சிவலோகநாதர் ஆலயம், - திருமால்மாகுடி

By செய்திப்பிரிவு

'சிவலோகநாதனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்..'

என்றொரு தமிழ்க் கீர்த்தனை உண்டு. தமிழ் சாஹித்யகர்த்தா ஸ்ரீ கோபாலகிருஷ்ணபாரதி அவர்களால் இயற்றப்பட்ட மாயாமாளவகௌளை ராகத்தில் அமைந்த இந்த பாடல் வெகு பிரபலமானது. உண்மையாகவே சிவலோக நாதரைக் கண்டு தரிசிக்க வேண்டும் எனில், ஆச்சாள்புரம், திருப்புன்கூர் முதலான தலங்களுக்கு செல்ல வேண்டும்.

தவிர, வெகு விசேஷமான வேறு ஒரு சிவலோகநாதரும் இருக்கிறார். அவரைத் தரிசிக்க வேண்டும் எனில் திருக்கடையூர் அருகில் உள்ள திருமால்மாகுடி என்கிற மாமாகுடி
தலத்திற்குச் செல்ல வேண்டும்.ஆயுள்க்ஷேம தரிசனத்திற்காக திருக்கடையூர்
செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரைத் தரிசிக்க கூடுதல் பலன் கிடைத்திடும்.

சுராசுரர்கள் அயிர்தம் பெறவேண்டி பாற்கடலைக் கடைந்தனர் என்று கண்டோம் இல்லையா...?! அப்பொழுது அமிர்தத்திற்கு இணையான பல புனித வஸ்துக்களும் கிடைத்தன என்பது புராணத் தகவல். காமதேனு, கற்பகவிருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் முதலான பல உயர்வான விஷயங்களுடன் தன்வந்திரி பகவானும் பாற்கடலிலிருந்துதான் தோன்றினார். அவர் மட்டுமா..? செல்வத்திற்கு அதிபதியான திருமகளும் அங்கிருந்தே தோன்றினாள்.

இந்நிகழ்வுகள் நடந்த தலமாக அறியப்படுவது காலசம்ஹாரத் தலமாகிய திருக்கடவூர் என்பது புராணத்தகவல்.

பாற்கடலிலிருந்து அவதானித்த சகலரும் ஆங்காங்கு சிவபூஜை செய்து உய்வுற்றனர். அத்தலங்கள் திருக்கடவூரைச் சுற்றிலும் அமைந்துள்ளன. அவற்றுள் அலைமகளான மகாலக்ஷ்மி நிலைபெற்று பூஜித்த தலம்தான் இந்த திருமால்குடி.

அப்படி சிவபூஜை செய்ததன் பலனாக திருமாலைத் தன்னுடைய பதியாக ஏற்கும் பேற்றினைத் திருமகள் பெற்று மகிழ்ந்த புண்ணிய தலமிது. இதனால் இத்தலமானது திரு +மால்+ மா +குடி என்று வழங்கப்பெற்றது. மால் என்பது திருமாலையும், அதன்பின் வருகிற 'மா'- ஆனது லட்சுமியையும் குறிக்கிறது. இவ்விருவரும் நிலைத்திட்ட ஊர் குடி எனப்பட்டது.

பின்னர் காலப்போக்கில் மருவி மாமாகுடி என்று வழங்கப்படுகிறது. திருமகளால் பூஜிக்கப்பட்ட பெருமான் இத்தலத்து மூலவரான சிவலோகநாதர் என்பது கூடுதல் விசேஷம்.
சகலதேவராதிகளும் தங்கியிருந்தபடியால் இத்தலமே ஒரு சிவலோகம் போலக் காட்சியளித்திருக்கிறது.‌ அதனாலேயே இத்தலத்து ஈசருக்கு சிவலோகநாதர் என்பது பெயர். அமைதியான சூழலில் கிழக்கு நோக்கிய ஆலயத்தில் எழுந்தருளியிருக்கிறார் இந்த சிவலோகநாதர். பிரதோஷ நேரமான சந்தியா காலத்தில் இவருடைய சந்நிதியில் விளக்கேற்றி வணங்கிட இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது நிலைத்திருக்கும் என்பது இங்கு நிலவிடும் ஐதீகம்.

