சொர்ண பைரவர் வழிபாடு பலன்கள்!

By சரவணன்

பைரவ மூர்த்தியை சிவபெருமானின் அம்சம் என்றும் பைரவ மூர்த்தம் சிவ வடிவங்களில் ஒன்று என்றும் ஞானநூல்கள் போற்றுகின்றன.

அனைத்துச் சிவாலயங்களிலும் பைரவருக்குத் தனி சிலைகள் உள்ளன. இவரது வாகனம். நாய். பைரவ வழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. வட நாட்டில் பல இடங்களில் பைரவருக்கு தனிக் கோயில்கள் உள்ளன.

பிறந்த குழந்தையின் அரைஞாண் கயிற்றில், பைரவக் காப்பாக நாய்க் காசு கட்டும் வழக்கம் உள்ளது. இது குழந்தைகளை பயம், தோஷம் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றும் என்பது நம்பிக்கை.
காசியில் இவர் காவல் தெய்வமாக- கால பைரவராகத் தனிக் கோயிலில் வீற்றிருக்கிறார். அதனால் காசியில் எவருக்கும் யம பயம் கிடையாது. காசி யாத்திரை செல்பவர்கள் கால பைரவரை தரிசித்தால்தான் யாத்திரை பூர்த்தியாகும். அங்கு வழங்கப்படும் காசிக் கயிறைக் கட்டிக்கொண்டால் பாவங்களும் யம பயமும் நீங்கும் என்பது ஐதீகம்.

ஜம்முவிலுள்ள வைஷ்ணவிதேவியை தரிசித்தபின், அங்குள்ள பைரவரையும் தரிசித்தால்தான் வைஷ்ணவிதேவி தரிசனம் பூர்த்தியாகும்.

பைரவ வடிவங்களில் விசேஷமானது சொர்ண பைரவர் வடிவம். இவர் சொர்ண பீடத்தில் அமர்ந்துள்ளார். இடக் கையில் சூலம் ஏந்தியும், மடியில் சொர்ண பைரவியை அமர்த்தி, அவளை அணைத்தவாறும் வலக் கையில் தங்கக் குடமேந்தியும் காட்சி தருவார். இவரை வழிபட்டால், வீட்டில் பொன் பொருள் பெருகும் என்பது ஐதிகம்.

பைரவரை தேய்பிறை அஷ்டமியிலும், சதுர்த்தி திதிகளிலும், ஞாயிறு மற்றும் செவ்வாய்க் கிழமைகளிலும் வணங்குவது மிகச் சிறந்தது.

இவரைச் சிவப்பு மலர்களால் அர்ச்சிக்க வேண்டும். சிவப்பு ஆடை சாத்தி, சிவப்புப் பழங்களை நிவேதனம் செய்யலாம்.

திருமணம் நடைபெற: ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில், பைரவருக்கு ருத்திராட்சம், விபூதி அபிஷேகம் செய்து, வடை மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்யலாம்.
சந்தான பாக்கியம் பெற: 6 தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிவப்பு அரளி மாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்யலாம்.

வறுமை நீங்க: வெள்ளிக் கிழமை மாலையில் வில்வ இலை, வாசனை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

இழந்த பொருள் மற்றும் சொத்துகளைத் திரும்பப் பெற: பைரவர் திருமேனியின் முன்னால் மிளகைச் சிறு துணி மூட்டையாகக் கட்டி வைத்து, அகல் விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபடலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE