இறைவன் : மாசிலாமணீசுவரர்
இறைவி : கொடியிடை நாயகி
விருட்சம் : முல்லைக்கொடி
தீர்த்தம் : சுப்ரமண்ய தீர்த்தம்
கல்யாண தீர்த்தம்
ஆகமம் : சிவாகமம்
ஒற்றியூர் தலத்திலிருந்து ஆரூர் நோக்கிப் புறப்பட்ட சுந்தரர் ஒற்றியூர் எல்லை தாண்டியதும் கண் பார்வை இழந்தார். தம்பிரான் தோழர் தன் கண் பார்வை இழந்த பிறகு முதலில் வணங்கிய திருத்தலம் அருள்மிகு கொடியிடை நாயகி உடனுறை மாசிலாமணீசுவரர் திருக்கோயில் ஆகும் .தனது ஒவ்வொரு பாடலிலும் இத்தல ஈசனை "படுதுயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே" என்று விண்ணப்பம் செய்கின்றார் சுந்தரர்.
ஆவடி ரயில் நிலையத்தி லிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இத் திருத்தலம். முல்லைக்காடாய் இருந்த இப்பகுதியில் தொண்டை மண்டல மன்னன் தன் வீரர்களுடன் வேட்டையாட வந்துள்ளான். அப்போது அவனுடைய யானையின் காலில் முல்லைக்கொடி சிக்கிக் கொண்டது. மன்னன் யானையிலிருந்து கீழே இறங்கி தன் வாளால் முல்லைக் கொடியை வெட்டினான். அவ்வாறு வெட்டும்போது முல்லைக் கொடியினுள் மறைந்திருந்த லிங்கத் திருமேனியின் மீது மன்னனின் வாள்பட்டு ரத்தம் பீறிட்டது.
முல்லைக் கொடிகளை அகற்றிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது. லிங்கத் திருமேனியின் மீது வெட்டுண்ட இடமும் தெரிந்தது. அஞ்சி நடுங்கிய மன்னன் தனது செயலுக்குத் தம்மை மன்னித்தருளுமாறு வேண்டியதுடன் ஈசனுக்கு ஒரு திருக்கோயிலையும் அமைத்தான்.
ஈசனின் லிங்கத் திருமேனியின் மீது வெட்டுப்பட்டதால் இறைவனுக்கு மாசு (வடு) ஏற்பட்டுவிட்டதே என்று வருந்திய மன்னனின் முன்பு காட்சி கொடுத்த ஈசன், "மன்னரே! வருந்த வேண்டாம். வெட்டுப்பட்டாலும் தாம் மாசு இல்லாத தூய மணியாகவே அருள்பாலிப்போம்," என்று கூறி அருள்புரிந்தார். இதனால் இந்த ஈசனுக்கு மாசிலாமணீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.
தற்போது வட திருமுல்லைவாயில் திருத்தலத் தில் கருவறையில் உள்ள லிங்கத் திருமேனியின் சிரசில் வெட்டுப்பட்ட வடு தற்போதும் காணப்படுகின்றது. தொண்டை மண்டல மன்னன் போருக்குச் சென்றபோது இத்தல ஈசன் மாசிலாமணீசுவரப் பெருமானை வணங்கிய பின் போருக்குச் சென்று வெற்றி பெற்றதாகவும் மன்னனுக்குத் துணையாக ஈசன் தனது வாகனமான நந்தி எம்பெருமானை அனுப்பிய தாகவும் இத்தலத்தின் வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தலத்தின் நந்தி எம்பெருமான் சுவாமியை நோக்கி இல்லாமல் எதிர் திசையை நோக்கி இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மாசிலாமணீசுவரர் இத்தலத்தில் தீண்டாத் திருமேனியராக அருள் பாலிக்கின்றார். இந்த லிங்கத்தின் மீது ஒரு சிறிய லிங்கம் காணப்படுகின்றது. மாசிலாமணீசுவரருக்கு நிர்மல மணீசுவரர், பாசுபதேசுவரர், அகளங்க ரத்னேசுவரர், முல்லை அழகர், பிரம்ம நாதேசுவரர் யதிகா பரமேசுவரர், ஐராவதேசுவரர், சுமத்தியாபதீசுவரர், மாலதிவனேசுவரர், வில்வேசுவரர் மற்றும் சம்பகேசுவரர் என்ற திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.
ஈசனின் சிரசில் வெட்டுப்பட்ட காயம் இருக்கும் இடத்தில் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு செய்யப்படுகின்றது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் காலங்களில் வெந்நீர் அபிஷேகம் மட்டுமே செய்யப்படுகின்றது. அப்போதும் சந்தனம் களையப்படுவதில்லை.
சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தின் போது இரண்டு நாட்களுக்கு மட்டும் இறைவன் சந்தனக் காப்பின்றி சுய திருமேனியுடன் காட்சி தருகின்றார். இந்த இரு நாட்களில் ஈசனை வழிபடும் அன்பர்கள் சகல விதமான நன்மைகளையும் பெற்று உயர்வடைவார்கள் என்ற நம்பிக்கை அன்பர்களிடையே உள்ளது.
சுவாமிக்கு முன்னால் தொண்டை மன்னன் அசுரர்களிட மிருந்து எடுத்து வந்த இரு எருக்கந் தூண்கள் பூண்கள் இடப்பட்டு உள்ளன.
ஒரு பாதரச லிங்கத்தை தனிச் சன்னதியில் வைத்து வழிபாடு செய்கின்றனர். இத்தலத்தில் நவ கோள்களின் நாயகனாக ஈசன் அருள்பாலிப்பதால் நவக்கிரகங்களுக்கு என தனிச் சன்னதியில்லை. சூரியன் மட்டும் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கின்றார்.
கொடியிடை நாயகி
இத்தலத்தின் அம்பிகையான கொடியிடை நாயகி கொடி போன்ற அழகிய இடையுடன் காட்சி தருவதால் இவருக்கு "கொடியிடை நாயகி" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இந்த அம்பிகைக்கு லதா மத்தியாம்பாள், சித்ரமத்ய நாயகி, மனோ பிரம்மணி நாயகி, அகளங்க ரத்னேசுவரி, கொடியிடையம்மை என்ற திருநாமங்களும் வழங்கப்படுகின்றன.
மீஞ்சூருக்கு அருகில் உள்ள மேலூரில் அருள்பாலிக்கும் திருவுடை நாயகியும், சென்னை திருவொற்றியூரில் அருளும் வடிவுடைய நாயகியும், திருமுல்லைவாயில் கொடியிடை நாயகியும் ஒரே சிற்பியால் வடிக்கப்பட்ட திருமேனி என்றும் வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி நாட்களிலும் இம்மூன்று அம்பிகைகளின் தரிசனத்தை ஒரே நாளில் முறையே காலை நண்பகல் மற்றும் மாலையில் தரிசிப்பது சிறப்பு என்று கூறப்படுகின்றது.
இந்த மூன்று திருத்தலங் களிலும் அருள் பாலிக்கும் அம்பிகைகள் திரி சக்திகளாக விளங்குகின்றனர். கொடியிடை நாயகி கிரியா சக்தியாகவும் திருவுடை நாயகி இச்சா சக்தியாகவும் வடிவுடை நாயகி ஞான சக்தியாகவும் அருள் பாலிப்பதாக இத்தலங்களின் வரலாறு தெரிவிக்கின்றது.
மூலவர் சன்னதியின் மீது கஜபிருஷ்ட (யானையின் பின்பகுதி போன்று) விமானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தலத்திற்கு அருகில் பெரிய மணல்வெளி உள்ளது. பாலாற்றின் கிளை நதி இத்தலத்தின் வழியாகச் சென்று தற்போது வறண்டு உள்ளது என்பதை தேவாரப் பாடல் மூலம் அறிய முடிகின்றது. சிவ சேத்திர விளக்கம் என்னும் நூலும் கீழ்க்கண்ட பாடல் மூலம் இச்செய்தியைத் தெரிவிக் கின்றது.
"வடமுல்லைவாயில் வரு பசுபதி யார் படவல்குல் முல்லையங் கோதை பாலாறு"
இத்தலம் கிருத யுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதா யுகத்தில் வில்வ வனமாகவும் துவாபர யுகத்தில் செண்பக வனமாகவும் திகழ்ந்து கலியுகத்தில் முல்லை வனமாக உள்ளது.
முருகப்பெருமான், காமதேனு, வசிட்ட முனிவர், அருணகிரிநாதர், சுந்தரர், வள்ளல் பெருமான் ஆகியோர் இத்தலத்தில் வழிபாடுகள் செய்து பேறுகள் பெற்றுள்ளனர்.
இத்தலத்தில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான் மீது அருணகிரிநாதப் பெருமான் திருப்புகழ் பாடல்கள் பாடி வழிபாடு செய்துள்ளார்.
"வாசனை மிக்க மல்லிகை வனத்தில் சோலைகளும் பூந்தோட்டங்களும் நீர்நிலைகளும் சூழ்ந்து இயற்கை எழிலுடன் அமைந்துள்ள வட திருமுல்லைவாயிலில் உள்ள பெருமாளே" என்று முருகனைப் பாடி நெஞ்சம் நெகிழ்ந்துள்ளார் அருணகிரிநாதர்.
இத்திருக்கோயிலில் சோழ மன்னர்களான பரகேசரிவர்மன், உத்தமசோழன், முதலாம் ராசேந்திர சோழன்,மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் இராசராசன் ஆகிய மன்னர்களின் காலக் கல்வெட்டுகளும் பாண்டிய மன்னரான ஜடாவர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி பாண்டிய தேவன் காலக் கல்வெட்டும் விஜயநகர மன்னர்களின் காலக் கல்வெட்டுகளும் இத்தலத்தில் உள்ளன.
இத்தலமான "வட திருமுல்லைவாயில் ஜெயங்கொண்ட சோழமண்டல த்துப் புழல் கோட்டத்து கானப் பேரூர் நாட்டிற்கு" உட்பட்டிருந்தது என்பதை ஜடாவர்மன் சுந்தரபாண்டிய தேவனின் பத்தாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு தெரிவிக்கின்றது. புழல் கோட்டத்தில் விக்ரம சோழ வளநாடு என்றும் இப்பகுதிக்குப் பெயர் விளங்கியுள்ளது.
சென்னை ஆவடி சாலையில் வடதிருமுல்லைவாயில் திருத்தலம் உள்ளது. ஆவடி ரயில் நிலையத்திலிருந்தும் பேருந்து மூலமாக இத்தலத்திற்குச் செல்லலாம். மேலும் விவரங்களுக்கு 044- 26376151 என்ற தொலைபேசி எண்ணில் இத்திருக்கோயிலைத் தொடர்பு கொள்ளலாம்.