அருள்மிகு வரமுக்தீசுவரர் திருக்கோயில், அரியத்துறை.

By நந்தா

இறைவன் : வரமுக்தீசுவரர்
இறைவி : மரகதவல்லி
தீர்த்தம் : பிரம்ம ஆரண்ய நதி

படைப்புக் கடவுளான பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்ட நதி "பிரம்ம ஆரண்ய நதி" யாகும். இந்த நதி பழவேற்காடு அருகில் கடலில் சங்கமிக்கிறது. இந்த நதிக்கரையில் பல முனிவர்கள் தவம் செய்து ஈசனிடம் ஏராளமான வரங்களைப் பெற்றுள்ளனர். இந்த முனிவர்களின் திருக்கரங்களால் இவர்கள் தவம் செய்வதற்கு ஏதுவாகப் பல லிங்கத் திருமேனிகள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. இந்த நதிக்கரையில், இந்த முனிவர்களால் அமைக்கப்பட்ட திருத்தலங்கள் "பஞ்ச பிரம்மத் தலங்கள்" என்று போற்றப்படுகின்றன.

இவ்வாறு அமைக்கப்பட்ட பஞ்ச பிரம்மத் தலங்களில் ஒன்றுதான் சக்தி வாய்ந்த அரியத்துறை வரமுக்தீசுவரர் திருக்கோயி லாகும். பஞ்ச பிரம்மத் தலங்கள் என்று வணங்கப்படும் இத்தலங்கள் அனைத்தும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த திருத்தலங்களாகும்.

பிரம்ம ஆரண்ய நதிக்கரையில் பல்லாண்டுகள் தவம் செய்து இந்த லிங்கத் திருமேனிகளுக்கு முனிவர்கள் மந்திர சக்தியைச் சேர்த்துள்ளதால் இத்தலங்கள் அனைத்தும் அதீத சக்தி வாய்ந்த திருத்தலங்களாகத் திகழ்கின்றன. முனிவர்கள் அமைத்த இத்தலங்களில் ஆவுடையார் அனைத்தும் சதுர வடிவில் அமைந்த மூர்த்தங்கள் ஆகும்.

அரியத்துறை திருத்தலத்தில் உள்ள ஈசனின் லிங்கத் திருமேனி உரோமச முனிவரால் அமைக்கப்பட்டதாகும். பின்னர் முகுந்த முனிவரும் இத்தலத்தில் 100 ஆண்டுகளுக்கு மேல் தங்கி இருந்து வரமுக்தீசுவரரை வணங்கியுள்ளார். உரோமச முனிவரும் முகுந்த முனிவரும் வழிபட்ட இத்தலம் ராமாயண காலத்திற்கு முந்தைய தலம் என்று கூறப்படுகின்றது. தம்மை நாடி வந்து தரிசிக்கும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை வேண்டியவாறு உடனடியாக அளிப்பதால் இந்த ஈசனுக்கு வரமுக்தீசுவரர் என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் இத்தலத்தில் வெளிப் பிராகாரம் 32 கோட்டங்களுடன் திருமேனிகள் அமைத்து வழிபாடுகள் நடைபெற்றதாகவும் அவற்றில் தற்போது சில முக்கியத் திரு மேனிகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு 32 கோட்டங்கள் உள்ள அமைப்பு உத்தமபட்ச அமைப்பு என்று போற்றப்படுகின்றது. தமிழகத்தில் ஒரு சில பெரிய திருத்தலங்களில் மட்டுமே உத்தம பட்ச அமைப்புகள் உள்ளன.

தற்போது இத்தலத்தில் தேவகோட்டத்தில் விநாயகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, விஷ்ணு மற்றும் துர்க்கை ஆகிய திருமேனிகள் உள்ளன.

பிரம்ம ஆரண்ய நதி பாயும் இப்பகுதி இயற்கை எழில் சூழ எங்கும் பசுமை படந்து ரம்மியமாகக் காட்சியளிக்கின்றது. திருக்கோயிலின் வெளிப்புறத்தில் மரங்களின் அரசனாகப் போற்றப்படும் அரச மரங்கள் உள்ளன. கிருஷ்ண பரமாத்மா இத்திருக்கோயிலில் இந்த அரச மரத்தின் வடிவில் எழுந்தருளியிருப்பதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது.

நதிக்கரையின் ஓரத்தில் ஒரு குழி ஒன்று உள்ளது. இக்குழியில் வருடம் முழுவதும் நீர் சுரந்து கொண்டே உள்ளது. இந்த நீர் கங்கை நதியிலிருந்து வருவதாக பக்தர்களிடைய நம்பிக்கை உள்ளது. இத்தலத்தின் வரலாறும் இதனைத் தெரிவிக்கின்றது. இதனால் இத்தலம் "காசியை விட வீசம்" அதிகமான தலமாகப் போற்றப்படுகின்றது. "அரியத்துறை கங்கை மூழ்க பலன் கண்டேன்" என்ற நாட்டுப்புறப் பாடலும் இப்பகுதியில் இன்றும் பாடப்படுகின்றது.

