீட்டின் வழக்கப்படி 1, 3, 5 நாட்கள் அல்லது செப்டம்பர் 25 அனந்த சதுர்தசி அன்று சிலையைக் கரைக்கலாம். ரசாயனம் பூசாத சுத்தமான களிமண் சிலைகளை வாங்கி, வீட்டிலேயே ஒரு வாளி தண்ணீரில் கரைத்து அந்தப் புனித நீரை வீட்டுத் தோட்டத்து செடிகளுக்கு ஊற்றுவது இயற்கையையும் பாதுகாக்கும் ஒரு அருமையான நடைமுறையாகும்.
சுத்தமான மண் வினாயகர் சிலை என்றால் நதி, குளம், சமுத்திர நீர் நிலைகளில் கரைக்கலாம்.
சதுர்த்தி இரவில் சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுவது ஏன்?
புராண மரபுகளின்படி சதுர்த்தி நாளில் வானில் நிலவை நேருக்கு நேர் பார்ப்பது தேவையில்லாத வீண் பழிகளைத் தேடித்தரும் என்பது ஒரு ஐதீகம். எனவே அன்றைய தினம் இரவு நேரத்தில் நிலவை நோக்குவதைத் தவிர்ப்பது ஆன்மீக ரீதியாக மன அமைதியைக் காக்கும் சிறந்த வழியாகக் கருதப்படுகிறது.