எந்த தெய்வத்தை எப்படி கும்பிடுவது?

By சரவணன்

எல்லா தினங்களுமே தெய்வத்தை வழிபடும் நாட்கள்தான். எளியவனான இறைவனை எப்படி வணங்கினாலும் பலன் கிடைக்கும்தான். ஆனால் ஒவ்வொரு பலனைப் பெறவும், கடவுளின் வெவ்வேறு வடிவங்களை கும்பிடுவதும், குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட தெய்வத்தை ஆராதிப்பதும் கூடுதல் பலன் கிட்ட வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் வகுத்த வழிமுறைகள்.

கோயில்களில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் உரிய ஆகம நடைமுறைகளின்படி ஆராதனைகளை, அர்ச்சனைகளை, நைவேத்யங்களை மரபாகச் செய்வார்கள். நாம் சென்று வேண்டுதலைச் சொல்லி பிரார்த்தித்துவிட்டு வந்தால் மட்டும் போதும்.

ஆனால், அதே தெய்வங்களை வீட்டில் எளிமையாக பூஜிப்பது எப்படி? எந்த சுவாமியைக் கும்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்? நவகிரக பாதிப்புகளில் இருந்து விடுபட எப்படி வணங்குவது? கோயிலுக்குச் செல்லும்போது அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன? வீட்டிலே வழிபடும்போது எதையெல்லாம் அவசியம் செய்ய வேண்டும்?

எல்லாவற்றுக்குமான எளிய வழிகாட்டிதான் இந்த புத்தகம், படியுங்கள். மனம் ஒன்றி தெய்வங்களை பூஜியுங்கள். மங்களங்களும் மகிழ்வும் நிறைந்திருக்க ஆண்டவன் ஆசி வழங்குவான்.
கோயிலுக்குச் செல்ல ஏற்ற நாள் எது?

கோயிலுக்கு தினமும் போய்வரலாம்னாலும் அது எல்லோராலும் முடியறதில்லை. அதனால செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள்ல இயன்ற தினங்கள்ல செல்லலாம். பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, சதுர்த்தி, கிருத்திகை, மாதப் பிறப்பு, வருடப்பிறப்பு, சூரிய கிரகணம், சந்திர கிரகணம், மாத சிவராத்திரி எல்லாமே சுவாமி தரிசனம் செய்யவும், விசேஷமா வழிபடவும் உகந்த நாட்கள்தான். இவைதவிர குடும்பத்தினர் பிறந்தநாள், திருமணநாள், பண்டிகை தினங்கள்லயும் செல்லலாம். ஆனா, ஆடம்பரத்துக்காகவும், அவசியத்துக்காகவும் கோயிலுக்குப் போறதைவிட, ஆத்மார்த்தமா ஒரே ஒருநாள் சென்று வணங்கினாலும் போதும், பகவான நிச்சயம் அருள்புரிவார்.

ஆலயத்துக்குச் செல்லும்போது வரவரால் இயன்ற பூ, பழம், தேங்காய், அபிஷேகத்துக்கு உரியவை, தீபத்துக்கு உரிய நெய் முதலானவைனு இயன்ற ஆராதனைப் பொருளைக் கொண்டுபோறது அவசியம். நிஜமாகவே எதுவும் எடுத்துப்போக இயலாத சூழல்ல நீங்க இருந்தா, கவலைப்படாதீங்க. இறைவனை வணங்ம்போது உங்க விழிகள்ல இருந்து நிச்சயம் நீர் சுரக்கும். அதுவே ஆண்டனுக்கு மிகவும் ப்ரியமானது.

ஆலய தரிசனம் செய்வது எப்படி?

கோயிலுக்குப் போகும்போது தூரத்துல இருந்தே கோபுர தரிசனம் செய்யறது அவசியம். மனதாரவோ, இரு கைளையும் தலைக்கு மேலாக உயர்த்தியோ வணங்கறது சிறப்பானது. ஆகமங்கள், கோபுரம்தான் ஸ்தூல லிங்க வடிவம்னு சொல்லுது. கோபுரம் இல்லைன்னா, விமானம் தெரிஞ்சாலும் வணங்கலாம்.