கலியுக தெய்வம் காஞ்சி மாமுனிகள் 1965 ஆம் ஆண்டு இத்தலத்திற்கு வருகை தந்து கங்கை என்று போற்றப்படும் இந்த நீரூற்றில் புனித நீராடியது சிறப்பான நிகழ்வாகும்.

முகுந்த முனிவருக்கு ஈசன் இத்தலத்தில் காலபைரவர் ஆக திருக்காட்சி அளித்ததாக தல வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக ஒரு காலபைரவரும் பிற்காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு காலபைரவரும் திருக்காட்சி தருகின்றனர்.

மிகவும் புராதனம் வாய்ந்த இத்தலத்தில் நவக்கிரகங்க ளுக்குத் தனிச்சன்னதி இல்லை. நாக தோஷத்திற்குச் சிறந்த பரிகாரத்தலமாக இத்தலம் திகழ்வதால், கருவறையில் நாகம் பல்லி, தவளை மற்றும் மீன்களின் சிற்பங்கள் பொறிக்கப்பட் டுள்ளன. இத்தலத்தின் மூலவரான வரமுக்தீசுவரரும் அம்பிகை மரகதவல்லியும் பச்சை நிறக் கல்லினால் ஆன திருமேனி கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

தனது தேவியர் ருக்மிணி மற்றும் சத்திய பாமாவிற்காக தேவலோகத்தில் உள்ள நந்தவனத்தில் பூத்திருந்த பாரிஜாத மலரை இந்திரனின் மனைவி இந்திராணியின் அனுமதியின்றி பறித்ததால் கிருஷ்ண பரமாத்மா ஆயிரம் ஆண்டுகள் பூவுலகில் மரமாக இருக்கும்படி சாபம் பெற்றதாகவும் பின்னர் சாப விமோசனம் பெற்று அரியத்துறை திருத்தலத்தில் அரச மரமாக மாறியதாகவும் தல வரலாறு தெரிவிக்கின்றது.

பிரதோஷ வேளையில் வழிபாடு செய்த குரங்கின் முற்பிறவி வினைகள் நீங்கி காஞ்சிபுரத்தை ஆளும் சோழ மன்னராக சாப நிவர்த்தி அடைந்துள்ளதையும் தல வரலாறு தெரிவிக்கின்றது.

விருத்தாசூரனைக் கொன்ற இந்திரன், அவனது உடலைப் பல்வேறு துண்டுகளாக்கி பூவுலகில் எரிந்துள்ளார். அத்துண்டில் ஒன்று அகத்திய முனிவர் மீது விழ, இந்திரனுக்கு பிரம்ம(ஹ)கத்தி சாபம் பற்றிக்கொண்டது. இந்திரன் இத்தலத்தில் வழிபாடு செய்து சாபம் நீங்கப்பெற்றதையும் தல வரலாறு கூறுகின்றது.

மன்னன் சித்திரசேனனுக்கு மகளாகப் பிறந்த மரகதவல்லியே இத்தல ஈசனை மணவாளனாக அடையும் பேறுபெற்றதையும் தலபுராணத்தின் மூலம் அறிய முடிகின்றது. வைர வியாபாரி ஒருவர் இங்கு வழிபட்டு பலன் பெற்றதால் அந்த அன்பர் மரகதவல்லிக்கு தனிச்சன்னதி அமைத்துத் திருப்பணி செய்துள்ளார்.

சிறந்த பிரார்த்தனைத் தலம்

இத்தலத்தில் வழிபாடுகள் செய்வதால் மரண பயம் விலகும். திருமணத் தடை நீங்கி விரைவில் நல்ல மணவாழ்க்கை அமையும். இத்தலத்தில் நடைபெறும் பிரதோஷ விழா அன்பர்களின் பல தோஷங்களை நீக்கும் சிறப்பு வழிபாடாக உள்ளது. முற்பிறவியில் செய்த பாவங்கள் பித்ரு சாபங்கள், நாக தோஷம் ஆகியவை நீங்க வழிபாடு செய்ய வேண்டிய பரிகாரத்தலமாக இத்தலம் விளங்குகின்றது. இத்தலத்து அம்பிகை தனது இடது திருப்பாதத்தை முன் வைத்து பக்தர்களை நோக்கி வரும் திருக்கோலத்தில் அருள்பாலிப்ப தால் இந்த அன்னையை வழிபடப் பல தடைகள் விலகும்.

அரிய சக்தி வாய்ந்த திருத்தலமாக விளங்கும் இந்த அரியத்துறை திருத்தலத்தில் பக்தர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையேனும் சென்று வணங்க வேண்டியது அவசியம் ஆகும்.

இத்திருக்கோயில் காலை 7.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

சென்னையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது அரியத்துறை வரமுக்தீசுவரர் திருத்தலம்.

மேலும் விவரங்களுக்கு 98948 21712 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE