கச்சிபெருமாள் சிவன்கோயில், உடையார்பாளையம்

By தேஜஸ்

இக்கோயில் உடையார்பாளையம் ஜமீன்தார்களால் சில நூறு ஆண்டுகளுக்குமுன் கட்டப்பட்டது.
இவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும். காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்களுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக்குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் "காலாட்கள் தோழ உடையார்" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் இவர்களால் உருவாக்கப்பட்ட கிராமத்துக்கு கச்சிபெருமாள் என பெயரிட்டு அழைத்தனர்.

ஜெயம்கொண்டசோழபுரம், உடையார்பாளையம் இடையில் 10 கிமி தூரத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது கிராமம், ஒரு பெரிய ஏரிக்கரையில் கரையில் மாரியம்மன் மதுரைவீரன் கோயில்களும், சற்று தள்ளி ஒரு சிவாலயமும் அமைந்துள்ளது.

கிழக்கு நோக்கிய திருக்கோயில். முற்றிலும் இப்பகுதியில் கிடைக்கும் செம்பாறாங்கல் கொண்டு அழகுற கட்டப்பட்டுள்ளது. கோஷ்டங்கள் அதன் பக்க தூண்கள் கொடுங்கைகள் என அனைத்துமே இந்த வகை கற்களை செதுக்கி கட்டப்பட்டு இருப்பது அழகு. விமானம் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கருவறை இடைநாழி முகப்பு மண்டபம் என அனைத்துமே செம்பாறாங்கல் தான்.
பல ஆண்டு காலமாக கவனிப்பாரற்ற நிலையில் திருக்கோயில் பழுதடைந்து உள்ளது.

மண்டபங்களின் மேல் செடிகள் மரங்களாகி நிற்கின்றன. சுற்று மதில் சுவர் பல இடங்களில் காணாமல் போயுள்ளது. சண்டேசர் சன்னதியில் சண்டேசர் முகம் தெரியாத அளவுக்கு பிசுக்கு பிடித்து உள்ளார். சிற்றாலயங்களில் தென்மேற்கில் அழகிய விநாயகர் ஒருவர் எண்ணையில்லாமல் பூசணம் பூத்து கிடக்கிறார். முருகன் தன் இரு துணைவியாருடன் கோயில் கொண்டுள்ளார்.
கருவறை தெற்கு சுவரில் ஒரு கல்வெட்டு ஒன்று திருப்பணி செய்த காலத்தை சொல்கிறது.அதில் ஸ்ரீ கச்சி நல்ல நயினாக காலாட்கள் தோழர் உடையார் என்பவர் செய்த திருப்பணி என உள்ளது. 18 ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாக இருக்கலாம்.

இறைவன் சற்று பெரிய அளவுடைய பாணன் கொண்ட லிங்கமூர்த்தி. அம்பிகை சற்று நடுத்தர அளவுடைய மூர்த்தியாக உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் சிறிய மேடையில் ஒரு நந்தி இறைவனை நோக்கியபடி உள்ளது.ஒரு பலிபீடமும் அதன் பின்னால் உள்ளது.

அதே போல் அம்பிகைக்கு நேர் எதிரில் சிறிய சன்னல் துவாரம் வழி நோக்கியபடி ஒரு நந்தி வெயிலில் காய்ந்து கொண்டிருப்பதை காண மனம் வருந்துகிறது. என்றாவது ஒரு நாள் அம்பிகை சர்வலங்கார பூஷணியாக அழகிய திருக்கோயில் ஒன்றில் தான் மணாளனுடன் காட்சி தருவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க
ஊன் உருக உயிர் உருக தேன் தரும் தடாகமே
வழி வருக வழி நெடுக ஒளி நிறைக வாழ்விலே.....

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE