கோயில் சீர்மை என வழங்கப்பட்டு பின்னர் கோயில் சீமை என ஆகியிருக்கலாம். சீர்மை என்றால் ஒழுங்கு, அழகு, நேர்த்தி, என்று பொருள்படும்.கோயில் என்பது இறைவன் குடியிருக்கும் இடம்.
அழகு நேர்த்தி சிறப்பான வழிபாடுகள் கொண்ட கோயில் எனும் பொருளில் 'கோயில் சீர்மை' என்ற சொற்பதம் இவ்வூருக்கு வந்திருக்கலாம்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வி.கைகாட்டி என்னுமிடத்தில் இருந்து 10 கிமி தூரத்தில் உள்ள விக்கிரமங்கலம் வந்து அதன் தெற்கில் 5 கிமி தூரம் சென்றால் கோயில் சீமை அடையலாம். மருதையாறு ஊரின் மேற்கில் ஓடுகிறது.
ஊரின் மத்தியில் ஒரு பெரிய குளத்தின் கரையில் அன்று சிவாலயம் ஒன்று இருந்து அழிந்து விட்டிருக்கிறது. தற்போது அதே இடத்தில இறைவனுக்கு ஒரு கருவறையும் அம்பிகைக்கு ஒரு கருவறையும் எழும்பி வருகிறது. ஓராண்டுக்கு மேலாக பணிகள் நடந்து வருகின்றன, இன்னும் முடிவடைந்தபாடில்லை.
அதனால் அதிலிருந்த லிங்கத் திருமேனி அருகாமையில் உள்ள விநாயகர் கோயில் பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றார். இந்த கட்டிடத்தினை நடராஜர் கோயில் என அழைக்கின்றனர். ஏன் என தெரியவில்லை. இக்கட்டிடத்தின் மேல் ஒரு நடராஜர் சுதை சிற்பம் ஒன்று வடிக்கப்பட்டுள்ளது.
இறைவன் பெயர் சோழீஸ்வரர்; தற்போது அம்பிகை இல்லை.
மாதாமாதம் திருமுறை முற்றோதலும் இறைவன் முன்னிலையில் நடைபெறுகிறது.
விரைவில் திருப்பணிகள் முடிந்து இறைவன் இறைவி இருவரும் சர்வலங்கார பூஷணராக கருவறையில் அமர்ந்து உலகை ரக்ஷிக்கும் காட்சியை நாம் காணவேண்டும்.