ஆலயத்துக்குள்ளே நுழையறதுக்கு முன்னால திருக்குளத்துலயோ அல்லது பிற நீர் நிலைகள், குழாய்னு என்ன வசதி இருக்கோ அதுல கால்களை அலம்பிவிட்டுச் செல்வது நல்லது. திருக்குளமாக இருநதால் காலைநனைக்கிறதுக்கு முன்னால மனதார கும்பிட்டுக்குங்க. சிறிது தீர்த்தத்தை தெளிச்சுக்கிறது அவரவர் இஷ்டம். சில பரிகாரக் கோயில்கள்ல தீர்த்தத்துல நீராட வேண்டிய விதிமுறை இருக்கும். செல்லும் கோயிலுக்கு உள்ள நடைமுறையை அவசியம் பின்பற்றுங்கள்.
கோபுர வாசலைத் தாண்டினதும், கொடிமரம் எனப்படும் துவஜஸ்தம்பம், பலி பீடம் வாகனம் (இது நந்தி மண்டபம் அல்லது கருடன் சன்னதியா இருக்கலாம். அம்மன் கோயில்னா, சிம்ம வாகனம். முருகன் கோயில்ல மயில் இப்படி...) இருக்கும். பலிபீடத்துக்கிட்டே தலை தாழ்த்தி அகங்காரம், பேராசை, தீய எண்ணங்கள் முதலான கெட்ட குணங்களையெல்லாம் பலியிட்டுட்டு மனதை தூய்மை செய்துகிட்டு செய்வது" வணங்கத் தயாராகணும்.

நந்தி பகவான், கருடாழ்வார் முதலான தெய்வ வாகனங்கள் கிட்டே அனுமதி வாங்கிக்கிட்டு துவார கணபதி, துவார ஸ்கந்தனை வணங்கணும். அடுத்து துவாரபாலகர்கள் இருந்தா அவங்ககிட்டே மனதால அனுமதி கேட்டுட்டு, கருவறைக்குள் சென்று மூலவரை முழுமனதாக வணங்கணும். அங்கே உள்ள வழிமுறைகளை அவசியம் பின்பற்றுங்கள். மறந்தும் நந்திக்கு மூலவருக்கும் இடையே போகாதீர்கள்.

சில கோயில்கள்ல முதல்ல அம்பாளை தரிசிச்சுட்டு பிறகு சுவாமி தரிசிக்கிற முறை இருக்கும். அப்படி இருந்தால் அதைப் பின்பற்றுங்க. எக்காரணத்தை முன்னிட்டும் உங்க பழக்கம்னு எதையும் கோயில் நடைமுறைக்கு எதிரா எதையும் செய்யாதீங்க!

பெருமாள் கோயில்கள்ல முதல்ல தாயாரை தரிசனம் செய்துட்டு பிறகு பெருமாளை தரிசிக்கறது வைணவ மரபு. தாயார்தான் மனமிரங்கி பெருமாள்கிட்டே நமக்காக பரிந்து பேசுவாளாம். அப்படிப்பட்ட மரபு உள்ள கோயில்கள்ல வழிபாட்டு முறை தெரிஞ்சு வணங்கறது நல்லது.

மூலவரைத் தரிசித்ததும் பக்கத்துலயே அம்பாள் சன்னதி இருந்தா, அருகே சென்று வணங்குங்க. அடுத்து பிராகார தெய்வங்களை வரிசையாக கோஷ்டத்தில் உள்ளபடி (மாடங்கள்) கும்பிட்டு கோயில் பிராகாரத்தைச் சுற்றி வாங்க. ஞாபகம் இருக்கட்டும். கோயிலுக்குள்ளே எந்த தெய்வத்தையும் தனித்தனியா வலம் வரவேண்டியதில்லை. பிராகாரத்து சுற்றி வரும்போதே வலம் வர்ற மாதிரி அமைஞ்சிக்கற சன்னதிகளை சுற்றிவந்தா போதும்.