இவருக்கு அருகிலேயே மஹாமண்டபத்தின் இடது பக்கத்தில் அம்பிகை சிவகாமசுந்தரியின் சந்நிதி. சிறிய திருமேனியினள். ஆயினும் மிகுந்த வரப்பிரசாதி. தலத்திற்கு உரிமை பூண்டவர்களான அம்மையப்பரைத் தரிசித்த நிறைவுடன் அருகிலேயே உள்ள ஆடல்வல்ல நாயகனின் சந்நிதியையும் தரிசித்து விடலாம். மிகுந்த கலையழகுடன் நேர்த்தியாக மிளிரும் உலோகத்திருமேனியினர். ஆடல்நாயகனின் சடைக்கற்றையில் உள்ள கங்கை மற்றும் பிறைச்சந்திரன் நேர்த்தியாக வார்க்கப்பட்டிருப்பது அரிய தொன்று.

தொன்மையான சோழர்காலத்திய கட்டுமான அமைப்பு. ஆயினும் கால ஓட்டத்தின் வேகத்தில் சிக்குண்டு அழிந்திருக்கிறது. பின்வந்தவர்கள் சிற்சில மாற்றங்களுடன் மையக்கோயிலையும் சுற்றாலையையும் நேர்த்தியாக புதுப்பித்துள்ளனர். கிழக்கு பார்த்த அழகியதோர் ஆலயம்.

ராஜகோபுரம் இல்லை. நந்தியெம்பெருமான் சிறு மண்டபமேடையில் அழகுற அமைக்கப்பட்டுள்ளார். அவரைத் தரிசிக்கும்போதே மூலஸ்தானத்து சிவலோகநாதரையும் எளிதில் தரிசித்து விடலாம். திருப்புன்கூர் போல நந்தி விலகியபின் தரிசித்திட வேண்டிய அவசியம் இல்லை என்பது மகிழ்ச்சி.

பிராகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், துர்கை, பைரவர், சூரிய சந்திரர்கள் முதலான திருமேனிகள் அவரவர்களுக்கு உரிய ஸ்தானங்களில் சிவாலயவிதிப்படி நிலைப்படுத்தப் பட்டுள்ளனர். பொதுவாக பெரும்பாலான சிவாலயங்களில் வடமேற்கில் கஜலக்ஷ்மி நிலைப்படுத்தப் படுவது மரபு. ஆனால் இத்தலத்தில் கஜலக்ஷ்மியாக அல்லாது இருகரங்களிலும் தாமரை ஏந்தியவளாய் ஆதிலக்ஷ்மியாக காட்சியளிக்கிறாள்.

குடி என்று முடிவுறும் பாடல்களில் அப்பர் சுவாமிகளின் (6-71-3) தேவாரத்தில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலம். திருமகள் உருவாக்கிய தீர்த்தமானது லட்சுமி தீர்த்தம் என்கிற பெயரில் ஆலயத்திற்கு அருகிலேயே இருந்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. தல விருட்சம் வில்வம்.

பொதுவாக திருமகளால் பூசிக்கப் பெற்ற சிவாலயங்களில் வழிபடுபவர்களுக்கு வறுமை நீங்கி வாழ்வில் வளங்கள் சேர்ந்திடும் என்பது கூற்று. அதிலும் திருமகள் அவதானித்த இந்த தலம் ஏனைய தலங்களை விட பலமடங்கு கூடுதல் சிறப்பு உடையது என்பது நிஜம். இவ்வாலயத்தில் செய்யும் வழிபாடு நம் பலதலைமுறைகளுக்கு லக்ஷ்மி கடாக்ஷத்தினைச் சேர்த்து வைத்திடும் என்கிறது ஆலய புராணம்.

இவ்வூர் அன்பர்களின் பெருமுயற்சியில் எதிர்வரும்
பராபவ சித்திரை 25 ம் நாள், 08.05.2026 - வெள்ளி (காலை 8.15 - 9.15) அன்று இவ்வாலயத்தில் மஹாகும்பிஷேக வைபவமானது வெகுவிமரிசையாக நிகழ்த்தப்பெற இருக்கின்றது.
இயன்ற அளவு நம்முடைய பங்களிப்பினைச் செலுத்தி சிவலோகநாதரின் அனுக்ரஹத்தினைப் பெற்றிட முயற்சிப்போமே..!

~ Sujatha Mali.
குருவே சரணம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE