நளமன்னன் திருநள்ளாறு தலத்திற்குச் செல்வதற்கு முன்பாக வழிபட்ட தலம் புகலூர்தான். அவருக்கு சனியின் வாதனை முடிவுறுகிற சமயம் அது..! திருநள்ளாற்றுப்பதியில் பூரணமாக விமோசனம் கிடைத்திடும் என்பதைப் புகலூர்த் தலத்திலேயே தெய்வக்குறிப்பாக உணர்த்தியிருக்கிறார் சனைச்சர பகவான்.
இதனால் இத்தலத்தில் அருளும் சனிபகவானுக்கு 'அனுக்கிரஹ_சனைச்சரர்' என்கிற திருநாமம் வழங்கப்பெறுகிறது. இங்கு சனைச்சர பகவானுடன் அவரை வழிபட்ட நளராஜனின் கற்றிருமேனியும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது .
இன்றளவும் சனி வாதனைகளிலிருந்து விடுபட வேண்டும் என்கிற பிரார்த்தனைக்காக திருநள்ளாறு செல்பவர்கள் அதற்கும் முன்பாக திருப்புகலூர் அனுக்கிரஹ சனிபகவானை வணங்கி தீபமேற்றி வழிபட்டுவிட்டு செல்ல பலன்கள் அனுகூலமாகும் என்பது ஐதீகம்.
இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு அருள் செய்யும்படி சனைச்சரபகவானிடம் நளமகாராஜாவே சிபாரிசு செய்திடுவதாக தொன்றுதொட்ட நம்பிக்கை நிலவுகிறது.
இதற்கு சாட்சி சொல்வது போல், இவ்வாலயத்தின் சுற்றாலையில் சிறியதொரு தனித்த சந்நிதியில் சனைச்சரரும், அருகில் நளராஜனும் காட்சிதருவது குறிப்பிடத்தக்கது.