கடைசியா கொடிமரத்துக்கிட்டே வந்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரரும், பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும் செய்யறது அவசியம். அஷ்டாங்க நமஸ்காரம்னா, தலை, கைகள், காதுகள், மார்பு, கால்கள் ஆகிய ட்டு உறுப்புகள் (அங்கங்கள்) தரையில படற மாதிரி விழுந்து வணங்கறது. பெண்கள் செய்ய வேண்டியது கைகள், கால்கள், தலை ஆகிய ஐந்து உறுப்புகள் பதியும்படியான நமஸ்காரம்.
அடுத்து, கீழே சில நிமிடங்களாவது, கோயிலுக்குள்ளேயே அமர்ந்து இறைவன் துதிகள், தெய்வத்தின் நாமாளிகள்னு தெரிஞ்சதை, சொல்லுங்க. ஒருபோதும் தேங்காய் முதலான பிரசாதங்களை சாப்பிட்டுவிட்டு குப்பை போடவோ, அவசியமற்ற விஷயங்களை, பேசவோ செய்யாதீங்க.

கோயில்ல தீபம் ஏற்றுணும்னு தீர்மானிச்சா, விளக்கு, எண்ணெய், திரி இவற்றோட தீப்பெட்டியையும் அவசியம் எடுத்துப்போங்க. பிறர் ஏற்றின தீபத்துல இருந்து உங்கள் விளக்கை ஏத்தறதையும், கோயிலுக்குள்ளே தீப்பெட்டியை இரவல் வாங்கறதையும் தவிர்ப்பதுதான் நல்லது.
குங்குமம், விபூதி முதலான பிரசாதங்களை வீணாக கண்ட இடங்கள்ல போடறதை தவிருங்க. பெருமாள் கோயிலானால் முதல்ல தீர்த்தம் தந்து, சபாரி சாத்தி, பிறகு துளசி தருவாங்க.

தீர்த்தத்தை கீழே சிந்தாம் வாங்கி, சத்தமாக உறிஞ்சாம அருந்துங்க. சிறிதளவு தலையில தடவிக்குங்க. துளசியை வாங்கி காதுல செருகிக்கறதும் சிறிதளவு உட்கொள்வதும் பெரியவர்களோட பழக்கம். ஆனா, துளசியை தேவைக்கு அதிகமாக வாங்கி கீழே இறையும்படியோ வீட்டுல அநாவசியமாகக் கிடக்கும்படியோ போடாதீங்க. தாயார் சன்னதியிலதான் குங்கும் தருவாங்க. நரசிம்மர் சன்னதியில குறிப்பிட்ட தினங்கள்ல பிரத்யேக பூஜை செய்து தீவினைகள் நீங்கள் தீர்த்தத்தை முகத்துல தெளிச்சுவிடுவாங்க. இந்த மாதிரி ஒவ்வொரு கோயில்லயும் உள்ள பித்யேக பூஜை பிரார்த்தனையைப்பற்றி கேட்டுத் தெரிஞ்சுவைச்சுக்குங்க. உங்களுக்கும் உதவலாம், பிறருக்கும் சொல்லலாம்.

கோயிலுக்குப் போயிட்டு வந்ததும் அல்லது வீட்டுலயே பூஜைகளை செய்ததும், உடனே பலன் கிடைக்கும்னு அவசரப்படாதீங்க. ஆண்டவனுக்கு உங்களுக்கு என்ன தேவை அதை எப்போ கொடுத்தா நல்லதுன்னு நிச்சயம் தெரியும். உங்க வேண்டுதலை சரியான சமயத்துல நிறைவேற்றி உங்கள் வாழ்க்கையை சந்தோஷம் நிறைஞ்சதா ஆக்குவார். நம்பிக்கையோட கும்பிடுங்க. நல்லதே நடக்கும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE